தின்றால் திண்டாட்டம்தான்..! - சென்னை புறநகர் ரயில்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற தின்பண்டங்கள்

By பெ.ஜேம்ஸ்குமார்


தாம்பரம்: சென்னை புறநகர் ரயில்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு - திருமால்பூர், வேளச்சேரி - கடற்கரை மற்றும் சென்னை சென்ட்ரல் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் லட்சக்கணக்கான பயணிகள், பணிக்கு சென்று திரும்புகின்றனர். இந்த ரயில்களில் பிஸ்கெட், சமோசா, பாப்கார்ன், பானிபூரி உள்ளிட்ட பலதரப்பட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை தரமாக தயாரிக்கப்பட்டவையா என்பது கேள்விக்குறியே. பயணிகளும் அவற்றை வாங்கி உண்கின்றனர். பெரும்பாலும் இவை சுகாதாரமற்ற முறையிலும், தரமற்றதுமாகவே தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பல்வேறு பணிச்சுமைகளால் சோர்வாக ரயிலில் பயணிப்போர், பசிக்கும் நேரம் இவற்றை வாங்கி உண்கின்றனர். இதனால் பயணிகளின் உடல்நலன் கேள்விக்குறியாகிறது.

பயணிகளின் உடல்நலன் கருதி ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை சோதனை செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை பயணிகளுக்கு வழங்க ரயில்வே நிர்வாகமும், உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து, மின்சார ரயில்களில் விற்கப்படும் தின்பண்டங்கள், உணவு பொருட்களின் தரம் மற்றும், சுகாதாரம் குறித்து ௮வ்வப்போது அதிரடி சோதனைகள் செய்ய வேண்டும். தரமற்ற பொருட்களை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்து, ரயில் பயணியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியன் கூறியது: புறநகர் ரயில்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் தரமற்றதாக இருப்பதால், அதை வாங்கிச் சாப்பிடும் பயணிகள், பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகம், ரயில் பெட்டிகளில் தரமற்ற உணவு பண்டங்கள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும், ரயில் பெட்டிகளில் உணவு பண்டங்கள் விற்பனை செய்பவர்களுக்கு உரிமத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.

என்னென்ன உணவுகளை விற்கலாம் என்று நிபந்தனைகள் விதிக்க வேண்டும், உரிமம் பெற்ற நபர் ரயிலில் வியாபாரம் செய்யும்போது, அவர்களுக்கான அடையாள அட்டையை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும், என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதனை ரயில்வே நிர்வாகம் அடிக்கடி தணிக்கை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தின்பண்டங்கள், உணவு பொருட்களை விற்பவர்கள் யார், யார் என்பதை உறுதி செய்ய முடியும். இதனால் தரமற்ற உணவு பொருட்களை விற்பவர்கள் யார் என அறிந்து, அவற்றை பயணிகள் தவிர்த்து விடலாம். தரமற்ற தின்பண்டங்கள், உணவுகளால் ஏற்படும் தீய விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பாக, இம்மாதிரி நடைமுறைகளை கையாண்டு தடுப்பது அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறியது: ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு செய்து வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்கின்றனர். தரமற்ற பொருட்களே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகின்றன. இவர்கள் லாப நோக்கு கொண்டு மட்டுமே செயல்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. காரணம், நடவடிக்கை எடுக்க வேண்டிய ரயில்வே போலீஸார் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.

வியாபாரிகள் பயணிகளுக்கு இடைஞ்சலாக இருப்பது, தரமற்ற பொருள் விற்பனை செய்வது தொடர்பாக புகார் செய்தால், புகார் செய்பவர்களை மிரட்டும் வகையில் போலீஸார் பேசுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வியாபாரம் செய்வதே குற்றம்தான்: இதுகுறித்து விசாரித்தபோது ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறியது: ரயிலில் வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி செயல்படும் வியாபாரிகள் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர். ரயில் பயணிகளின் ஆரோக்கியத்தை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE