விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. தற்போது இம்மாவட்டம் 30-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றையை பார்வை...
விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோயில். வட தமிழகத்தின் அம்மன் வழிபாட்டில் அங்காளம்மன் முக்கிய இடம் வகிக்கிறார். மாதம் தோறும் அமாவாசை நாளில் இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அமாவாசை ஊஞ்சல்உற்சவம், மாசி தேர்த்திருவிழா, வாரம் தோறும்வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் சிறப்பு தரிசனம் என எப்போதும் இந்தக் கோயிலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த சிறப்பு நிகழ்வுகளுக்காக வரும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை என வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இயக்குகின்றன. இதைத் தாண்டி கோயில் நிர்வாகத்தால் எந்த ஒரு சிறப்பு ஏற்பாடுகளும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக செய்யப்படுவதில்லை.
பிற ஊர் கோயில்களுக்கு சென்று வருவோர், மேல்மலையனூருக்கு வந்து செல்லும் போது, அங்குள்ள வசதிகளை மனதளவில் ஒப்பிட்டு ஒருவித சலிப்புடனே இங்கிருந்து திரும்புகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து தொடர்ந்து கூறப்படுவதும், அதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கோயில் இயங்கி வருவதும் பக்தர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கோயிலின் உள்ளே உற்சவர் தரிசனம் செய்யும் இடத்திலேயே, பெண்களிடம் திருடர்கள் செயினை பறித்துச் சென்றனர்.
இதுபோல் கோயில் வளாகத்தில் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களில் ஒரு பகுதியினர் நேர்த்திக்கடனுக்காக இரவு தங்குகின்றனர். இதற்கான விடுதி வசதிகள் எதுவும் கிடையாது. தங்குவதற்கு இடமின்றி சாலை ஓரங்களில் அசுத்தமான இடங்களில் குழந்தைகளுடன் பக்தர்கள் படுத்திருக்கும் பரிதாப நிலை கோயில் விழா காலங்களில் சர்வ சாதாரணமாக காண முடிகிறது.
கடந்த 2008-ம் ஆண்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்தனர். அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் கோயில் வளாகம் முழுவதும் கோயில் நிர்வாகம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், மேல்மலையனூர் முழுவதும் காவல்துறை சார்பில் 87 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. ஆனாலும் குற்றச்சம்பவங்கள் தொடரவே செய்கின்றன.
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடி தண்ணீர், கழிப்பறை, தங்கும் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மிகமிக சொற்பமான அளவில் உள்ளது. அதுவும் தரமாக இல்லை. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே வசதிகளே இன்றளவும் நீடிக்கிறது. மேல்மலையனூர் பேருந்து நிலையத்தை புனரமைக்க சுற்றுலாத்துறை ரூ. 34 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கிறது. மாதம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும், வாரத்தின் இரு நாட்களில் ஏராளமானோர் வந்து செல்லும் ஒரு முக்கிய கோயிலின் பேருந்து நிலையம் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.
அங்காளம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லை என்று கூறி, சில ஆண்டுகளுக்கு முன் செஞ்சி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதை சரி செய்யாத வரையில் கோயிலில் விழாக்கள் மற்றும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த காலஅவகாசம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து நீதிமன்றம் இடைக்கால தடையை நீக்கியது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அங்காளம்மன் கோயிலின் அடிப்படை வசதிகள், தங்கும் விடுதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆட்சிகள் தோறும் இம்மாதிரியான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் கோயிலுக்கான வசதிகள் மேம்படுத்தப்படவே இல்லை. அரசு தரப்பில் தற்போதைய நிலை குறித்து கேட்டதற்கு, “தற்போது இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் 20 ஏக்கர் மட்டுமே உள்ளது. மேலும் விரிவுபடுத்த சுமார் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்ட முன்வரைவு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கின்றனர்.
அங்காளம்மனை தரிசிக்க வந்து செல்லும் பக்தர்களில் விவரம் அறிந்தவர்கள் கோயிலின் சிக்கல் குறித்து நம்மிடம் பேசினர். “மிகமிக எளிய கிராம மக்கள் மிக அதிகமானோர் வந்து செல்லும் கோயில் இது.
முன்பைக் காட்டிலும் மிக அதிகமான வருவாய் கோயிலுக்கு வருகிறது. ஆய்வுக்கு வரும் அமைச்சர்களுக்கு கோயில் நிர்வாகம் மேள, தாளங்களுடன் பூரணகும்ப மரியாதை அளிப்பதும், அதை அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டு, பின்பு வழிபட்டுச் செல்வதுமாக அவர்களின் ஆய்வு முடிந்து விடுகிறது.உண்டியலில் வசூலாகும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அரசு அதிகாரிகளுக்கு செல்கிறது.
ஆய்வைத் தொடர்ந்து கோயில் வளர்ச்சிக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இந்தக் கோயில் மீது அக்கறை கொண்டவர்களைக் கொண்டு ஒரு கமிட்டி அமைத்து, கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டும் ” என்று தெரிவிக்கின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கோயிலின் உதவி ஆணையர் ஜீவானந்தத்திடம் பேசினோம். “முன்பு போல் இல்லாமல், தற்போது பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் மட்டுமே செலுத்த வேண்டும்.
கோயிலுக்கு வெளியே 100 மீட்டர் இடைவெளியில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு தேவையான கூடுதல் வசதிகளை தற்போது செய்ய இயலாது. கோயில் விரிவாக்கத்துக்குப் பின்பு பக்தர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” என்று தெரிவித்தார்.
அங்காளம்மனுக்கு வந்து குவியும் நேர்த்திக் கடனில் அள்ளிக் கொடுக்க வேண்டாம்; கிள்ளிகொடுத்தால் போதும்; இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து விடலாம். ஆனால், ஏனோ அதைச் செய்ய மறுத்து வருகின்றனர். இதுவே இங்கு வரும் பக்தர்களின் பெரும் மனக்குறையாக இருக்கிறது.
இதே போல் விழுப்புரம் மாவட்டத்தின் மீதான அக்கறை கொண்ட நமது பார்வையுடன், பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் சேர்ந்து, ‘விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்.. பெறத் தவறியதும்..’ அடுத்தடுத்த நாட்களில் தொடரும்.
முந்தைய அத்தியாயம்: விழுப்புரம் 30 | திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான ரயில் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதா?
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
21 hours ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
21 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago