நறுமணம் கமழும் பூஜை பொருள் தயாரித்து தொழில்முனைவோர் ஆன மதுரை பெண்!

By என்.சன்னாசி

மதுரை: நறுமணம் கமழும் பூஜைப் பொருள் தயாரித்து தொழில்முனைவோராகி சாதித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர். கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டால் கவலை இல்லாமல் வாழலாம் என்பதற்கேற்ப பெண்கள் பலரும் திருமணத்துக்குப் பிறகும் முயன்று தொழில் முனைவோராகி பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர்.

அதைப் போல, மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா தனது கணவர் வெங்கடேசன் துணையோடு ‘ஸ்ரீகாதம்பரி ’ என்ற பெயரில் பஞ்சகவ்ய பன்னீர், ரோஸ் வாட்டர், தசாங்க பவுடர், சாண்டல் சோப், கப் சாம்பிராணி (3 நறுமணங்கள்), அபிஷேக மஞ்சள் பொடி, அபிஷேக திரவியப் பொடி, அக்தர் (12 நறுமணங்கள்) சந்தனப் பவுடர், சந்தன வில்லை, கேரள சந்தனம், ஈர சந்தனம், தாழம்பு குங்குமம், ஜவ்வாது, கார்த்திகை தீப விளக்குகள், சந்தனாதி தைலம், மாட்டுச் சாணத்திலான பஞ்ச கவ்ய விளக்குகள், வண்ண மெழுகுவர்த்தி, சூடம் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்கள் தயாரிப்புகளை மதுரை மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை மற்றும் பிற பகுதிகளுக்கும் தேவையின் அடிப்படையில் விநியோ கித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜெயசுதா கூறியதாவது: பிளஸ் 2 வரை படித்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பச் செலவு பற்றாக் குறையைச் சமாளிக்க சிறிய அளவில் தொழில் தொடங்கத் திட்டமிட்டேன். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளதால் வழிபாட்டுக்கான பூஜைப் பொருட்களை தயாரிக்கத் தொடங்கி முதலில் அக்கம், பக்கத்தினருக்கு கொடுத்தேன். இதற்கு வரவேற்பு அதிகரித்ததால் மதுரை நகரில் பல்வேறு கடைகளுக்குச் சென்று எனது தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்தேன். சில கடைகளின் முன்பும் கண்காட்சிகளில் அரங்கு அமைத்து எங்களது தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்து ஆர்டர் பெற்றேன்.

எங்கள் தயாரிப்புக்கு காலாவதி நாள் கிடையாது. கோயில்களில் விளக்கு பூஜை, சிறப்பு அபிஷேகம், வீடுகளில் சிறப்பு பூஜைகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கிறோம். பஞ்சகவ்ய பன்னீரை வீடுகளில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை தெளித்தால் நறுமணமாக இருக்கும், கிருமி நாசினியாகவும் இருக்கும்.ஈரச் சந்தனத்தை நெற்றியில் வைத்தால் குளுமையாக இருக்கும்.

இது போன்ற பொருட்களை ஆவாரம்பூ , வெட்டிவேர், ரோஜா இதழ் போன்ற மூலப் பொருட்களைப் பக்குவமாக கலந்து தயாரிக்கிறோம். தற்போது, மதுரையிலுள்ள முக்கிய வணிக வளாகம் உட்பட பல்வேறு கடைகள் மூலம் ஆர்டர் அதிகரிப்பதால் கூடுதலாக தயாரிக்கிறோம். குடும்பத்தினர் தவிர, மேலும், 5 பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம். எங்களது தயாரிப்புகள் ஆன்மிகத்துக்கு பயன்படுகிறது என்ற ஆத்ம திருப்தியுடன் இத்தொழிலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்
ளோம். இவ்வாறு அவர்கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE