உ.பி.யில் பள்ளிக்கு வராத மாணவி: வீட்டுக்கே சென்று பாடம் நடத்திய ஆசிரியர்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசம் ஜான்சி மாவட்டம், லகாரா கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளிசெயல்படுகிறது. இந்தப் பள்ளியில் அமித் வர்மா (43) என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் நடத்தும் 4-ம் வகுப்பில் 33 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் மீனாஎன்ற மாணவி படிப்பை பாதியில் நிறுத்தினார்.

இதுதொடர்பாக மீனாவின் பெற்றோரிடம் ஆசிரியர் அமித் வர்மா பேசினார். வீட்டு வேலைகளை செய்ய வேண்டியிருப்பதால் மீனாவை பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் அமித் வர்மா மாற்று வழியை கையாண்டார்.

அண்மையில் அவர் தனது வகுப்பின் அனைத்து மாணவ, மாணவிகளையும் அழைத்துக் கொண்டு மீனாவின் வீட்டுக்கு சென்றார். அந்த வீட்டு வளாகத்தில் மீனாவையும் அமர வைத்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அவர் பாடம் நடத்தினார். இந்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் மீனாவின் பெற்றோருக்கு அறிவுரை கூறி சிறுமி மீண்டும் பள்ளிக்கு செல்ல ஏற்பாடு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த கஜ்ராஜ் என்ற மாணவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெற்றோருடன் இணைந்து வேலைக்கு சென்று வந்தார். அந்த மாணவரும் தற்போது மீண்டும் பள்ளிக்கு செல்கிறார்.

இதுகுறித்து ஆசிரியர் அமித் வர்மா கூறும்போது, “எனது வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவியும், மாணவனும் கல்வியை தொடர வேண்டும் என்பதற்காக வீட்டுக்கே சென்று பாடம் நடத்தினேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE