திருமலை பாறை ஓவியங்கள் சேதம் - பாதுகாக்குமா தொல்லியல் துறை?

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலையில் பாறை ஓவியங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வருவதாகவும், அதை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலை கிராமம். இங்குள்ள மலைக்குன்றில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளன. அங்கு பறவை முகம் கொண்ட மனித உருவங்கள், விலங்கின் மீது மனிதன் அமர்ந்து வேட்டையாடுகிற காட்சி, கோட்டு உருவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன.

மேலும் கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த 2 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இயற்கையாக அமைந்த குகையில் சமணத்துறவிகள் தங்கிய கல் படுக்கைகள் உள்ளன. படுக்கைக்கு மழைநீர் வராதபடி பாறையின் மேற்புறம் தடுப்பு செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மலையில் 8-ம் நூற்றாண்டு முற்கால பாண்டியரின் குடைவரைக் கோயில், 13-ம் நூற்றாண்டு பிற்கால பாண்டியரின் கட்டுமானக் கோயில்கள் உள்ளன. கோயிலை சுற்றிலும் மலையில் 8 சுனைகள் உள்ளன. பெரிய சுனையில் நீர் எப்போதும் வற்றாது. தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலை, பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக உள்ளது.

இதைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாட்டினரும் அதிகளவில் வருகின்றனர். ஆனால், இங்குள்ள பாறை ஓவியங்களை சமூகவிரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து திருமலையை சேர்ந்த சமூக ஆர்வலர்அய்யனார் கூறுகையில், ‘‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருமலையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தொல்லியல்துறை அறிவித்து அறிவிப்பு பலகை மட்டும் வைத்தது.

அதன் பின்னர், எங்களது கோரிக்கையை ஏற்று இப்பகுதியை கண்காணிக்க ரூ.5,000 ஊதியத்தில் காவலாளியை நியமித்தனர். ஆனால், சரியாக ஊதியம் தராததால் அவரும் வருவதில்லை. இதனால் இங்கு சிலர் மது அருந்துவதோடு, பாறை ஓவியங்களை சேதப்படுத்துகின்றனர். அதை தடுக்க வேண்டும். மேலும் வழிகாட்டி (கைடு) நியமிக்கப்பட வேண்டும்’’ என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE