போச்சம்பள்ளி அருகே இரு கட்டிடங்களுக்கு இடையில் சிக்கிய நாய்க்குட்டி மீட்பு: நெகிழ வைத்த தாய் நாயின் பாசப் போராட்டம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே இரு வீடுகளின் கட்டிடங்களுக்கு இடையே சிக்கிய நாய்க்குட்டியை 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

போச்சம்பள்ளி அருகே வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரா. இவர் வளர்த்து வரும் நாய் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் குட்டிகளை ஈன்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் உத்திரா வீட்டின் கட்டிடம் மற்றும் அவரது வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டின் கட்டிடத்தின் இடையில் நாய்க் குட்டி ஒன்று சிக்கி வெளியில் வரமுடியாமல் திணறியது.

இதைப் பார்த்த தாய் நாய் தொடர்ந்து குறைத்ததோடு, அருகில் உள்ள தெருக்களிலும் குறைத்தபடி அங்கும், இங்கும் ஓடியது. நாயின் சப்தம் கேட்டு உத்திரா மற்றும் அருகில் உள்ளவர்கள் அங்கு வந்து குட்டி நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் நாய்க்குட்டியை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

நேற்று காலை வரை நீடித்த மீட்பு பணியின்போது, பெரிய பிளாஸ்டிக் குழாயை இரு கட்டிடங்களுக்கு இடையில் செலுத்தினர். அப்போது, நாய்க் குட்டி குழாயின் துளையில் நுழைந்த போது, குழாயை வெளியில் எடுத்து, குட்டியை நேற்று மதியம் 1 மணிக்கு, 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள், தீயணைப்பு வீரர்களை பாராட்டினர். மேலும், மீட்பு பணியின்போது அங்கு தொடர்ந்து சுற்றி வந்த தாய் நாயின் பாசப் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE