ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யும் அரும்பணியில் மதுரை இளைஞர்!

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ‘மரணமில்லா பெருவாழ்வு’ யாருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி இறக்கும் தருவாயில் இருப்போரின் ஆசை அவர்களின் நல்லடக்கமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட மனிதர்களின் ஆத்மா நற்கதி அடைவதற்கு மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உதவி வருகிறார்.

மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் ஆயுர்வேத மருத்துவமனை ஊழியரான இவர், ஆதரவற்றோர் இல்லங்களில் மரணம் அடையும் ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, மயான ஊழியர்களுக்கு உதவுவதை தனது வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறார்

மேலும் சாலையோரங்களில் ஆதரவின்றி மருத்துவத்துக்கும், உணவுக்கும் போராடும் ஆதரவற்றவர்களைக் கண்டால் கடந்து செல்லாமல் அவர்களிடம் விசாரிக்கிறார். குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களாக இருந்தால் அவர்களைச் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் பிடித்து ஆதரவற்றோர் இல்லங்களில் ஒப்படைக்கிறார். இதை அறிந்த ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துவோரும் அவருக்கு உதவி செய்கின்றனர்.

அதோடு, சாலைகள் மோசமாக இருந்தாலோ, சுகாதார சீர்கேட்டுடன் இருந்தாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சீரமைக்க வலியுறுத்துகிறார். அதன்பிறகும் சரி செய்யாவிட்டால் பத்திரிகையாளர்களை அணுகுகிறார்.

மேலும் ஆதரவற்ற இல்லங்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது , வசதியில்லாத ஏழைக் குழந்தைகளைப் படிக்க வைப்பது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.

மேலும் ஆதரவற்றோர் யாராவது உயிரிழந்தால் ஒரு மகனாக இருந்து அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்து வருகிறார். மதுரையில் கரோனா தொற்று தீவிரமான காலத்தில், நோயால் உயிரிழந்தோர் வீடுகளுக்குச் செல்லக்கூட உறவினர்கள் அச்சம் அடைந்தனர். அந்த நேரத்தில், இவர் துணிச்சலாக ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்தது கவனம் பெற்றது.

மேலும், மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தளவாடப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, பண்டிகை நாட்களில் அவர்களுக்கு புத்தாடைகள் வாங்கித் தருவது, பொக்லைன் உதவியுடன் மயானத்தைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் கூடல்நகரில் இருந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு பழைய துணிகளை அளித்தேன். அப்போது அங்கு ஒரு முதியவர் இறந்து விட்டார். ஆனால், அவரது தூரத்து உறவினர்கள் பணம் தருகிறோம். நீங்களே இறுதிக் காரியம் செய்து விடுங்கள் என்று சொல்லி விட்டனர். அப்போதுதான் நான் ஏன் அதுபோன்று ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என முடிவெடுத்து அப்பணியை தொடர்ந்து செய்து வருகிறேன் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE