இளம் பெண்களைக் கவரும் சின்னாளபட்டி சுங்குடி சேலைகள் - தீபாவளிக்காக குவியும் ஆர்டர்கள்

By பி.டி.ரவிச்சந்திரன்


திண்டுக்கல்: என்றும் மவுசு குறையாத சின்னாளபட்டி சுங்குடிச் சேலைகள், காலத்துக்கு ஏற்ப மாற்றத்துடன் இளம் பெண்களையும் கவரும் வகையில், பல வண்ணங்களில் தீபாவளி விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் சுங்குடிச் சேலை தயாரிப்பு என்பது பாரம்பரியமிக்க தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியில் சுங்குடி தயாரிக்கும் தொழிலே பெரும்பாலானோரின் வாழ்வாதாரமாக உள்ளது.

சுங்குடிச் சேலைகள் என்றாலே, அந்தக் காலத்து பெண்கள் கட்டும் 16 கஜம் புடவை முதல் இந்த காலத்துக்கு ஏற்ப பல்வேறு டிசைன்களில் நடுத்தர வர்க்கத்தினர், கல்லூரி மாணவிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற மாற்றங்களுடன் தயாரிக்கப்படுகின்றன.

சின்னாளபட்டியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட சுங்குடிச் சேலை தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தச் சேலைகள், இயந்திரங்களின்றி 90 சதவீதம் கைகளினால் தயாரிக்கப்படுகின்றன. இச்சேலைகள் தயாரிக்க, காட்டன் துணிகளை பண்டல்களாக திருப்பூர், கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள நூற்வாலைகளிலிருந்து வாங்குகின்றனர். இதில் சேலை அளவுக்கு வெட்டி எடுக்கப்பட்ட துணியில் சாயம் ஏற்றுகின்றனர்.

சின்னாள பட்டியில் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு தயாராக உள்ள
சுங்குடி சேலைகள்

சாயம் ஏற்றும் முறையிலும் முழுமையாக சாயம் ஏற்றுவது, பார்டர்களை விட்டு விட்டு முடிச்சுப்போட்டு சாயம் ஏற்றுவது என பலவகைகள் உள்ளன. சாயம் ஏற்றிய சேலைகளைக் காயவைத்த பிறகு பிரின்ட்டிங் செய்கின்றனர். கம்ப்யூட்டர் மூலம் பல விதமான டிசைன்களை உருவாக்கி, கைகளிலேயே சேலைகளில் அச்சுகளை வைத்து ஸ்கிரீன் பிரின்ட்டிங் செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, சேலைகள் முடமுடப்பாக இருக்க பிளீச்சிங் செய்கின்றனர். ஜவ்வரிசியை காய்ச்சி அந்த நீரில் சேலையை நனைத்து எடுத்துக் காயவைக்கின்றனர். பின்னர், சேலையை இஸ்திரி செய்து விற்பனைக்குத் தயார் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு தற்போது பல்வேறு டிசைன்களில் முதியவர்கள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் சுங்குடிச் சேலைகள் உற்பத்தி சின்னாளபட்டியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எம்.ரவிபாண்டியன்

இது குறித்து சுங்குடிச் சேலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சின்னாளபட்டியைச் சேர்ந்த எம்.ரவிபாண்டியன் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு பல்வேறு இடங்களிலிருந்து தற்போதே சுங்குடிச் சேலைகளை வாங்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர். தீபாவளிக்கென சிறப்பாக 5 கலர் புடவை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்கள், டிசைன்களில் சுங்குடிச் சேலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பெரிய கடைகளுக்கும் இங்கிருந்து சுங்குடிச் சேலைகள் அனுப்பப்படுகின்றன. தற்போது, தீபாவளிக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து சுங்குடிச் சேலைகளை கொள்முதல் செய்கின்றனர்.

கல்லூரி பெண்கள், சுய உதவிக் குழுவினர் மற்றும் குழுவினர் ஒரே மாதிரியான சேலைகளை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். ஆதிபராசக்தி வழிபாட்டுக் குழுவினரும் சிவப்பு நிறத்தில் சுங்குடிச் சேலைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

பல தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் மக்கள் சுங்குடிச் சேலைகளை விரும்பி அணிவதால், இந்தத் தொழில் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

5 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

20 days ago

மேலும்