பயன்படுத்திய துணிகள் சேகரிக்கப்பட்டு வறுமையில் உள்ளவர்களுக்கு விநியோகம் @ உடுமலை

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலையில் தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெற்ற அன்பை பகிரும் நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், புதிய சீருடைகள் மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்திய துணிகள் விநியோகிக்கப்பட்டன.

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, கருணை கரங்கள் சார்பில் அன்பை பகிரும் நிகழ்வு உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் கல்வியாளர் மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம்.நாகராஜ், ரயில்வே வாரிய உறுப்பினர் சத்யம் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த சில மாதங்களாக உடுமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் பொதுமக்களிடமிருந்து, பயன்படுத்திய ஆனால் நல்ல நிலையில் உள்ள ஆடைகள் மற்றும் இதர வீட்டு உபயோக பொருட்கள் தன்னார்வ நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டன. பின்பு, அவை தரம் வாரியாக வேட்டி, சட்டைகள், பேண்ட், சேலைகள், குழந்தைகள் ஆடைகள் என தனித் தனியே பிரித்தெடுக்கப்பட்டு, நேற்றைய நிகழ்ச்சியில் டேபிள்களில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டன.

வறுமை நிலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அவை இலவசமாக விநியோகிக்கப்பட்டன. ஸ்பிக் உர நிறுவனம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டன. அதில் தன்னார்வ நிறுவனம் சார்பில் நோட்டு, பேனா, பென்சில் அடங்கிய பொருட்கள் வைக்கப்பட்டு, அரசு பள்ளி குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, "நம்மிடம் பயன்படுத்திய, ஆனால் தற்போது பயன்படுத்தாத எத்தனையோ பொருட்கள் வீட்டில் வீணாக கிடக்கும். அவற்றை இல்லாதவர்களுக்கு கொடுத்தால், அவர்கள் பயன்படுத்த முடியும். இந்த எண்ணத்தின் வாயிலாகவே கருணை கரங்கள் எனும் இயக்கம் தொடங்கப்பட்டு, இப்பணிகளை முன்னெடுத்துள்ளோம். எங்களின் பணி வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE