சத்தீஸ்கர் | ஆட்சியரின் கவனத்தை பெற்ற யூடியூபர் கிராமம்: நவீன ஸ்டுடியோ தொடக்கம்

By செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது துள்சி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் யூடியூபர்களாக இயங்கி வருகின்றனர். இந்தச் செய்தியை அறிந்து அந்த கிராமத்துக்குச் சென்ற ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் சர்வேஷ்வர் புரே, கிராம மக்களின் படைப்பாற்றலுக்கு ஊக்கம் தரும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன ஸ்டுடியோ நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 5-ம் தேதி இந்த ஸ்டுடியோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் துள்சி கிராம மக்கள் கன்டென்ட் கிரியேட் செய்ய செலவிடும் தொகை 40 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கிராமத்தில் உள்ள யூடியூபர்களின் எண்ணிக்கையைக் கண்டு நான் வியந்தேன். அவர்களுடன் பேசியபோது, அவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஸ்டுடியோவை நிறுவலாம் என்ற யோசனை வந்தது. ஏனெனில், அவர்கள் நவீன சாதனங்களை பயன்படுத்துவதில்லை என அறிந்து கொண்டேன். அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு மையம் ஒன்றும் அமைக்க முடிவு செய்துள்ளோம்” என ஆட்சியர் உள்ளூர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக இந்த ஸ்டுடியோ மூலமாக அவர்களது வீடியோக்களை எடிட் செய்வது மற்றும் அதனை அப்லோட் செய்வது போன்ற சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொழுதுபோக்கு சார்ந்த கன்டென்ட் மட்டுமல்லாது விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களை கிராம மக்கள் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்டுடியோவில் நவீன கேமரா, ட்ரோன் கேமரா, கணினி, எடிட்டிங் - மிக்ஸிங் மென்பொருள்கள் மற்றும் யூடியூபர்களுக்கு தேவையான கருவிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் நடவடிக்கைக்கு துள்சி கிராம மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். இதற்கு உள்ளூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றும் உதவியுள்ளதாக தகவல்.

சுமார் 3000 பேர் இங்கு வசித்து வருவதாக தெரிகிறது. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்படுவது வழக்கம் என தெரிகிறது. அதுவே அவர்களை யூடியூபர்களாக இப்போது உருவாக்கி உள்ளது. தங்கள் கன்டென்ட் மூலம் நிறைவான வருமானம் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் தாங்கள் செய்து வரும் வேலையை கூட உதறி விட்டதாக தெரிகிறது. அதன் மூலம் அவர்கள் முழுநேர யூடியூபர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

துள்சி கிராம பின்னணி: யூடியூப் மூலம் வருமானம் ஈட்டும் ஸ்மார்ட் இந்திய கிராமம்: ஒரே கிராமத்தில் 40 சேனல்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE