செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

By ஆர்.டி.சிவசங்கர்


பந்தலூர்: தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டவில்லை. இதற்கு காரணம் இறப்பு சதவீதம் அதிகரிப்பதும், பிறப்பு சதவீதம் குறைந்து வருவதுமே ஆகும்.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊட்டச்சத்து பாதிப்பை குறைக்க செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு விநியோகித்து வருகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, தருமபுரி மலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில், தமிழக அரசு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு தலா 2 கிலோ ராகியை மாதந்தோறும் வழங்கி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டம் மூலமாக வழங்கக்கூடிய அரிசி, ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியாகும். செறிவூட்டப்பட்ட அரிசியில் வைட்டமின் ‘பி-12, ‘போலிக்' அமிலம், இரும்புச்சத்து ஆகியவற்றை அரிசிபோல தயாரித்து, சா

தாரண அரிசியில் 100 கிலோவுக்கு 1 கிலோ என கலந்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மக்களுக்கு அரசு வழங்கி வருகிறது. தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால், பழங்குடியினர் மற்றும் பெரும்பான்மையான மக்கள் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட அரிசியை பிரித்தெடுத்து, சாதாரண அரிசியை மட்டும் சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால், அரசின் நோக்கமான ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் திட்டம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பிரிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி

விழிப்புணர்வு தேவை: இதுதொடர்பாக கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சு.சிவசுப்பிரமணியம் கூறும்போது, "அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் மற்றும் அவசியங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. ஏற்கெனவே, கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி சத்துணவுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலமாக, மாணவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆரோக்கியம் மேம்பாடு அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள், தாங்கள் வாங்கும் ரேஷன் அரிசியில் சேர்க்கப்பட்டுள்ள ஊட்டச்சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியை சேர்த்துக்கொண்டால் மட்டுமே பயனளிக்கும்.

இதை மக்களுக்கு புரியவைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதற்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் கூட்டுறவு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE