சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவியில் நோய் தாக்கிய கரும்பு வயலை அழித்த விவசாயி

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பு வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர்கள் மற்றும் வேளாண் துறையினர் நோய் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டனர்.

அதற்குரிய மருத்துகளை அடிக்க விவசாயிகளுக்கு பரிந்துரை செய்தனர். விவசாயிகள் பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை வாங்கி அடித்து பார்த்தனர். ஆனாலும் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மணிவாசகம் என்ற விவசாயி , 15 ஏக்கரில் கரும்பு பயிரிட்டிருந்தார். இவர து வயலிலும் மஞ்சள் நோய் தாக்குதல் இருந்தது. நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இன்னும் இரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 7 ஏக்கர் கரும்பு வயலை டிராக்டர் கொண்டு உழவு ஓட்டி அழித்தார். மீதம் உள்ள 8 ஏக்கரை அப்படியே விட்டுள்ளார். இந்த மஞ்சள் நோய் தாக்குதல் இப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விவசாயி மணிவாசகம் கூறுகையில், “நான் சுமார் 15 ஏக்கரில் ‘சிறுகமணி - 7’ என்ற கரும்பு ரகத்தை நடவு செய்தேன். ஏக்கருக்கு ரூ 50 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். கரும்பு வெட்ட இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதல் காணப்பட்டது. மருந்து அடித்தும் இதனைக் கட்டுபடுத்த முடியவில்லை.

சர்க்கரை ஆலையில், ‘முன்னுரிமையின் அடிப்படையில் கரும்பை எடுத்து கொள்கிறோம்’ என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் நோய் தாக்கப்பட்ட இந்தக் கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பினால் வெட்டு கூலிக்கு கூட பணம் தேறாது. அதனால் தான் 7 ஏக்கர் கரும்பை அழித்தேன். மீதம் உள்ள 8 ஏக்கர் கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுள்ளேன்” என்றார்.

இது குறித்து சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே சர்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் ரவி கிருஷ்ணன் கூறுகையில், “இந்தப் பகுதி கரும்பில் மஞ்சள் நோய் தாக்குதல் உள்ளது. இதற்கான நோய் தடுப்பு முறைகள், மருந்துகள் பற்றி விவசாயிகளிடம் கூறியுள்ளோம். நோய் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி மணிவாசகத்தின் கரும்பை முன்னுரிமையில் எடுத்து கொள்கிறோம் என்று கூறியும் அவர் ஏன் கரும்பு வயலை அழித்தார் என்று தெரியவில்லை” என்றார்.

இது குறித்து அப்பகுதி கரும்பு விவசாயிகள் கூறுகையில், “மஞ்சள் நோய் தாக்கியதால் எங்கள் கரும்புக்கு சரியான விலை கிடைக்காது. அந்த தொகை வெட்டு கூலிக்கு சரியாகிவிடும். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், மறு சாகுபடிக்கு இடு பொருள்களை அரசு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE