அரிய குமிழித்தூணில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த வருணன் சிற்பம்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிதாக காணப்படும் குமிழித்தூணில் வருணன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திருச்சுழி வட்டத்துக்கு உட்பட்ட உழக்குடி கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர்கள் அருப்புக்கோட்டை தர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, பழமையான வருணன் சிற்பத்தை கண்டறிந்தனர். இச்சிற்பம் தமிழகத்தில் இதுவரை அரிதாக கிடைத்துள்ள சிற்பங்களில் ஒன்று. அதோடு, விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கூறியதாவது: உழக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் மிகப்பெரிய கண்மாய் உள்ளது. இங்கு பழமையான குமிழித்தூண் ஒன்று உள்ளது. இதில் வருணன் சிற்பம் உள்ளது. இவர் மழைக்கு அதிபதி. அஷ்ட திக்கு பாலகர்களில் ஒருவர். மேற்கு திசைக்கு உரியவரான இவரின் வாகனம் முதலை. இவரின் மனைவியின் பெயர் வாருணி. வருண பகவானை வழிபடும் போது தண்ணீர் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கிறது என்பது பன்னெடுங்கால ஐதீகம்.

3 அடி உயரமுள்ள இச்சிற்பத்தில் வருண பகவான் 4 கரங்களோடு காட்சி தருகிறார். தலையில் கரண்ட மகுடம் தரித்துள்ளார். மகுடத்துக்கு மேல் பூந்தோரணம் உள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. இடுப்பில் உதிரபந்தம், இரு கால்களிலும் தண்டை அணிந்து பீடத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்துள்ளார்.

நமது முன்னோர் அஷ்ட திக்கு பாலகர்களை அவர்கள் எதற்கு அதிபதியோ அதற்கு ஏற்றார் போல் அந்தந்த இடங்களில் அவர்களின் சிற்பங்களை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளனர். அந்த வகையில் உழக்குடி கண்மாயில் நீருக்கு அதிபதியான வருணனின் சிற்பத்தை வடித்து வணங்கி வந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.

ஆண்டில் பெரும்பாலான நாட்களில் நீருக்குள் மூழ்கி இருப்பதால் அந்தப் பகுதியில் எப்போதும் விவசாயம் செழிப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்க அம்சம். பாண்டிய மன்னர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நாயக்க மன்னர்களும் நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். அதற்கு சாட்சியாக உழக்குடி கண்மாயில் உள்ள குமிழித்தூணை கருதலாம். இதன் காலம் 17-ம் நூற்றாண்டாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE