மணப்பாறை அருகே தொழிலாளியின் இல்ல நிகழ்ச்சிக்கு தாய்மாமன் சீர் சுமந்து வந்த நிறுவன உரிமையாளர்!

By செய்திப்பிரிவு

திருச்சி: மணப்பாறை அருகே தனது நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளியின் இல்ல நிகழ்ச்சிக்கு, நிறுவனத்தின் உரிமையாளர், மற்ற தொழிலாளர்களுடன் வந்து தாய் மாமன் போன்று சீர்வரிசை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி.

இவர் திருப்பூரில் உள்ள தங்கவேல் என்பவருக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகள் சஜீவ், ரித்திக்சரண் ஆகியோருக்கு தனது சொந்த ஊரில் நேற்று காதணி விழா வைத்திருந்தார்.இதில் பங்கேற்க உரிமையாளர் தங்க
வேலுக்கும் ராமசாமி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து தங்கவேல், தனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடனும், நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடனும் கார், வேன், பேருந்து என 25 வாகனங்களில் நேற்று தொப்பம்பட்டிக்கு வந்தார்.

அப்போது, தேங்காய், பழம், பூ, இனிப்பு, குத்துவிளக்கு என 101 தட்டுகளில் தாய்மாமன் வழங்குவது போன்ற சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்திருந்தனர். பின்னர், கோயில் மந்தையிலிருந்து சீர்வரிசை தட்டுகள் மற்றும் ஆட்டுக் கிடாவுடன் ராமசாமி வீடு வரை பட்டாசு வெடித்து, செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் தங்கவேல் – ஜெயசித்ரா தலைமையில், காதணி விழா நடைபெற்றது. ஒரு பணியாளரின் இல்ல நிகழ்ச்சிக்கு, அதன் உரிமையாளர் சக பணியாளர்களுடன் வந்து தாய்மாமன் அளிப்பது போன்ற சீர்வரிசைகளை அளித்தது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோயில் மந்தையிலிருந்து சக பணியாளர்கள் ஊர்வலமாக எடுத்து
வந்த சீர்வரிசை பொருட்கள்.

இதுகுறித்து தங்கவேல் கூறும்போது, ‘‘நான் எனது தொழிலாளர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நானும் அவர்களில் ஒருவனாக உள்ளேன். எனது நிறுவனத்தில் சாதாரண ஊழியராக சேர்ந்த ராமசாமி தற்போது மேலாளராக உள்ளார். இன்று எங்கள் நிறுவனம் உயர்ந்து நிற்க அவரும், மற்ற தொழிலாளர்களும் தான் காரணம்.

ராமசாமி தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்ததாக கூறியதும், எனது 6 நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்து, 300 பணியாளர்களையும் பேருந்து, வேன், கார்களில் இங்கு அழைத்து வந்தோம். மேலும் குழந்தைகளின் தாய்மாமன் ஆறுமுகத்திடம் அனுமதி பெற்று அவருடன் சேர்ந்து நாங்களும் சீர்வரிசை செய்தோம்’’ என்றார். இதுகுறித்து ராமசாமி கூறும்போது, ‘‘எங்கள் இல்ல நிகழ்ச்சிக்கு அனைத்து தொழிலாளர்களுடன் முதலாளியும் சீர்வரிசையுடன் வந்தது நெகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE