10 தலை ராவணன் மீது அமர்ந்துள்ள விநாயகர்: காகித கூழ், கிழங்கு மாவில் தயாரிப்பு @ தி.மலை

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் 10 தலை ராவணன் மீது விநாயகர் அமர்ந்துள்ள சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

இந்துக்களின் முழு முதற்கடவுளாக போற்றி வணங்கப்படும் விநாயகருக்கு, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விழா கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா, உலகம் முழுவதும் வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெறவுள்ளன.

இதையொட்டி, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் குறிஞ்சி நகரில் (அறிவியல் பூங்கா முன்பு) 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எலி, சிங்கம், பசு மற்றும் அன்னப்பறவை மீது விநாயகர் அமர்ந்துள்ளது போல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் புதிய வரவாக, 10 தலை ராவணன் மீதும் மற்றும் டைனோசர் மீது விநாயகர் அமர்ந்துள்ளது போல் வடிவமைத்துள்ளனர் தொழிலாளர்கள். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி விநாயகர் சிலைகளை தயாரித்து இருப்பதாக  காயத்ரி காகித விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளதாக உரிமையாளர்கள் சேகர், செந்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். ஒரு சிலையை வடிவமைக்க சுமார் 2 மாதங்களாகும். 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை தயாரித்துள்ளோம். புதிய வடிவமாக 10 தலை ராவணன் மீது விநாயகர் அமர்ந்துள்ளது போல் தயாரிக்கப்பட்டுள்ளது. காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், வாட்டர் கலர் பயன்படுத்தி, வர்ணங்களை தீட்டியுள்ளோம். இது, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. நீர் நிலைகளில் கரைக்கும்போது 3 நாட்களில் கரைந்துவிடும். கிழங்கு மாவு மீன்களுக்கு உணவாகும்.

மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் காகிதங்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், விநாயகர் சிலைகளின் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. ரூ.3 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சிலைகளை விற்பனை செய்து வருகிறோம். விலை உயர்வு காரணமாக, விநாயகர் சிலைகளின் உற்பத்தி குறைந்துவிட்டது. கடந்தாண்டு 150 விநாயகர் சிலைகள் செய்திருந்த நிலையில், இந்தாண்டு சுமார் 70 விநாயகர் சிலைகளை தயாரித் துள்ளோம். இவை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகின்றன” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE