சென்னையில் அலுவலக வேலையை துறந்து இயற்கை விவசாயத்துக்காக மதுரை வந்த இளைஞர்!

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: கிராமங்களில் விவசாயத்தை துறந்து நகரங்களை நோக்கி இளைஞர்கள் பலரும் வேலை தேடிச் செல்லும் நிலையில்,சென்னை மாநகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மதுரைக்கு புலம் பெயர்ந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார் சென்னை இளைஞர் கோ.தமிழ்ச்செல்வன்.

சென்னை வண்டலூர் நெடுங்குன்றத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இயற்கை விவசாயம் செய்ய முடிவெடுத்தார். அதற்காக, மதுரை மேலூர் அருகே பூஞ்சுத்தியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினார். தற்போது, இங்கு குடும்பத்துடன் விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கோ.தமிழ்ச் செல்வன் (38) கூறியதாவது: சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றினேன். எனக்கு கீழ் சுமார் 50 பேர் பணிபுரிந்தனர். என்னை இயந்திர வாழ்க்கையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு மாற்றியது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான். அதீத ரசாயன பயன்பாட்டால் கீரைகள், காய்கறிகள் உடலுக்கு நஞ்சாக மாறுவதை உணர்ந்தோம். அதில், எனது குடும்பத்தினரே பாதிக்கப்பட்டனர்.

இதற்காக, எனது பால்ய நண்பர் ரவியும் நானும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட முடிவெடுத்தோம். நண்பரோடு இணைந்து நகைகளை விற்று நான்கரை ஏக்கர் நிலம் வாங்கினோம். எடுத்த எடுப்பிலேயே லாபம் கிடைக்காது என்பதால் பொருளாதார தேவைக்காக எனது நண்பர் இன்னும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

தமிழ்ச்செல்வன்​

நானும் எனது நண்பர் ரவியின் தந்தை மனோகரனும் இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எனக்கு விவசாயத்தை பற்றி ஒன்றும் தெரியாது. முதலில் கீரை பயிரிடுவதற்கு விதைகளை தூவினோம். அதனை எறும்புகள் இரையாக எடுத்துச் சென்றதால், விதைத்ததெல்லாம் முளைக்கவில்லை. அதையடுத்து, அதனை இயற்கை முறையில் பாதுகாத்து விதையை முளைக்கச் செய்யும் நுட்பங்களை கற்றோம்.

இப்படி படிப்படியாக கற்று தற்போது 3 ஆண்டு அனுபவத்தில் கீரைகள், காய்கறிகள், பழ வகைகள், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு என அனைத்து வகை பயிர்களையும் பயிர் செய்துள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு நாட்டு மாடுகள் அவசியம் என்பதால், 3 புலிக்குளம் மாடுகள், கன்றுகள், ஆடுகள், கோழிகள், மீன் குட்டை என ஒருங்கிணைந்த பண்ணையமாக உருவாக்கி வருகிறோம்.

இதில் உடனடி வருவாய்க்காக கீரைகளைப் பயிரிட்டு வருகிறோம். இயற்கை முறையில் விளைய வைத்த கீரைகள், காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம். இதன் மூலம் ஏராளமானோர் எங்களைத் தொடர்புகொள்கின்றனர். நஞ்சில்லாத காய்கறி, கீரைகளை உற்பத்தி செய்து பிறரின் நலமும் காக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

சிகப்பு மற்றும் பச்சை பொன்னாங்கண்ணி, சிலோன் பசலி, கொடிபசலி, சோம்புக்கீரை, வெந்தயக்கீரை, சுக்கான் கீரை, தரைப் பசலி, சார நெத்தி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கீரை வகைகளை சுழற்சி முறையில் விளைவித்து விற்பனை செய்கிறோம். காய்கறிகளில் கத்தரிக்காய், தக்காளி, சீனி அவரை, முள்ளங்கி, மிளகாய், தட்டைப்பயறு, பாசிப்பயறு, மஞ்சள் ஆகியவற்றையும் பயிரிடுகிறோம்.

மா வகைகளில் பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்கோவா உள்ளிட்ட வகைகளை சாகுபடி செய்து விற்பனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE