தமிழ் ஆசிரியராக பாரதியார் பணியாற்றியபோது... | மகாகவியின் நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

By செய்திப்பிரிவு

மதுரை: மகாகவி சுப்பிரமணிய பாரதி, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் சின்னசாமி - லக்குமி அம்மாள் தம்பதிக்கு 1882-ம் ஆண்டு டிச.11-ம் தேதி மகனாக பிறந்தார்.

இவர் பள்ளியில் படிக்கும் போது தனது 11-ம் வயதில் கவிதை எழுதும் வல்லமை பெற்றார். இவர் கவிஞர், பத்திரிகையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர் திருத்தவாதி என பன்முகத் தன்மையோடு விளங்கினார். இவர் வாழ்நாளில் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராக இருந்தாலும், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 3 மாத காலம் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தமிழறிஞர் அரசன் சண்முகனார் வாடிப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு விடுப்பு எடுத்திருந்தார். அந்தத் தருணத்தில் மூன்று மாதங்கள் தமிழாசிரியராக பணியாற்றும் வாய்ப்பு பாரதியாருக்கு கிடைத்தது.

இது குறித்து சேதுபதி மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கே.எஸ்.நாராயணன் கூறியதாவது: மகாகவி பாரதியார் வேலையின்றி இருந்தபோது சேதுபதி பள்ளியில் தற்காலிகமாக 3 மாதங்கள் பணிபுரிந்தார். மிகக் குறைந்த 22 வயதில் தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

அதில், 1904-ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 10 வரை சுமார் 102 நாள் வரை பணியாற்றினார். மாதம் ரூ.17.50 சம்பளத்துக்கு அவர் வேலையில் சேர்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. அவரது நினைவைப் போற்றும் வகையில் பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலை அமைக்கப்பட்டு,1966-ம் ஆண்டு டிச. 11-ம் தேதி அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் திறந்துவைத்தார்.

அவரது பிறந்தநாள், நினைவு நாளில் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பாரதியார் பணியாற்றிய பள்ளி என்பதால் அதன் தலைமை ஆசிரியரான என்னை காசியில் நடந்த தமிழ் சங்கம விழாவுக்கு அழைத்து கவுரவித்தனர். தற்போதைய மதுரைக் கல்லூரி வாரியச் செயலாளர் பார்த்தசாரதி, பாரதியாரின் விழாக்களை நடத்தி மாணவர்களிடம் அவரை நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழையும், தேசத்தையும் கடைசி வரை நேசித்து தனது கவிதைகளால் மக்களிடம் சுதந்திரக் கனலை மூட்டிய பாரதி, மதுரை சேதுபதி பள்ளியில் பணியாற்றியது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE