மன அழுத்தத்தில் தவிப்பவர்களுக்கு இலவச மனநல ஆலோசனை: மதுரை தன்னார்வ நிறுவனத்தின் சேவை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

குடும்பத்தில் குழப்பம், சண்டை சச்சரவு, பொருளாதார இழப்பால் ஏற்பட்ட மன அழுத்தம், படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, நோய்போன்ற பல்வேறு காரணங்களுக்காக மன அழுத்தத்ததில் தவிப்பவர்கள் காது கொடுத்து கேட்க ஆட்கள் இல்லாமல்தான் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகிறார்கள். அந்த நிமிடத்தில் மன பதட்டம், மன கொந்தளிப்பில் எடுக்கும் முடிவுகள், அவர்கள் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு செல்கிறது.

கடந்த ‘கரோனா’ தொற்று நோய் பரவும் காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் அறிகுறி இருந்தவர்கள், வேலையிழந்து பொருளாதார இழப்புகளை சந்தித்தவர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்துவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு மதுரை எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘ஸ்பீக்2அஸ்’ என்ற டெலி-கால் மன நல உதவி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த ‘ஸ்பீக்2அஸ்’ அமைப்பில் தன்னார்வலர்கள், தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்று, எதிர்முனையில் பேசும் நபர்களுடைய பிரச்சினைகளையும், அவர்கள் குழப்பங்களையும் பொறுமையாக பரிவுடன் கேட்டு, அவர்கள் அந்த குழப்பம், பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். தனிமையில் வாடுவோர், குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேச முடியாதவர்கள், தற்போது இந்த ‘ஸ்பீக்2அஸ்’ உதவி மையத்தை அனுகி பலன் பெற்று வருகிறார்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ட்ஸ்ரா கிராம், கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்படும் இந்த ‘ஸ்பீக்3அஸ்’ மன நல உதவி நம்பரான 93754 93754 தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை கூறுகிறார்கள். இந்த உதவி மையத்தில் பேசும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியமாக காக்கப்படுகின்றன. இந்த உதவி மையத்தில் ஆலோசனை கூறுவதோடு சரி, அதன்பிறகு பேசும் நபர்களின் எண்ணை கண்டறிந்து அவர்களுக்கு போன் செய்வதில்லை. அவர்களே விரும்பி அழைக்கும்போதுதான் மீண்டும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மருத்துவ உதவி தேவைப்படுவோரை மருத்துவர்களிடம் செல்ல வழிகாட்டுகிறார்கள். டெலி-காலரைக் கையாளும் மனநல உதவி மையம் தன்னார்வலர்களில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், உளவியலாளர்கள், ஆசிரியர்கள், ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பணிபுரியும் பெண்கள், எச்சிஎல் தன்னாவலர்கள் உள்பட 67 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் விருப்பப்பட்டே இப்பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

தன்னார்வலர்களுக்கு மன நோய் என்றால் என்ன, ஆரம்ப கால அறிகுறிகள், கவுன்சிலிங் பயிற்சி, மனநல உதவி, ஆற்றுப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கிய பின்னரே இந்த தன்னார்வ சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தன்னார்வலர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலே இருந்து இந்த பணியை ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமலே சேவை அடிப்படையில் பணிபுரிகிறார்கள்.

எம்எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சி.ராமசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘எங்களை அணுகும் மன அழுத்தத்தில் தவிப்பர்கள், தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் துயரங்களை காது கொடுத்து கேட்கவும், அவர்களின் மன நலனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பான வழிகாட்டுதலை வழங்கவே இந்த ஸ்பீக்2அஸ் தொடங்கப்பட்டது. இந்த ஹெல்ப்லைன் முயற்சியில் எச்சிஎல் நிறுவனம், நீட்ஸ் இந்தியா பெங்களூரு போன்றவை செல்லமுத்து அறக்கட்டளையின் பங்குதாரராக உள்ளன, ’’ என்றார்.

ஸ்பீக்2அஸ் தன்னார்வலர் ஸ்ரீவித்யா, ‘‘தற்கொலை என்பது ஒரு கடுமையான பொது சுகாதார உடல்நல பிரச்சினை. ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ஒவ்வொரு தற்கொலையிலும் அவர் மட்டுமில்லாது அவரை சார்ந்த 135 பேர் பாதிக்கப்படுகின்றனர். 2019 ஆம் ஆண்டில் 77 சதவீதத்துக்கும் அதிகமான உலகளாவிய தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வளரும் நாடுகளில் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் 2011-ம் ஆண்டில் 1,64,033 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள், கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள், 10 நிமிடங்கள் தள்ளிப்போட்டாலே போதும். அவர்களிடம் வாழ்க்கையைப் புரிய வைத்து தற்கொலை எண்ணம் திரும்ப வராது அளவுக்கு தேவையான மன நல ஆலோசனை மற்றும் மருத்துவத்துக்கு வழிகாட்டுகிறோம்.

மக்களுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு மருத்துவப் பிரச்சினை என்பதே விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அதற்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற வேண்டும் என்பது தெரிவதில்லை. தற்போதுதான் மக்கள்,விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் மனநலன் பற்றிய பாடங்கள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் மாணவர்கள், படிக்கும்காலத்திலே மனநலன் பற்றி தெரிந்து கொள்வார்கள், ’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்