டயாலிசிஸ் நோயாளிகள் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்: சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: டயாலிசிஸ் நோயாளிகள் தங்களுடைய சிறுநீரகத்தை பாதுகாக்க உணவில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கியூரி மருத்துவமனை சிறுநீரக மருத்துவர் அஜய் ரத்தூன் தெரிவித்தார்.

தேசிய ஊட்டச்சத்து வாரம் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கியூரி (சென்னை சிறுநீரகம் மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்) மருத்துவமனையில் தேசிய ஊட்டச்சத்து வாரம் நிகழ்ச்சி நடந்தது. தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் இந்த ஆண்டு கருப்பொருளான ‘அனைவருக்கும் குறைவான விலையில் ஆரோக்கிய உணவு’ என்ற தலைப்பில் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் பேசியதாவது:

அனைவரும் சரிவிகித, எளிதாக கிடைக்கக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023-ம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலை உள்ளது. நம்முடைய உணவு முறையில் நார்ச் சத்து அளவு குறைவாக உள்ளது.

இந்தியாவில் 75 வகையான காய்கறிகள் உள்ளன. ஆனால்,நாம் 6 அல்லது 7 காய்கறிகளைத்தான் எடுத்துக் கொள்கிறோம். ஒருவர் ஒரு நாளைக்கு 300 முதல் 400 கிராம் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பருவகால காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் விலை குறைவாக இருக்கும்.

அந்தந்த பருவக்காலத்தில் எடுத்துக் கொள்வதால் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும். நல்லெண்ணெய் மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 15 முதல் 20 எம்எல் எண்ணெய் போதுமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து டயாலிசிஸ் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளடக்கிய டயாலிசிஸ் ஆதரவு குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கியூரி மருத்துவமனை சிறுநீரகவியல் நிபுணர் அஜய் ரத்தூன் பேசும்போது, ‘‘இந்த மருத்துவமனையில் மட்டும்தான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டயாலிசிஸ் ஆதரவு குழு கூட்டம்நடைபெற்று வருகிறது. டயாலிசிஸ் நோயாளிகள் தங்களுடைய சிறுநீரகத்தை பாதுகாக்க உணவில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளிகள் உட்பட 65 பேருக்கு இலவசமாக எலும்பு உறுதித் தன்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் சதீஷ் பழனி, ஆரோக்கியமான உணவுகளை சமைக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE