பாலியல் கல்வி 2 | நான் பிறந்தது எப்படி? - அடிப்படைக் கேள்விகளும் பக்குவ பதில்களும்!

By பாரதி ஆனந்த்

பாலினங்களைப் பற்றிப் பேசவே தயங்கும் நம் சமூகத்துக்கு பாலியல் விழிப்புணர்வுக் கல்வியைப் புகட்டுவது மிகப் பெரிய சவால். இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் என பல தரப்பினரும் ஆமோதிக்கின்றனர். அந்தச் சவாலை ஓர் இதழியாளராக கையில் எடுக்கும்போது பல்வேறு நிபுணர்களின் துணையின்றி விழிப்புணர்வு எழுத்தளவில்கூட சாத்தியப்படாது என்ற புரிதல் ஏற்பட்டது. அப்படியிருக்க நாம் முதலில் நாடியது ஓர் இளம் பெற்றோர். அவர்கள் சொன்ன கதையோடு நாம் முன்னேறுவோம்.

இரண்டு கழுதைகளின் கதை: ஒரு குழந்தை உங்களிடம் வந்து நான் எப்படிப் பிறந்தேன் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? இதற்கான பதில்கள் 1. ரொம்ப அவசியம் பாரு. 2. வாயப் பாறேன்! 3. உடம்பு எப்படி இருக்கு? - இதுபோன்ற வகையில்தான் பெரும்பாலும் இருந்திருக்கும், இருக்கின்றன. ஆனால் 2019-ல் திருமணம் செய்து கொண்ட அந்தத் தம்பதி தங்களின் திருமண ஆல்பத்தைப் பார்த்து நீங்கள் இந்த போட்டோ எடுக்கும்போது நான் எங்கிருந்தேன் என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன கதையைப் பகிர்வது இங்கே பொருத்தமாக இருக்கும். அந்தக் கதையாடல்:

குழந்தை: இந்த போட்டோ எடுக்கும்போது நான் எங்கிருந்தேன்?
பெற்றோர்: நீ அப்போது பிறக்கவில்லை.
குழந்தை: பிறக்கவில்லையா? அப்போ நான் எப்படிப் பிறந்தேன்?
பெற்றோர்: ஒரு ஊர்ல ரெண்டு பெரிய கழுதைகள் இருந்துச்சாம். அந்த ரெண்டு கழுதைகளும் கல்யாணம் பண்ணி வேற ஊருக்குப் போச்சாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி ஒரு குட்டிக் கழுதையோடு மூணும் அதோட ஊருக்கே திரும்பி வந்துச்சாம். ஊரே அத கொண்டாடுச்சாம். அதுபோலத்தான் அப்பாவும், அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டோமா அப்புறம் நாங்க இந்த ஊருக்கு வந்தோமா.. அப்புறம் நீ பிறந்திட்டியா.. நாம கொஞ்ச நாள் முன்னாடி உன் பிறந்தநாளைக் கொண்டாடினோமா..
குழந்தை: ஐ நான் பிறந்துட்டேன். ஜாலி.. ஜாலி..
பெற்றோர்: நீ ஹேப்பியா. சூப்பர். இப்போ இந்தக் கதை போதும். நீ இன்னும் பெரியவனா ஆனதும், இதில் இன்னும் சந்தேகம் வந்தால் வேற யார் கிட்டேயும் கேட்காத. இப்ப கேட்ட மாதிரியே அப்பாகிட்டயோ, என்கிட்டயோ கேள். நாங்களே உனக்குப் புரியும்படி சொல்கிறோம்.
- கதை முடிந்தது -

இந்தக் கதை இரண்டு வயது குழந்தைக்கு சொல்லப்பட்டது. ஆனால், வயது ஏறும்போது நாம் குழந்தைகளை அணுகும் முறையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதுதான் பாலியல் கல்வியின் (Sexuality Education) அவசியத்தை உருவாக்குகிறது.

நாமெல்லாம் இப்படி எந்தக் கதையும் கேட்கவில்லையே. சரியாகத்தானே இருக்கிறோம் என்று கேட்க நீங்கள் எத்தனிக்கிறீர்களா? அவ்வாறாக, ஒவ்வொரு வயதுக்கும் ஏற்றபடி குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏன் என்று கேட்டால், குழந்தைகள் அப்பாவிகள், குழந்தைகள் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவர்கள், குழந்தைகள் பிறரை சார்ந்து இருப்பவர்கள்.

இப்படியான குழந்தைகள் நாம் அதிகார தொணியில் அணுகும்போது அவர்கள் நம்மைவிட்டு விலகி நிற்பார்கள், நம்மைக் கண்டு அஞ்சி நிற்பார்கள். தங்களின் சந்தேகங்களை தங்கள் வயதில் உள்ளவர்களிடமே அறைகுறையாகக் கேட்டு குழம்புவார்கள். இல்லை, இந்த தொழில்நுட்ப உலகில் I will google it, Chatgpt என்று கூறி இணையத்தில் மூழ்குவார்கள்.

ஆகையால், நம் குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்ப நாம் அறமும், அறிவியலும் இணைந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும். அந்தத் தெளிவை நாம் பெற வேண்டும். இந்த நாம் என்பவர்கள் பெற்றோர்கள், குடும்பத்தினர், ஆசிரியர்கள், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் உள்ளடக்கியதே.

2 வயது குழந்தைக்கு இரண்டு கழுதைகள் கதை சொன்னால் 15 வயது குழந்தை கேட்கும்போது இனப்பெருக்க மண்டலம் பற்றி எடுத்துரைக்கலாம். அதேபோல் அந்த வயதில் இனப்பெருக்க மண்டலம் உறவுக்கும், குழந்தைக்கும் தயாராக இருந்தாலும் கூட பாலுறவில் ஈடுபட்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதையும் சேர்த்தே சொல்லிக் கொடுக்கலாம்.

அந்தக் கல்வி ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் நட்போடு பழகிக் கொண்டாலும் தங்களுக்கான எல்லை என்னவென்பதில் தெளிவை ஏற்படுத்தும். தன் உடலின் ஆரோக்கியமே பிரதானம் என்று பிராயரட்டைஸ் செய்ய சொல்லித் தரும். சிறு வயதில் இருந்தே நாம் நம் குழந்தைகளிடம் உடல் அறிவியலைப் பற்றிப் பேசினால் தான் 15 வயதில் அவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும்போது அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்ல முடியும்.

விழிப்புணர்வு தான் தேவை: இந்தியாவில்தான் உலகிலேயே அதிகளவிலான பதின்ம வயதினர் உள்ளனர். நம் நாட்டில் 10 முதல் 19 வயதுடையோரின் எண்ணிக்கை 25.3 கோடி. 4-வது தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில், இந்தியாவில் 1 கோடியே 18 லட்சம் பதின்மவயது கர்ப்பத்தரிப்புகள் ஏற்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரம் இடம்பெற்றுள்ளது. இந்தப் புள்ளிவிவரத்துடன் சென்னையில் உள்ள Centre for Child Rights and Development- CCRD தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டெகனா ஜென்சியை அணுகினோம். அவருடைய பார்வை நம்மை புதிய பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.

“இன்றைய காலகட்டத்தில் குழந்தையின் முதல் நண்பன் கேட்ஜட்கள் தான். ரைம்ஸ் முதல் பார்ன் வரை அவர்களுக்கு இணையம் அள்ளிக் கொடுக்கிறது. உங்களிடம் பகிர ஒரு கேஸ் ஸ்டடி இருக்கின்றது. 7 வருடங்கள் கடந்துவிட்டது அந்தச் சம்பவம் நடந்து. கார்ட்டூன் வீடியோக்களை யூடியூபில் விரும்பிப் பார்க்கும் 13 வயது பெண் குழந்தைக்கு அடல்ட் கார்ட்டூனை இணையமே அறிமுகப்படுத்துகிறது. அதில் சிலவற்றைப் பார்க்க அவருக்கு அடுத்து இணையம் பரிந்துரைத்தது போர்ன் வீடியோக்கள். அந்தக் குழந்தை அதைப் பார்க்கப் பழகி பின்னர் அதற்கு அடிமையாகிப் போனது. ஒருகட்டத்தில் இதனைக் கண்டறிந்த பெற்றோர் குழந்தையுடன் பதறிப்போய் கவுன்சலிங்குக்கு அழைத்துவந்தனர். பலகட்ட கவுன்சிலிங்குக்குப் பிறகு அந்தக் குழந்தைக்கு ஓர் ஆழமான புரிதலை ஏற்படுத்தி மீட்டெடுக்க முடிந்தது. பெற்றோர், குடும்பத்தினருக்கும் சேர்த்தே கவுன்சிலிங் செய்ய வேண்டியதாயிற்று.

பல ஆண்டுகளாக செக்ஸுவாலிட்டி எஜுகேஷன் பற்றி குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் பேசி வருகிறோம். ஆனால், தொழில்நுட்பத்தின் வீச்சு அதிகரித்துவிட்ட இந்தக் காலத்தில் இதனை குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கேற்ப போதிப்பதன் அவசியம் அதிகமாகியுள்ளது. இதை நாங்கள் ஏன் சொல்கிறோம் என்றால் கவுன்சிலிங் கொடுப்பதைவிட விழிப்புணர்வு ஏற்படுத்துவது சுலபம். அதுவும் குழந்தைகளின் நலன் சார்ந்து பார்க்கும்போது விழிப்புணர்வே சிறந்தது.

ஸ்டெகனா ஜென்சி

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒரு குழந்தைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், தொழில்நுட்பம் குழந்தைகள், பெரியவர்களுக்கு எனக் கட்டுப்பாடுடன் இருக்கிறதா? கண்காணிப்பு வளையங்கள் முழு வீச்சில் இருக்கின்றதா என்றால். அது கேள்விக்குறியே. ஒருவேளை சைல்ட் லாக், சேஃப் சேர்ச் என்ற ஆப்ஷன்களைக் கொண்டு நாம் கெடுபிடி காட்டினாலும்கூட அதை உடைத்து அணுக குழந்தைகளுக்கு தெரிந்திருக்கிறது. மறைப்பதும், தடுப்பதும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுமே தவிர அவர்களைப் பண்படுத்தாது. அவர்களிடம் பேசிப் புரிய வைக்க வேண்டும்.

பேசத் தயங்கும் குழந்தைகளிடம் புத்தகங்கள் மூலமாகப் பேசலாம். அவர்கள் நம்மிடம் தயக்கமின்றி பேசும் நம்பிக்கையைக் கொடுத்தாலே போது விழிப்புணர்வைப் பெற்றுவிடுவார்கள். பெரிய நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகள் சில இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், நம் இலக்கு கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளி வரை இத்தகைய விழிப்புணர்வு நீள வேண்டும் என்பதுதான்” என்றார்.

சமூக நல செயற்பாட்டாளரின் பார்வை இவ்வாறாக இருக்க, பள்ளிகளில் அன்றாடம் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கும் ஆசிரியரின் பார்வையும் பதிவு செய்வது அவசியமாகிறது. அந்த வகையில் நம்மிடம் அரசு ஹஸ்தினாபுரம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ந.ஞானபிரகாசம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். 10-ஆம் வகுப்பு அறிவியல் ஆசிரியரான அவர் கூறுகையில், ”உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நான் அறிவியல் பாடம் புகட்டுகிறேன். அவர்களுக்கு Reproduction in Plants and Animals பாடம் இருக்கிறது. அதில் உடல் அறிவியல் குறித்த தகவல்கள் உள்ளன. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி தொடங்கி இனப்பெருக்க மண்டலத்தின் செயல்பாடு வரை பயிற்றுவிக்க வேண்டியுள்ளது.

பொதுவாகவே இந்தப் பாடத்தை எடுக்கிறோம் என்றாலே பிள்ளைகள் தங்களுக்குள் சலசலத்துக் கொள்வார்கள். சிரிப்பார்கள், முகம் பார்க்க தயங்குவார்கள். அப்படியிருக்க நான் ஓர் ஆசிரியராக சில சிறு உத்திகளைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்பிப்பேன். அடிப்படையில் நான் ஓர் ஓவியன். அதைச் சொல்லித்தான் இந்த வகுப்பை நான் ஆரம்பிப்பேன். நான் பழங்காலக் கோயில்களுக்குச் சென்றால் அங்கிருக்கும் ஓவியங்களை நுட்பமாகக் கவனிப்பேன். அப்போது எனக்கு சிலைகளுக்கு ஆடையில்லையே எனத் தோன்றாது சிற்பி எவ்வாறு நுட்பமாக ஒவ்வொரு பாகத்தையும் வடிவமைத்துள்ளார் என்பதையே கவனிப்பேன். தலை முதல் கால் நகம் வரை கலையாகத் தெரியும். நீங்கள் இன்று நான் நடத்தும் பாடத்தை அறிவியலாக மட்டும் பாருங்கள்.

நாம் நம்மைச் சுற்றியுள்ள அறிவியலை எல்லாம் படிக்கும்போது நம் உடலைப் பற்றிய அறிவியலை முதலில் படிக்க வேண்டாமா? அது நம் உடலைப் பேண உதவும். அது நம்மை நாமே தற்காத்துக் கொள்ள உதவும் என்று கூறுவேன். மாணவர்களை தயார்படுத்துதல் மிகமிக அவசியம். அப்படித் தயார்படுத்தினால்தான் அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். மாணவர்களை தயார்படுத்தி அவர்களுக்கு பாடம் கற்பிப்பதுபோல். பாலியல் விழிப்புணர்வுக் கல்வியையும் அவர்களை அதற்காகத் தயார்படுத்தி, அவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கை ஊட்டி, பின்னர் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களால்தான் பெற்றோரிடம் எடுத்துக் கூறவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவும் இயலும். அதைவிடுத்து பாலியல் கல்வி புகட்டுகிறோம் என்று பொதுவாகச் சொன்னோம் என்றால், சார், எங்க பிள்ளைங்களுக்கு கண்டதையும் நீங்களே சொல்லிக் கொடுத்துவிடாதீர்கள் என்ற எதிர்ப்பு தான் முதலில் வரும்” எனக் கூறுகிறார்.

ந.ஞானபிரகாசம்

தொடர்ந்து பேசிய அவர், ”பொதுவாகவே பள்ளிக் குழந்தைகள் மத்தியில் மிகப் பெரிய சிக்கலாக இருப்பது விடலைப்பருவ காதல்தான். எதிர்பாலின ஈர்ப்பு இயல்பானதுதான் என்றாலும் கூட இன்றைய சினிமாக்களும், யூடியூப், இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும் குழந்தைகளுக்கு அவர்களின் வயதுக்கு மீறிய விஷயங்களில் தள்ளிவிடுகிறது. சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய ஈர்ப்புக்கு தூபம்போட்டு அதை காதலென்று புனிதமாக்கி பின்னர் தேவையற்ற உறவுச் சிக்கலுக்குள் கொண்டு சேர்க்கிறது.

சில குழந்தைகள் இயல்பாகவே பொறுப்புடன் கடந்துவிடுகின்றனர். ஆனால் பல குழந்தைகள் இவற்றால் பாதிக்கப்பட்டு கல்வியைத் தொலைக்கிறார்கள், குழந்தைத் திருமணங்கள் நடந்துவிடுகின்றன. இன்னும் பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இத்தகைய சூழலில் பாலியல் விழிப்புணர்வு கல்வி மிகவும் அவசியமாகிறது. வெற்று அறிவுரைகளாக அல்லாமல் அறிவியல்பூர்வமாக இதைச் செய்தால் இதுதான் விளைவு என்று எடுத்துரைக்கும்போது குழந்தைகளின் உலகம் அழகானதாக, பாதுகாப்பானதாக இருக்கும்” எனக் கூறினார்.

"குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தானாக உருவாவது அல்ல. அதை அனைவரும் ஒன்றிணைந்து பொது பங்களிப்பின் மூலம் உருவாக்க வேண்டும். சமூகத்தில் மிகவும் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்கள் குழந்தைகள். அவர்களுக்கு அச்சமும், வன்முறையும் அற்ற வாழ்க்கையை உறுதிப்படுத்துவது நம் கடமை" - நெல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலா சொல்வதுபோன்ற குழந்தைகளின் உலகத்தை பாதுகாப்பானதாக உருவாக்குவதில் அனைவரின் கூட்டுப் பொறுப்பும் இருக்கிறது. குழந்தைகளை அந்நியர்கள், அறிந்தவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கியது கடந்து தற்போது குழந்தைகளை சக குழந்தைகளே பல்வேறு வகையிலும் வன்கொடுமை செய்வது அதிகரித்துள்ளது. அதுவும் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் பெண் பிள்ளைகள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் மிகவும் பெரிது என்பதால் பள்ளிகளில் ஆரோக்கியமான பாலியல் விழிப்புணர்வுக் கல்வி அவசியமாகிறது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: பாலியல் கல்வி 1 | எப்போது தவிர்க்கப்படும் பாலினப் புறக்கணிப்பு?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

23 hours ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

12 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

21 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

மேலும்