வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு உதவ தனி வழக்கறிஞர் இருந்தும் அணுகுவோர் குறைவு. ஏன்?

By க.சக்திவேல்

கோவை: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவச சட்ட ஆலோசனை, உதவிகள் வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் கீழ், கடந்த 2021-ம் ஆண்டு மாநில அரசானது அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பட்டியல் வழக்கறிஞர்களை நியமித்தது. ஆனால், இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், பாதிக்கப்பட்ட பலர் இவர்களை நாடுவது இல்லை. இதுவரை கோவை மாவட்டத்தில் மிகக் குறைந்த நபர்களே இந்த உதவியை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், எஸ்.சி., எஸ்.டி., வழக்குகளுக்கான சிறப்பு பட்டியல் வழக்கறிஞர் வி.ஸ்டெஃபினா ரோஸ் கூறியதாவது: வன்கொடுமைகளால் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். முறையான ஆலோசனை, உதவி இல்லாததால், ‘இதெல்லாம் நமக்கு எதற்கு’ என ஒதுங்கிவிடுகின்றனர்.

எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 15 ஏ-ன் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதை பாதிக்கப்படுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் இலவச சட்ட உதவி பெற, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் தனக்காக வாதிட வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கடிதம் அளிக்க வேண்டும். பின்னர், அந்த தகவல் வழக்கறிஞருக்கு தெரிவிக்கப்படும். அதன்பின்னர், வக்காலத்து தாக்கல் செய்வதற்கான கட்டணம், வழக்கு முடிவடையும் வரை வழக்கறிஞர் கட்டணம், சட்ட ஆலோசனைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

மாநில அரசு இந்த கட்டணத்தை ஏற்றுக்கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்து, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை தொடங்கவில்லையெனில், குற்ற விசாரணை முறை சட்ட (சிஆர்பிசி) பிரிவு 200-ன் படி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரடியாக தனி மனு (Private Complaint) அளிக்கலாம்.

வி.ஸ்டெஃபினா ரோஸ்

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தால், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அவர்கள் நேரில் வராமல் வழக்கு விசாரணை மேற்கொண்டு தொடராது. அவர்களின் கருத்தை கேட்டே மனு மீதான விசாரணை நடைபெறும். ஆனால், மற்ற வழக்குகளில் இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கருத்து கேட்க மாட்டார்கள்.

மேலும், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற இயலாது. கைது செய்யப்பட்டு, நேரடியாக சிறைக்குதான் செல்ல வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE