பாரம்பரிய முறையில் காளைகளை பூட்டி உழவு பணி - கோம்பைப்பட்டி விவசாயிகள் ஆர்வம்

By ஆ.நல்லசிவன்

பழநி: தொடர் மழையால் பழநி அருகே கோம்பைப்பட்டியில் காளை மாடுகளைப் பூட்டி பாரம்பரிய முறையில் விவசாயிகள் உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழநி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விவசாயிகள் முந்தைய காலங்களில் ஏர் கலப்பையில் காளை மாடுகளைப் பூட்டி உழவுப் பணியை மேற்கொண்டனர். நாளடைவில் விரைவாக உழவுப்பணி மேற்கொள்ள டிராக்டரை பயன்படுத்தத் தொடங்கினர்.

இதனால், உழவு மாடுகளின் தேவை குறைந்தது. விவசாயிகளும் உழவு மாடுகள் வளர்ப்பதைக் குறைத்து விட்டனர். பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் உழவு மற்றும் விதைப்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கோம்பைப்பட்டியில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் காளை மாடுகளைப் பூட்டி உழவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் உழவு மாடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோம்பைப்பட்டி விவசாயி துரைச்சாமி கூறியதாவது: மாடுகளைப் பூட்டி உழவு செய்வது போல், டிராக்டரை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்ய முடியவில்லை. அதனால் மீண்டும் உழவு மாடுகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளோம். ஒரு ஏக்கரை ஒரு மணி நேரத்தில் டிராக்டர் மூலம் உழுவதற்கு ரூ.1,400 செலவாகிறது.

அதே நேரம், ஒன்றரை ஏக்கரை ஒரு ஜோடி காளை மாடுகளைப் பூட்டி உழவு செய்வதற்கும், விதைப்பு செய்வதற்கும் நாள் முழுவதும் சேர்த்து மொத்தம் ரூ.3,000 செலவாகிறது. டிராக்டரைவிட நேரம் மற்றும் செலவு அதிகமானாலும் காளைகளைப் பூட்டி உழவுப் பணியை மேற்கொள்வதைத் தான் விரும்புகிறோம்.

நிலத்தை ஆழமாக உழுவதுடன், மாடுகளின் கழிவுகளும் உரமாக மாறுகிறது. அதனால் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் உழவு மாடுகளை நாடி வருகின்றனர் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE