ராமநாதபுரம்: தமிழகத்தின் வரலாற்றில் மூவேந்தர்களுக்கும், பல்லவர்களுக்கும் அடுத்தபடியாக சிறந்த இடத்தைப் பெற்றிருந்தவர்கள் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள்.
இவர்களது காலத்தில் கட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நெற்களஞ்சியம் தற்போது வணிக வளாகங் களாக இன்றளவும் ராமநாதபுரம் அரண்மனை அருகே காட்சி அளிக்கிறது. வேளாண்மை செழிக்க சேதுபதி மன்னர்கள் பல்வேறு பணிகளைச் செய்துள்ளனர். மன்னர் கூத்தன் சேதுபதி (1622-1635) பரமக்குடி வட்டம் கமுதக்குடிக்கு அருகில் வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாயை வெட்டி பரமக்குடி மற்றும் முதுகுளத்தூரின் வறண்ட பகுதிகளைச் செழிக்க வைத்தார்.
தற்போது அந்தக் கால்வாய் கூத்தன் கால்வாய் என அழைக்கப்படுகிறது. மன்னர் முத்து விஜய ரகுநாத சேதுபதி தனது ஆட்சிக்காலத்தில் ( கி.பி. 1713-1725 ) கமுதிக்கு அருகில் குண்டாற்றில் இருந்து திருஉத்தரகோசமங்கை அருகில் உள்ள களரிக் கண்மாய் வரை 45 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டினார்.
குண்டாற்று நீரை முதுகுளத்தூர், ராமநாதபுரம் வட்டங்களுக்கு கொண்டு வந்து கழனிகள் செழிக்கச் செய்தார். மேலும் சேதுபதி மன்னர்கள், ராமநாதபுரம் பெரிய கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய் களையும், கால்வாய்களையும் தோற்று வித்து சேது பூமியை செழிக்க வைத்தனர். ராமநாதபுரத்தில் முன்பிருந்த மண் கோட்டையை அகற்றிவிட்டு கல் கோட்டையாகக் கட்டியதுடன் அரண்மனையையும் கி.பி. 1690 முதல் 1694 கால கட்டத்தில் உருவாக்கி ராமநாதபுரத்தை சேதுபதி மன்னர்களின் தலைநகராக ஆக்கியவர் மன்னர் கிழவன் சேதுபதி.
» இறுதிப் பயணத்தில் கைகொடுக்கும் இலவச அமரர் ஊர்தி!
» 'அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம்': 111 வயது பிரிட்டன் தாத்தா அறிவுரை
அப்போது அரண்மனை அருகில் உலகிலேயே பெரியதாக ஒரு தானியக் களஞ்சியத்தையும் அவர் கட்டினார். களஞ்சியம் பாதுகாப்பாக இருக்க அங்கே ஒரு முனியசுவாமி கோயிலையும் உருவாக்கி இன்றளவும் ‘களஞ்சியம் காத்த முனி’ என்று அக்கோயில் அழைக்கப்படுகிறது. மன்னர் ஆட்சி முடிவுற்ற பின்பு சுமார் நீளம் 900 அடி, அகலம் 15 அடி, உயரம் 25 அடி அளவுள்ள இக்களஞ்சியத்தை ராஜா உயர்நிலைப் பள்ளியாக மாற்றி பல ஆண்டுகள் செயல்பட்டன.
தற்போது வணிக வளாகங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு வியாபார நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெற் களஞ்சியத்தின் பண்டைய கால சிறப்பு குறித்து கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது: சேது நாட்டில் குடிமக்களே உழுது வேளாண்மை செய்தனர். அறுவடையின்போது அரசின் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட குடிமகனுக்குப் போக மீதம் உள்ளதில் மன்னருக்கு உரிய பங்கைக் கொடுத்தனர்.
மேலும் பலவகைப்பட்ட தொழில் வரியாலும், விற்பனை செய்யப் படும் அள்ளுத் தீர்வையாலும் கிடைக்கும் தானியங்களையும் பெற்று ஆங்காங்கே ‘சேகரம் பட்டறை’ என்ற கிடங்குகளிலும் குதிர்களிலும் சேமித்து வைத்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தானியங்களை அப்பகுதியின் தேவைக்குப்போக மீதியை ராமநாதபுரம் கொண்டு வந்து தங்களது களஞ்சியத்தை நிரப்பினர்.
களஞ்சியத்தில் உள்ள தானியங்களை அரண்மனையின் தேவைக்குப்போக குடிமக்களின் பசியைத்தான் அதிகம் போக்கி உள்ளனர். அறக்கொடைக்கும், திருக்கொடைக்கும் அன்ன சத்திரங்களுக்கும் பெரிதும் பயனாக இருந்துள்ளது இக்களஞ்சியம். போர்களின் போதும், பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டபோதும் குடிமக்களுக்கு ஏற்பட்ட பசி துன்பத்தை இந்தக் களஞ்சியங்களே போக்கியுள்ளன.
இக்களஞ்சியம் முழுவதும் ஓர் அங்குல உயரத்துக்கு நெல்லை நிரப்பினால் 1000 கலம் என கணக்கிட்டுள்ளனர். ஆசியாவிலேயே பெரியதாகக் கருதப்படும் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில் நெற்களஞ்சியத்தின் கொள்ளளவு 12 ஆயிரம் கலம்தான். ஆனால், சேதுபதிகளின் களஞ்சியமானது ஓரடி உயரத்துக்கு நிரப்பினாலே 12 ஆயிரம் கலமாகும்.
25 அடி உயரம் கொண்ட இக்களஞ்சியம் நிரம்பினால் 3,00,000 கலம் ஆகும். இந்த சேதுபதி களஞ்சியம்தான் திருப்பாலைத்துறை களஞ்சியத் தைவிட 25 மடங்கு பெரியது. ஆகையால் ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி தானிய களஞ்சியம் தான் உலகிலேயே பெரிய களஞ்சியமாக இருந்தது எனலாம். களஞ்சியத்தில் 10 அடி உயரத்துக்கு நிரம்பிய தானியத்தை பயன்படுத்தினால் 30,000 பேர் 2 ஆண்டு களுக்கு 3 வேளையும் தாராளமாகச் சாப்பிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
14 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
16 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago