புதுச்சேரியில் வட இந்தியர்கள் வாழும் பகுதிகளில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. ராக்கி கயிறை கட்டிய சகோதரிகளுக்கு பரிசுகள், பணத்தை சகோதரர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

ஆவணி மாதம் முதல் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ரக்‌ஷா பந்தன். பெண்கள் தமது சகோதரர்கள் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வு. அதை ஏற்கும் சகோதரர், தனது சகோதரியின் வாழ்க்கை நலனுக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதி அளிப்பது வழக்கம். அத்துடன் கயிறு கட்டிய சகோதரிக்கு பரிசு, பணம் வழங்கி மகிழ்வர்.

புதுச்சேரியில் வட இந்தியர்கள் அதிகளவில் வாழும் ரெயின்போ நகர், செல்லான் நகர், வெங்கட்டா நகர் பகுதிகளில் இந்நிகழ்வு பண்டிகை போல் கொண்டாடப்பட்டது. குறிப்பாக காலையில் கோயிலுக்கு புத்தாடை அணிந்து சென்று வந்து, பூஜை அறையில் சிறப்பு வழிபாடு செய்தனர். விளக்கு ஏற்றி தீபத்தை காட்டி சகோதரர்களுக்கும், சகோதர்களாக கருதும் ஆண்களுக்கும் ராக்கி கயிறை சகோதரிகள் கட்டினர்.

அதையடுத்து பலரும் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகளை தந்தனர். ராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு இனிப்புகளை பகிர்ந்தனர். இது பற்றி வட இந்தியர்கள் கூறுகையில், "சகோதரியை காக்கும் பொறுப்பு தனக்குண்டு என்று ஆணை உணர வைக்கும் தினம் இது. எவ்வளவு பணிகள் இருந்தாலும் அன்றைய தினம் சகோதரிகளை பார்த்து பரிசு தருவது வழக்கம்.

நாடு முழுவதும் இப்பண்டிகை பிரபலமாகி வருகிறது. இதற்கு மூலக் காரணமும் உண்டு. மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தைத் தடுக்க தனது புடவையை கிழித்து மணிக்கட்டில் திரவுபதி கட்டினார். அதையடுத்து அவரை சகோதரியாக கிருஷ்ணர் ஏற்று, அவரை அனைத்து பிரச்சினைகளில் இருந்து சகோதரராக இருந்து பாதுகாப்பதாக உறுதி தந்தார். அதுவே ரக்‌ஷா பந்தன் நிகழ்வு" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE