நாம் வாழும் வாழ்க்கையில் உள்ள பல பரிதாபங்களை நகைச்சுவையாக்கி, அதில் அரசியல் தலைவர்களின் நையாண்டியையும் கலந்து 'யு-டியூப்' சேனலில் பிரபலமாக வலம் வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். தற்போது இணையத் தொடர், பட வாய்ப்புகள் என வந்தாலும், எப்போதுமே யு-டியூப் மட்டும் விடுவதில்லை என்ற குறிக்கோளோடு வலம் வருகிறார்கள்.
மயிலாப்பூரில் அவர்களுடைய இல்லத்தில் சந்தித்த போது 'டூர் பரிதாபங்கள்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சின்ன அறைக்குள் இவர்கள் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் செய்யும் வீடியோக்கள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. "பாஸ்.. கல்லூரியிலிருந்தே இருவரும் நண்பர்கள். வேலைக்காகச் சென்னை வந்து பல தொலைக்காட்சி படிகள் ஏறி இறங்கினோம். நம்மைப் பொறுத்தவரைக்கும் பிடித்ததைச் செய்ய வேண்டும். அவ்வளவு தான்" என்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினார்கள்.
இவர்களுடைய வீடியோக்களில் அரசியல் நையாண்டி தான் மிகவும் பிரபலம். பிரதமர் மோடி, கருணாநிதி, ஸ்டாலின், தமிழிசை சவுந்தராஜன், ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ என ஒருவரையும் விட்டுவைக்காமல் கலாய்த்திருக்கிறார்கள். அதைப் பற்றி கேட்ட போது, "யு-டியூப்பில் அரசியல் நையாண்டி செய்தால் அனைவரும் பார்ப்பார்களே என்று முதலில் தயங்கினோம். அரசியல்வாதிகளைப் பார்த்து என்னவெல்லாம் கேட்கலாமோ, அதை எல்லாம் மூன் டிவி-யில் பணிபுரிந்த போது அங்குச் செய்த வீடியோக்களில் கேட்டு வைத்திருந்தோம். அதை 'மெட்ராஸ் சென்ட்ரல்' அலுவலகத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராகவன் அண்ணன் தான் 'இதை எல்லாம் ஏன்டா இங்குப் பண்ண மாட்டிக்கிறீங்க' என்றார். அவர் கொடுத்த ஊக்கத்தால் தான் முதலாவதாக 'கலக்கப் போவது யாரு' வீடியோவை வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து அரசியல் சம்பந்தப்பட்ட வீடியோவும் செய்யத் தொடங்கினோம். அனைத்துக்குமே வரவேற்பு தான்" என்று அடக்கமாகக் கூறினார் சுதாகர். அவர் வீடியோக்களில் எப்படிக் குறைவாகப் பேசுகிறாரோ, அப்படித் தான் நேரிலும். எதற்கெடுத்தாலும் சிரிப்பிலேயே பதிலளிக்கிறார்.
"முதலில் ஏதாவது புதிதாக முயற்சி செய்யலாம் என்று செய்த வீடியோ தான் 'பஸ்-ஸ்டாண்டு பரிதாபங்கள்'. பெரிய ரீச்சாகவில்லை என்றாலும் நிறையப் பேர் சூப்பர் எனப் பாராட்டினார்கள். பரிதாபங்கள் வீடியோ 2 ட்ராக் வைத்து, ஒன்று அரசியல் மற்றொன்று வேறு என உபயோகப்படுத்தத் தொடங்கினோம். ஏனென்றால் எது பிடிக்குமோ அதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்ற எண்ணம் தான்.
எங்களுடைய வீடியோக்களில் முதலில் பெரிய ரீச் என்றால் சீமான் வீடியோ தான். 'பேங்க் பரிதாபங்கள்' என்ற பெயரில் செய்திருந்தோம். ஒரே நாளில் 15,000 வியூஸ் வந்திருந்தது. 5 நாளில் 1 லட்சத்தைத் தாண்டியது. அதுவே பெரிய விஷயமாக ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஒவ்வொரு வீடியோவாக எந்தச் சமயத்தில் என்ன போடலாம் என யோசித்துத் தொடர்ந்து ஹிட்டடிக்க தொடங்கினோம். நிறையப் பரிதாபங்கள் வீடியோக்கள் செய்தோம். இதுவரை 27 பரிதாபங்கள் செய்திருக்கிறோம்" என்று பயணத்தின் சாதனையை விளக்கினார் கோபி. அவ்வப் போது எடிட்டிங் பணிகளையும் கவனித்துக் கொண்டே பேசிய சுதாகர், "ஜாதி அரசியல் செய்பவர்களைத் தவிர மற்ற அரசியல் தலைவர்கள் அனைவரையுமே கலாய்த்துவிட்டோம். முதலில் அரசியல் தலைவர்களைக் கலாய்க்கும் போது பயமாக இருந்தது. இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற தைரியம் வந்தவுடன் பயம் போய்விட்டது.
அரசியல்வாதிகளைக் கலாய்ப்பதற்கு முன்னால் அரசியல் தலைவர் இடத்திலிருந்து யோசிப்போம். அந்த இடத்திலிருந்து இந்த வீடியோவைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது எனப் பார்ப்போம். சும்மா எடுத்தவுடன் கலாய்த்துவிட மாட்டோம். நிறையப் பேசுவோம், இந்த வார்த்தைகள் எல்லாம் வேண்டாம் எனப் பேசிக் கொள்வோம். பெர்சனல் விஷயங்கள் எதையுமே கொண்டுவர மாட்டோம். அரசியல் தலைவர் இடத்திலிருந்து வீடியோவைப் பார்த்து அடிக்கத் தோன்றுகிறதா, இல்லையா என்பது வரை யோசிப்போம். இதுவரை ஒரே ஒரு மிரட்டல் மட்டுமே வந்திருக்கிறது" என்று தொடர்ந்தார். அவருடைய வாயைப் பொத்தி "நம்ம அசிங்கப்பட்டதையும் சொல்லணுமாடா" என்று அடக்கி வாசிக்கக் கூறினார் கோபி.
"ஹிப் ஹாப் தமிழா தொலைபேசியில் பாராட்டினார். இதெல்லாம் செய்யுங்கள் என்று நிறையப் பேசினார். டாப் ஸ்டார் பிரசாந்த், அட்லீ, கார்த்தி சுப்பராஜ், அருண்ராஜ் காமராஜ், சீமான் ஆகியோர் பாராட்டியிருக்கிறார்கள். யு-டியூப்பை திறந்தாலே எங்கள் முகமாக இருக்கும் போது பயமாக இருக்கிறது. எங்களுக்கே போரடிக்கும் போது, பார்ப்பவர்களுக்கு எவ்வளவு போரடிக்கும். அதே வேளையில் முன்பைப் போல் சுதந்திரமில்லை பாஸ். பேருந்தில் வரும் போதெல்லாம் பேசுவார்கள். ரயிலில் வரும் போது போட்டோ கேட்பார்கள். படுத்துக் கொண்டே புகைப்படம் கொடுக்க இயலாது, கீழே இறங்கி நின்று கொண்டு தான் கொடுப்பேன். ஜாலியாக இருந்தாலும், கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் மக்களோடு மக்களாக இருக்கும் போது மட்டுமே, வீடியோவுக்கு நிறைய விஷயங்கள் கிடைத்தது. அப்படித் தான் நிறையப் பரிதாபங்கள் வீடியோக்கள் செய்தோம்" என்று பரிதாபங்கள் ஐடியாவைப் போட்டு உடைத்தார் கோபி.
இனிமேல் படத்தில் காமெடியன் தானா என்று கேள்வியை முடிக்கும் முன்பே, "'மீசையமுறுக்கு' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தோம். இப்போது சிறுகதாபாத்திரம் என்று யார் கேட்டாலும் செய்யக் கூடாது என முடிவு செய்திருக்கிறோம். தொலைக்காட்சியும் வேண்டாம். எந்தவொரு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் சிறுகதாபாத்திரமே வேண்டாம். கதைக்கு முக்கியத்துவமானது என்றால் அப்போது யோசிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டோம். சின்ன முக்கியத்துவமாக இருந்தால் மட்டுமே நடிக்கவுள்ளோம்" என்று கூறினார் சுதாகர். இப்போதே வருங்காலத்தையும் இப்போதே முடிவு செய்து வைத்திருக்கிறார் இருவரும்.
இருவரிடமும் "இவ்வளவு நட்பாக இருக்கிறீர்களே. திருமணமானவுடன் இப்படி இருக்க முடியாதே" என்று கிண்டலாக கேள்வியை கேட்க "பாஸ்... அரசியல் தலைவர்களையே மறைமுகமாக கலாய்த்து பொழப்பு ஓட்டிட்டு இருக்கோம். மனைவியை சமாளிக்க தெரியாதா என்ன" என்று நமக்கே பல்பு கொடுத்தார்கள் இந்தப் பரிதாபங்களுக்குரிய நபர்கள்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
7 hours ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
25 days ago