மாடித் தோட்டத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் - மதுரையில் மாற்றுத் திறனாளி அசத்தல்

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மாடித் தோட்டம் மூலம் விளைவித்து தற்சார்பு வாழ்க்கை வாழ்வதோடு, நாட்டுக் காய்கறிகள் விதைகளை மற்றவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார் மாற்றுத் திறனாளி ஆத்திக் கண்ணன்.

மதுரை பழைய குயவர்பாளையம் சாலை புனித சேவியர் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி பா.ஆத்திக் கண்ணன் (45). ஒன்றரை வயதில் போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். ஐ.டி.ஐ. கணினி தொழில் நுட்பம் படித்துள்ளார். கணினியில் பழுதுநீக்கும் பணியை பார்ப்பதோடு, அண்ணா நகரிலுள்ள கண் மருத்துவமனையில் அலுவலக உதவி யாளராகவும் இருந்து வருகிறார்.

மன ஆறுதலுக்காக மாடித் தோட்டத்தை ஏற்படுத்தியவர் தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்களை உற்பத்தி செய்வதோடு பாரம்பரிய நாட்டு ரக காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, பிறருக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறார்.

இது குறித்து பா.ஆத்திக்கண்ணன் கூறியதாவது: கண் மருத்துவர் பாஸ்கர ராஜன் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். அவர் வறண்ட நிலத்தை சோலைவனமாக மாற்றியுள்ளார். அதைப்போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். மேலும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கணினி பழுது நீக்கச் சென்றபோது மாடியில் செடிகளை வளர்த்து பசுமையாக வைத்திருந்தார்.

ஆத்திக் கண்ணன்

அதை பார்த்த பிறகு எனது வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்தேன். மாடித்தோட்டத்துக்குத் தேவையான செம்மண்ணை 25 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மூட்டைகளில் கொண்டு வந்தேன். எனது தாயார், மனைவியின் உதவியோடு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தேன். இதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பந்தல் கொடிகள் மற்றும் கீரை வகைகள், பூச்செடிகளை வளர்த்து வருகிறேன்.

என்னால் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் பெரும்பாலும் உட்கார்ந்துதான் வேலை பார்ப் பேன். தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறேன். மாடித் தோட்டம் அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக தற்சார்பு வாழ்க்கை வாழ முடிகிறது. வண்ண மீன்களையும் தொட்டியில் வளர்த்து வருகிறேன்.

குளத்தில் வளரும் அல்லி ரக செடிகளையும் வட்ட வடிவ பிளாஸ்டிக் டப்பில் வளர்த்து வருகிறேன். மாடித் தோட்டம் நண்பர்கள் குழுவை அமைத்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மேலும், மதுரை மீனாட்சி விதைப் பெட்டகத்தை ஏற்படுத்தி பாரம்பரிய நாட்டு ரக விதைகளை சேமித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE