''இசை ஆன்மாவோடு இயைந்து நம் சுவை உணர்ச்சிகளை நன்றாக எழுப்பி விடுகிறது. இவ்வாறு உணர்ச்சிகளை எழுப்புவதால்தான் உள்ளம் ஊக்கமும் அறிவும் பெற்றும் உடலுக்கும் சுறுசுறுப்பை ஊட்டுகிறது'' என்று இசை என்ற ஒரு சொல்லுக்கு விளக்கமளித்துள்ளது தமிழக அரசு பதிப்பித்த கலைக்களஞ்சியம் எனும் சென்ற நூற்றாண்டில் வெளியான தமிழ் நூல்.
''இசை ஆன்மாவோடு இயந்து...'' என்ற வார்த்தைகள் ஏதேதோ நினைவுகளைக் கிளறி விடுகிறது. நான் பார்த்த 'தான்சேன்' என்ற திரைப்படம் அதற்கான விளக்கமாய் அமைந்தது நினைவுக்கு வருகிறது. 30களில் வெளியான படம் அது. ஆனால் இப்படத்தை 90களில், வார இறுதி ஒளிபரப்பாக டெல்லி தொலைக்காட்சியில்தான் நள்ளிரவில் பார்க்கக் கிடைத்தது. படம் முழுவதும் பாடல்கள். இதயத்தை உருக்கி உன்மத்த தருணங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பாடல்கள். அதுமட்டுமின்றி ஒருவரின் வாழ்க்கையில் பாடல்களே பரிசுகளாகவும் தண்டனைகளாகவும் எவ்வாறு அமையும் வாய்ப்புள்ளது என்பதை மிக நேர்த்தியாக விளக்கிய திரைப்படமாக தான்சேன் இருந்தது.
பேரரசர் அக்பர் அவையில் அரசவை இசைக்கலைஞனாக திகழ்ந்த தான்சேனின் கதைதான் அது. அவன் அப்பாவியாக ஆடு மேய்ப்பவனாக இருந்த காலத்தில் ஆன்மாவிலிருந்து எழும் அவனது பாடல்களால் தீபங்கள் எரிவதை கிராமத்து மக்கள் பார்த்து வியப்படைவார்கள். அவனது தோழியும் மகிழ்வாள். காட்டுக்கு வேட்டை ஆட வந்த அக்பரையே விலங்குகளிலிருந்து காப்பாற்றும் வேலையை அவனது பாடல்கள் செய்வதைக் கண்டு அவரே வியந்துபோவார். அதன்பின்னர்தான் அவனை அரசவை இசைக்கவிஞனாக அமரவைப்பார். அவனை சொந்த ஊருக்கு அனுப்பாமல் இங்கேயே ராஜபோக மரியாதையெல்லாம் தடபுடலாக அமைத்துத் தருவார். அவனது இசையின் மாயத்தை அதனால் நிகழும் மாயாஜாலங்களைக் கண்டு உலகமே வியந்தது.
இப்படியாக சென்ற அவனது கொண்டாட்ட வாழ்க்கையில் ஒருநாள்... அரண்மனை சுகபோகங்களை அனுபவிக்கும் அவனைத்தேடி பழைய தோழி வருவாள். அரண்மனையின் முன்பக்கம் யாரும் அனுமதிக்காத நிலையில் அவனது அந்தப்புர பகுதிக்கு வந்து அவனை தேடி வந்திருப்பதை தெரிவிப்பாள். செய்தியறிந்து தோட்டத்துப் பக்கம் வந்து அவளை வெறுப்போடு காண்பான். அவனுக்கு தனது பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்துவது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளை கேவலமாக ஏதேதோ சொல்லி விரட்டிவிடுவான். அதன்பிறகு அவன் வாழ்க்கையில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும். மெல்ல மெல்ல ஆன்மராகம் விடைபெற்றுவிடும். மாறாக, காட்டில் அப்பாவியாக எப்பொழுதும்போல் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் அவனது தோழியிடம் அந்த தெய்வீக சக்தி இடம் மாறிவிடும்....
» மணமகளை மாட்டு வண்டியில் அழைத்து வந்த மணமகன்: திருச்செந்தூர் அருகே ருசிகர சம்பவம்
» மதுரையில் வீட்டில் நூலகம் அமைத்து அறிவுக்கண் திறக்கும் அதிகாரி
நம்மில் பலரும் பெரிய பாடகர்கள் என்று சொல்ல முடியாது; ஆனால் காலியாக பேருந்து இருக்கைகள் கிடைத்துவிட்டால் அதிலும் சன்னலோர இருக்கையென்றால் பாட்டு தானாக வந்துவிடும். பல நேரங்களில் நம்மை அறியாமல் என்பதைவிட நம்மையே அறிந்துகொள்ள ஏதோ ஒரு பாடலை பாடி பரவசப்படுத்திக்கொள்வதுண்டு. வாய்விட்டு பாடத்தகுந்த எத்தனையோ பாடல்கள் தமிழில் இருக்கின்றன. அதிலும் சினிமா பாடல்கள், இளையராஜா பாடல்கள் என்றால் கணக்கே இல்லை... 'நினைவோ ஒரு பறவை.... அது விரிக்கும் தன் சிறகை...'' என தனக்குத் தானே ரசிகனாக மாறி பெரிய பாடகனாக கற்பனை செய்துகொண்டு பாடிச்செல்லும் பஸ் பயண நாட்கள் நம்மில் சிலருக்காவது இருக்கத்தான் செய்யும்.
நான் பிறந்து வளர்ந்த ஊரான மேல்மலையனூரில் வெவ்வேறு விதமான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் ஊருக்கு வெளியே பனைமோடு பக்கம் குடிசைகள் அமைத்து தங்கியிருக்கும் சிலர் பாடும் பாடல் மிகவும் அழகானது. தாங்கள் நடத்தும் சிறு திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏரிக்கரை காளி சிலையை ஆராதித்து பாடிக்கொண்டு ஊர்வலமாக தூக்கிச் செல்வதைப் பார்த்து சிறுவயதில் ஆரம்பத்தில் நான் அச்சமடைந்ததுண்டு. பின்னர் அவர்கள் ஊர்வலத்தை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினேன். அவர்களின் பாடலில் ஏதோ ஒரு துள்ளல் இருப்பதை கண்டு இன்புறத் தொடங்கினேன்.
மற்றவர்களை ஒப்பிடும்போது சிறிது நிலம் இருப்பினும் கூலிவேலையை மட்டுமே முழுவதுமாக நம்பி வாழ்க்கையை நகர்த்தும் மிகச் சாதாரண அந்த மக்களின் பாடலில் உள்ள சிலிர்ப்பும், ஜீவகளையும் வேறெங்கிலும் நான் காணாதது. பாடல் என்பதையும் இசை என்பதையும் ஏட்டில் எழுதா வாழ்வியல் அனுபவமாக அவர்கள் ஆக்கிவைத்திருந்தனர்.
ஒவ்வொரு இனக்குழுவினருக்கும் ஏதோ ஒரு பாட்டு துணையாக இருந்து வந்திருக்கிறது. மீனவர்கள் தாங்கள் வணங்கும் அங்காளம்மனை வழிபட தாங்களே பாடல்களை இயற்றிவைத்திருந்தனர். ''மலையிலே பிறந்து நீ மலையிலே வளர்ந்து நீ மலையனூர் எல்லையிலே வந்தமர்ந்தாயே தாயே... அங்காளி தாயே” என்று பாடும்போது சித்தாங்கு ஆடை குலுங்க, கால்சிலம்பு ஜதிபோட வேப்பிலையுடன் மஞ்சள் ஆடை பக்தர்கள் ஆட்டம் ஆடி ஊர்வலமாக வருவர்.
ஒரு பழைய நினைவு ஒன்று... அப்போது எனக்கு மிகவும் சிறிய வயது. உடல்நிலையை சரிசெய்ய பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தனர். அதற்காக வேண்டி திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் (சென்னை பாண்டிக்கு இடையில் நெடுஞ்சாலையிலிருந்து சற்று உள்ளடங்கிய கிராமம், சவுக்குத்தோப்பு பக்கவாட்டில் இருக்கும் அந்த ஏரிக்கரை மீதேறி அந்த கிராமத்திற்கு நடந்து சென்றது இன்னமும் நினைவில் உள்ளது) அங்குள்ள எங்கள் சித்தப்பா வீட்டுக்கு சென்று சிலநாட்கள் தங்கியிருந்தோம். அங்கு தங்கி படித்துவந்த என் சித்தியின் தங்கை என்னை தனது பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
இவன் பாட்டு பாடுவான் என பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நான் ஒரு பாடலைப் பாடினேன். ''அடியே அடியே ராசக்கா அரிசிக்காரன் வாராண்டி சின்ன வீட்ல புகுந்துகினு சிணுக்குத்தாளம் போடறாண்டி..'' என்று தொடங்கிய பாடலை அன்று நினைவிலிருந்த வரை பாடினேன்... மாணவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். அதுமட்டுமின்றி தலைமை ஆசிரியை எனக்கு ஒரு பேனா பரிசளித்தார். அதை என்றென்றும் மறக்கமுடியாது. அந்த பாடலின் அர்த்தம் என்ன? அந்தப் பாடல் சிறுவர்கள் பொதுவெளியில் பாடக்கூடியதா எனதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் தாளம் போட்டு பாடி ஆட்டம் போடுவதற்கு ஏற்ற பாடல் அது.
இதைவிட இன்னொரு மறக்கமுடியாத நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. வருகின்ற மாத்திரத்திலேயே லேசாக இதழ்க்கடையில் சிரிப்பும் வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்திப் பாடல்கள் பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். பின்னாளில் தமிழ்த்திரையுலகில் அழியாப்புகழைப் பெற்றார். என் வீட்டுக்கு எதிரே சிறு காலி மனையில் முருகனுக்கு என கோயில் கட்டி வழிபட்ட காலம் அது. அந்த சின்னஞ்சிறு கோயிலுக்கு எதிரே குழந்தைகளை அமர வைத்து டிஎம்எஸ் பக்திப் பாடல்களைப் பாடினேன். அழியாப் புகழைப் பெறுவதற்காக அல்ல; அன்றைய பொழுதை எப்படியாவது போக்க வேண்டும் என்பதற்காக. வழிபாட்டு இறுதியில் தின்னக்கிடைக்கும் கொண்டக்கடலை சுண்டலுக்காக என்னுடன் சேர்ந்து தெருவில் உள்ள சக சிறுவர்கள் சிறுமிகளும் பாடினர். அப்படி குறுக்கிவிடவும் முடியாது. கூடிமகிழும் நிகழ்வில் குழந்தைகள் அன்போடு இணைந்துகொண்ட காலம் அது.
மறுநாள் 8ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு என்பதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எங்கள் கச்சேரி ஜோராக களைகட்டியது. ''உள்ளம் உருகுதையா... உன்னெழில் காண்கையிலே...'', ''அழகென்று சொல்லுக்கு முருகா...'', ''கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்...'' போன்ற பாடல்களை நாங்கள் பாடி மகிழ்ந்தோம். மூன்றாவது பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் போதுதான் என் முதுகில் பளீர் என ஸ்கேலால் யாரோ அடிக்கிற சத்தம். சரியான அடி... யார் என்னை அடித்தது என்று திரும்பிப் பார்ப்பதற்கும் பையன்கள் நாலு பக்கம் தலைதெறிக்க ஓடினார்கள். ''ஏன்டா நாளைக்கு காலையில அரையாண்டு பரீட்சைய வச்சிகிட்டு உள்ளம் உருகுதையாவா?... உருகும் உருகும்...'' என்று என் மூத்த அண்ணன் அடி பின்னி எடுத்து விட்டார் என்னை... ''போ போ போய் முகம் கைகால் கழுவிகிட்டு வந்து கூடத்துல உக்காந்து படிக்கிற வேலையப் பார். நீ படிக்கிறது எனக்கு கேக்கணும்...வாய்க்குள்ள படிக்கிறேன்னிட்டு மோட்டுவளைய முறைச்சிகிட்டு இருக்கிறதெல்லாம் இங்க நடக்காது...'' என்று நிபந்தனைகள் வேறு.
அன்று இரவே அந்த நண்பர்களை தெருவிளக்கு வெளிச்சத்தில் நாங்கள் வழக்கமாக கதை பேச அமரும் வராவதி மீது சந்தித்தேன். அவர்கள் சொன்னார்கள்... சுண்டல்ல உப்பு கூட.. பாவம் உனக்குதான் அடி... அதிகம் இல்ல? நாங்கள் லாம் தப்பிச்சி ஓடிட்டோம். இவன் அந்தப்பக்கம் நுனா மர தோட்டத்துக்குள்ள நுழைஞ்சிட்டான். அவன் செவ்வரளி தோட்டத்துக்குள் நுழைஞ்சிட்டான். நான் பாந்துவீட்டு திண்ணையில போய் ஒளிஞ்சிகிட்டன். அந்த பாப்பாக்கள் எல்லாம் வீட்டுக்கு ஓடிச்சிடுங்க... பாவம் நீதான் மாட்டிகிட்டே... அப்புறம் ரொம்ப நேரம் கழித்து தெரு அமைதியான பிறகு மறுபடியும் வந்து அந்த சுண்டலை நாங்க எல்லாம் மறுபடியும் கூடி ஆளாளுக்கு கொஞ்சம் எடுத்துகிட்டோம். பரவாயில்ல உப்பு கூட ன்னாலும் நல்லாருந்தது...'' என்றனர்.
''என்னை மட்டும் விட்டுட்டு நீங்கள்லாம் பிரசாதம் சாப்பிட்டிங்க இல்ல'', ''உனக்கு தான் உங்க அண்ணன் பிரசாதம் குடுத்தாறே... ''என்னது பிரசாதமா உங்களுக்குத்தான் நான் பிரசாதம் குடுக்கணும்'' என்று கையை ஓங்கியதும் அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டைநோக்கி ஓட்டம் பிடித்தனர். பாட்டு பாடியதற்காக கிடைத்த அந்த தண்டனையை இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.
அனுபவப் பகிர்வு தொடரும்...
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
22 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
18 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
27 days ago
வாழ்வியல்
27 days ago