ஒற்றை பண்பாட்டை நோக்கி நகர்த்தப்படும் உலகப் பண்பாடு | உலக நாட்டுப்புறவியல் நாள் சிறப்புப் பகிர்வு

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

பன்மைத்தன்மை கொண்ட உலகப் பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி உலக நாட்டுப் புறவியல் நாளாகக் கொண்டாடப் டுகிறது.

இந்தியா ஒரு பன்முக பண்பாடு, கலாச்சாரம் கொண்ட நாடு என்பதால் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது. மானுடம் தோன்றிய காலத்திலிருந்து பின்பற்றப்பட்ட பழக்கங்கள் வழக்கமாகி அவை பின்னாளில் பண்பாட்டின் பிரிக்க முடியாத கூறாக நிலைபெற்றன. ‘வலிமையானது நிலைக்கும், வலிமையற்றது அழியும்’ என்ற கோட்பாட்டின்படி உலகளவில் தோன்றிய பல்வேறு விதமான பழக்க வழக்கங்கள், மக்களின் தேவை கருதி உருவாக்கப்பட்ட பண்பாட்டுச் செயல்பாடுகள் இன்றும் தொடர்கின்றன.

இதுகுறித்து காந்திகிராமம் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஒ.முத்தையா கூறியதாவது: பாடல்கள், பழமொழிகள், கதைப்பாடல்கள் விடுகதைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், மருத்துவ முறைகள், ஊர்ப் பஞ்சாயத்துகள், புழங்குபொருட்கள் என்று தொன்று தொட்டுத் தொடரும் இந்தப் பண்பாட்டுச் செயல்பாடுகள் ஒரு சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கென்று தனித்த பண்பாட்டுக் கூறுகளை, அடையாளங்களை பல்வேறு நிலைகளில் பாதுகாத்தும் பரவலாக்கம் செய்தும் வருகின்றன. அந்தந்த இனத்துக்குரிய தனித்துவங்களை அறிய, உணர்ந்துகொள்ள இந்த அடையாளங்களே அடிப்படையாக அமைகின்றன.

ஐந்திணைகளின் அடிப்படையில் அமைந்த தமிழர் வாழ்வில் அந்தந்த நிலம் சார்ந்தே மக்களின் வாழ்க்கையும் உழைப்பு சார்ந்த இசையும் பாடல்களும், பண்பாடும் தோன்றியுள்ளன. கிளிகளை ஓட்டிப் பெண்கள் பாடிய பாடல்கள், குன்றக் குரவர்கள் பாடிய குரவைப் பாடல்கள், ஆய்ச்சியர் பாடல்கள், கொடிச்சியர் பாடல்கள், அகவன் மகளிர் பாடிய பாடல்கள், பெண்கள் திணை குற்றியபோது பாடிய வள்ளைப்பாட்டுகள், அவர்களிடம் வழங்கி வந்த கதைகள், சடங்குகள் இன்றும் இலக்கியங்களின் வழி அறியப்படுகின்றன.

இத்தகைய தனித்த பண்பாட்டுக் கூறுகளில் இருந்துதான் பண்பாட்டுப் பொதுமைகளை வரையறை செய்யவும் மீட்டெடுக்கவும் முடியும். பண்பாட்டுக் கூறுகளைக் காலந்தோறும் மீட்டுருவாக்கி கடத்தி வருவதில் நாட்டுப்புற வழக்காறுகள் முக்கியமான பங்கை ஆற்றி வருகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள், நீதிக் கதைகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், தொன்மங்கள், கலைகள் என்று நீளும் நாட்டுப்புற வழக்காறுகளில் இந்த அடையாளங்களை நாம் தெளிவாகக் காண முடியும். தொழில், உழைப்பு, சடங்குகள், விழாக்கள், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இவைஇரண்டறக் கலந்து பாசாங்கு ஏதுமற்ற எளிமையான எதார்த்தமான வாழ்வியலை மக்களுக்குக் கற்றுத் தருகின்றன.

பாட்டி, பாட்டன் சொன்ன நீதிக்கதைகள் இன்றும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையாக உள்ளன. ஒரு சமூகம், இனம் தனக்கான பண்பாட்டு மரபுகளை, நாட்டுப்புற வழக்காறுகளிலேயே பாதுகாத்து வந்திருக்கிறது. வாய்மொழி வழக்காறுகளை, பண்பாட்டுச் செயல்பாடுகளை சமூகவியல்,பண்பாடு, மானுடவியல் நோக்கில் ஆராயும்போதுதான் ஓர் இனத்தின் சமூகப்பண்பாட்டு வரலாற்றை முறையாக மீட்டெடுக்கவும் கட்டமைக்கவும் இயலும்.

தற்போது உலகமயமாக்கல், தாராள மயமாக்கல், ஒற்றைமயமாக்கல் என்று வேக மெடுக்கும் நவீனச் செயல்பாடுகளால் பண் பாட்டு அடையாளங்கள் ஓரங்கட்டப்பட்டும் மறைக்கப்பட்டும் வழக்கு இழந்தும் வருகின்றன. இந்தச் சூழலில் எஞ்சியிருக்கும் பண்பாட்டு அடையாளங்களை தேடிக் கண்டறிவதும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதும் அவற்றின் தேவையை உணர்த்திப் பரவலாக்கம் செய்வதும் இந்த உலக நாட்டுப்பறவியல் நாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE