90ஸ் ரீவைண்ட்: பட்டாம்பூச்சியாய் பறந்த பட்டங்கள்!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

முப்பது வருடங்களுக்கு முந்தைய ஏப்ரல், மே மாதங்களின் வெளிர் வானத்தைத் தலை நிமிர்ந்து பார்த்தால், வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப் பறப்பதைப் போல, காகிதப் பட்டங்கள் வானம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும். 90ஸ் சிறுவர்களின் தவிர்க்க முடியாத பொழுதுபோக்குகளில் முக்கியமானது ‘பட்டம் விடுவது’. ‘அந்த வெண்மேகத்தைத் தொடும் அளவிற்கு என் பட்டத்தை விடப் போகிறேன் பார்…’ என சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டே உற்சாகமாகப் பேசுவார்கள். நம் கை விரல்களின் மூலம் இயக்கப்படும் பட்டம், நாமே வானில் பறக்கும் உணர்வைக் கொடுக்கும்.

விடுமுறை காலங்களில் மதியம் சுமார் நான்கு மணி அளவில் பட்டம் விட நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். அதற்கு முன்பு காலை வேளையில் அல்லது முதல் நாளே பட்டங்களைத் தயாரிக்கும் பணியில் சுவாரஸ்யத்துடன் சிறுவர்கள் ஈடுபடுவார்கள். படித்து முடித்த செய்திதாள்களே பட்டங்களைத் தயாரிப்பதற்கான மூலப் பொருள். பிறகு கலர் காகிதத்தின் உதவியுடன் செய்யப்பட்ட பட்டங்களும் வானில் இடம்பிடிக்கத் தொடங்கியது பிற்காலக் கதை. செய்திதாளின் பக்கங்கள் நேர்த்தியாக மடிக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் துடைப்பத்தின் குச்சிகள் பட்டங்களுக்கு சட்டமாக அமையும். குச்சிகளைப் பட்டத்தை தாங்கும் படி வில் போல வளைத்து வடிவமைப்பார்கள். இப்போது இருப்பதைப் போல ‘குயிக்’ ரகப் பசை எல்லாம் அப்போது கிடையாது. வெந்த சாதமே பட்டத்தைக் குச்சியோடு ஒட்ட பயன்படுத்தப்பட்ட கோந்து பொருள். சிலர் அரிதாக மைதா கொண்டு தயாரிக்கப்பட்ட பசையைப் பயன்படுத்துவார்கள்.

முக்கோணப் பட்டம், சதுரப்பட்டம் என வடிவங்கள் உருவெடுக்கும். வண்ணக் காகிதங்களில் பட்டங்களுக்கு வால் பகுதியை விதவிதமாக செய்து உற்சாகமடைவார்கள். வெட்டப்பட்ட துண்டு காகிதங்களின் உதவியுடன் கண், வாயெல்லாம் கூட பட்டங்களுக்குப் பொருத்துவார்கள். பட்டத்தைப் பறக்க விடப் பயன்படும் நூலின் வண்ணத்தைத் தங்கள் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுப்பார்கள்.

வீடுகளுக்கு இடையே, தெருக்களுக்கு இடையே என அறிவிக்கப்படாத பட்டப் போட்டிகள் நடைபெறும். யார் பட்டம் அழகானது என வானில் பட்டத்திற்கான ‘அழகிப் போட்டி’ களை கட்டும். யார் பட்டம் பெரியது, யார் பட்டம் விரைவாக மேலேறுகிறது, யார் பட்டம் உயரமாகப் பறக்கிறது எனப் போட்டி சூடு பிடிக்கும். உயரப் பறக்கும் பட்டத்திற்கே மதிப்பு அதிகம் என்பதால், அதிகம் அலங்காரம் இல்லாமல் அதிக எடையும் இல்லாமல் பட்டத்தை நேர்த்தியாக செய்பவர்களும் குழுவில் இருப்பார்கள்.

சில நேரங்களில் பலக் கோணங்களில் காற்று வீசத் தொடங்கினால், சேவல் சண்டையைப் போல, பட்டச் சண்டைகள் வானில் நடைபெறும். போர்க்களத்தில் வால் வீச்சு நடைப்பெறுவதைப் போல, நூல்களை வெட்டியும் சொடுக்கியும் நூல் வீச்சின் உதவியால் மற்ற பட்டங்களை வீழ்த்த முயற்சி செய்வார்கள். நேர்த்தியாக சொடுக்காவிட்டால், இரண்டு பட்டங்களும் சிக்கிக்கொண்டு கீழிறங்கும் சம்பவங்களும் நடைபெறும். காற்று வேகமாக வீசினால் பட்டம் கிழிந்து கீழ் சரியும் நிகழ்வுகள் பட்டத்து குழுவை சோகத்தில் ஆழ்த்தும். மாஞ்சா தடவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்ட விளையாட்டும் சில பகுதிகளில் தலைதூக்கியது.

மாடி வீட்டில் இருப்பவர்கள், சற்று எளிதாக காற்றின் வழியைப் பிடித்து பட்டத்தைப் பறக்கவிடுவார்கள். மாடி வீடு இல்லாதவர்கள், வெட்ட வெளியில் வேகமாக ஓடி பட்டத்தை உயரப் பறக்க வைக்க முயற்சி செய்வார்கள். பட்டம் உயரப் பறக்கத் தொடங்கிவிட்டால், மாடி வீடு, மாடி இல்லாத வீடு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது.
நூலின் இருப்பைப் பொறுத்து பட்டம் வானில் உயர்ந்துகொண்டே இருக்கும். பல நூல் கண்டுகளை பக்கத்தில் வைத்துக்கொண்டே பட்டங்களைப் பறக்க விடுவார்கள். நூல் இருப்பு குறையத் தொடங்கும் போது, வானில் பறக்கும் பட்டத்தைப் பார்த்துக்கொண்டே நூல் வாங்க கடைகளுக்கு விரைவார்கள்.

பறக்கும் பட்டத்துக்கு லெட்டர்: துண்டு காகிதத்தை நூலுக்கு இடையில் பொருத்தி, நூலோடு சேர்த்து பட்டத்தை நோக்கி மேலேற்றுவார்கள். அந்த துண்டு காகிதத்திற்கு ‘லெட்டர்’ (அ) ‘தந்தி’ என்று பெயர். அந்த டெட்டரில் ஏதாவது கிறுக்கல்கள் இடம்பிடித்திருக்கும். அந்த லெட்டரானது மெது மெதுவாக நூலோடு ஊர்ந்து மேலேறி பட்டத்தோடு ஒட்டிக்கொள்ளும். அதை பார்த்து ‘லெட்டர் சேர்ந்தாச்சு…’ என கீழிருந்து சிறுவர்கள் கூச்சலிடுவார்கள்.

பட்டத்தைக் காற்றின் வீச்சுக்கேற்ப மேலேற்றி கம்பீரமாக பறக்கச் செய்யும் நுணுக்கும் தெரிந்த சீனியர் சிறுவர்கள், ஜூனியர் சிறுவர்களுக்கு ஹீரோவாகத் தெரிவார்கள். காற்றைப் பிடித்து பட்டம் மேலேறிய பிறகு, நூல் பிடித்து பட்டம் விடும் கலையை சிறுவர்கள் படிப்படியாக கற்றுக்கொள்வார்கள்.

காலப்போக்கில் கடைகளிலேயே ரெடிமேட் பட்டம் விற்பனைக்கு வரத் தொடங்கியது. அதன் பிறகு வீட்டில் அமர்ந்து கலைத்திறனுடன் பட்டங்களை செய்யும் பொறுமை குறையத் தொடங்கியது. போகப் போக பட்டங்கள் விட்டு மகிழும் விடுமுறை சிறார்கள் முற்றிலுமாக காணாமலே போய்விட்டார்கள். இப்போது சில மலை வாசஸ்தளங்களின் காற்று நன்றாக வீசும் பகுதிகளில் சில பட்டங்கள் பறப்பதைப் பார்க்கும் போது, 90ஸ் காலப் பட்டங்கள் நினைவுகளாய்ப் பறக்கின்றன.

உயிரற்ற வண்ணத்துப் பூச்சிகளான பட்டங்களை வானில் பறக்க விடும் கலையை சிறுவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் உள்ளத்தை வானில் சிறகடிக்க வைப்போம்!

- டாக்டர் வி.விக்ரம்குமார், கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

முந்தைய அத்தியாயம்: 90ஸ் ரீவைண்ட்: பம்பாய் மிட்டாய் நினைவுகள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்