உணவுச் சுற்றுலா | சேலத்து ’செட்’ ரக தின்பண்டங்கள்!

By டாக்டர் வி.விக்ரம்குமார்

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் புதுமையான தின்பண்டங்கள் இருக்கின்றனவா என்ற ஏக்கம் உங்களுக்கு இருக்கிறதா?! அப்போது நீங்கள் உடனடியாகப் பயணப் பட வேண்டியது சேலம் மாநகருக்கு!

சேலத்துக்கே உரித்தான பல பெருமைகளைப் பற்றிப் பேசும் போது, உணவுப் பிரிவில் ‘சேலத்து செட்’ ரக தின்பண்டங்களுக்கு தனித்த இடம் வழங்கியே ஆக வேண்டும். புகழ்பெற்ற ’Street food’ ரகத்திலான செட் தின்பண்டங்களை, சேலம் மாநகரத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவைக்கலாம். மாலை வேளைகளில் தள்ளு வண்டிக் கடைகளில் செட் ரக தின்பண்டங்களின் விற்பனை படு ஜோராக இருக்கும். டி.வி.எஸ் வண்டியில் எளிமையான கடை அமைத்து செட் ரகங்களை விற்பனை செய்யும் பழமையான வியாபாரிகளையும் பார்க்க முடியும்.

அதென்ன செட் ரகங்கள் என நீங்கள் யோசிக்கலாம்! தட்டுவடை செட், முறுக்கு செட், பண் செட், தக்காளி செட் என விதவிதமான நொறுவைகள் சுவையால் நம்மை மகிழ்ச்சியூட்டும். தட்டுவடை செட் என்று எடுத்துக்கொண்டால் கீழும் மேலும் தட்டுவடையை (தட்டையை) வைத்து, அதற்குள் நிறைய காய் ரகங்களையும், நலம் கொடுக்கும் சட்னி ரகங்களையும் வைத்துக் கொடுப்பார்கள்.

அதாவது, ஒரு தட்டுவடையை வைத்து, அதற்கு மேல் செதுக்கிய பீட்ரூட், கேரட், வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்களை கலவையாக வைத்துக்கொள்வார்கள். அதன் மேல் தக்காளி சட்னி, பூண்டு சட்னி, வெங்காயச் சட்னி, புதினா, இஞ்சி, கறிவேப்பிலை துவையல் போன்ற அனைத்தையும் சிறிதளவு தடவும் பணி தொடரும். வியாபாரிகள் தட்டுவடை செட் தயாரிப்பதைப் பார்க்கும் போதே நாவில் எச்சில் சுரக்கும். தடவப்பட்ட சட்னி ரகங்களுக்கு மேல் சீரகத் தூள் மற்றும் மிளகுத் தூளைத் தூவும் போது, நமக்கோ பசி உணர்வு அதிகரிக்கும்.

இறுதியாக தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் இடம் பிடிக்கும். மேற்சொன்ன கலவைக்கு மேல் மீண்டும் ஒரு தட்டுவடையை வைத்து மூடி கொடுப்பார்கள். வாழை இலையில் வைத்து செட் ரகங்களைப் பரிமாறுவார்கள். வாழை இலையின் வாசனையோடு செட் பண்டத்தின் வாசனையும் சேர்ந்து நம்மை சாப்பிடச் சொல்லி நாவைக் கிள்ளும்!

கட்டை விரல் மற்றும் மோதிர விரலுக்கு நடுவில் தட்டுவடை செட்டை மேலும் கீழும் பொருத்தி, அப்படியே வாய்க்குள் புகுத்தி, கடித்து சாப்பிடுவது தான் செட் வகைகளை முறையாக சாப்பிடும் யுத்தி! பற்களால் செட் பண்டத்தைக் கடிக்கும் போது, தட்டுவடையை மட்டும் தான் கடிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். மீதமிருக்கும் துருவிய காய் ரகங்களும், சட்னி வகைகளும் நீர்த்துவமாய் கரைந்து இரைகுழலுக்குள் இறங்கும். ஐந்து செட் ரகங்களின் விலை இருபது ரூபாய் மட்டுமே!

செட் திண்பண்டங்களில் ஆரோக்கியத்துப் பஞ்சமே கிடையாது. சேர்க்கப்படும் காய்களின் மூலம் உடலுக்குத் தேவையான நுண்ணூட்டங்கள் கிடைக்கும். செரிமான உபாதைகளை சரி செய்து, பசி உணர்வைத் தூண்டுவதோடு, மலத்தை இளகலாக்கவும் அதில் சேர்க்கப்படும் இஞ்சி, கறிவேப்பிலை, சீரகத்தின் சாரங்கள் உதவும்.

முறுக்கு செட், தக்காளி செட்: செட் தயாரிக்கும் போது, தட்டுவடைக்கு பதிலாக முறுக்கு, தக்காளி துண்டுகளை வைத்தால் ஒரு புதுமையான சுவையைக் கொடுக்கும். தட்டுவடை செட்டோடு சேர்த்து, முறுக்கு, தக்காளி செட்டும் மாலை நேர விற்பனையில் முன்னணியில் இருப்பவை. சமீபமாக முட்டை செட், அரிசி மாவிற்கு பதிலாக சிறுதானிய மாவு சேர்த்து தயாரிக்கப்படும் சிறுதானிய தட்டுவடை செட்களும் பிரபலம் அடைந்திருக்கின்றன.

மேலும் செட் கடைகளில் நொறுக்கல், தட்டுப் பொரி, கைப்பக்குவத்தில் இடித்த கடலை உருண்டை, எள்ளுருண்டை என நொறுவைகளும் கிடைக்கின்றன. செட் ரக தின்பண்டங்களின் காரம் நாவில் ஒட்டிக்கொண்டிருந்தால், அதை போக்க கடலை உருண்டைகளும், எள்ளுருண்டைகளும் துணை நிற்கின்றன.

’செட்’ ரக பண்டங்களை எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம். ஆனால் கடைகளில் கிடைப்பது போல பல வகையான சட்னி, துவையல் ரகங்களை ஒரே சமயத்தில் தயார் செய்வது கொஞ்சம் கடினம் அல்லவா! நமது விருப்பத்திற்கேற்ப சில வகையான சட்னி ரகங்களை வைத்தும் சுவையான செட் தின்பண்டங்களைத் தயாரிக்கலாம்.

செட் கடைகளில் எப்போதும் வயது வித்தியாசமின்றி கூட்டம் அலை மோதுகிறது. துரித உணவுகளைப் போல உடல் நலப் பிரச்சனைகளைக் கொடுக்காமல் ஆரோக்கியத்தை வாரி வழங்கும் என்பதால் ‘நலம் கொடுக்கும் தின்பண்டம்’ என செட் ரகங்களுக்குப் உணவுப் பட்டம் சூட்டலாம். அதே வேளையில் சுகாதாரமான ’செட்’ உணவு கடைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

பழமைமிக்க சேலத்து வீதிகளில் உலாவி, வித்தியாசமான செட் ரக தின்பண்டங்களை சுவைக்கத் தவறாதீர்!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் | தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

> முந்தைய அத்தியாயம்: உணவு சுற்றுலா: கொல்லிமலையின் முடவாட்டுக்கால் சூப்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்