இன்று (ஆக.9) உலக பழங்குடிகள் தினம் - புதுப்பொலிவு பெறுமா பழங்குடியினர் வாழ்வு?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தொல்குடிகளான பழங்குடியின மக்களின் மொழி, பண்பாடு, வாழ்வியல், வாழ்வாதார உரிமைகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-ம் தேதியை உலக பழங்குடிகள் தினமாகக் கொண்டாடி வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘தன்னுரிமை மாற்றத்தின் முகவர்களாக பழங்குடி இளைஞர்கள்’ என்னும் முழக்கத்தோடு ஐ.நா. சபை களமிறங்கியுள்ளது.

தொல்குடிகள், முதுகுடிகள், ஆதிகுடிகள், பழங்குடிகள், திணைக்குடிகள், பூர்வீகக்குடிகள் என்றெல்லாம் அறியப்படும் இவர்கள், உலகளாவிய நிலையில் 370 மில்லியன் பேர் வாழ்ந்து வருகின்றனர்.

உலக மக்கள் தொகையில் இது மிகவும் சொற்பம் (5 சதவிதம்) என்றாலும் 7000-க்கும் அதிகமான மொழிகள், 5000-க்கும் மேற்பட்ட பண்பாட்டு நடத்தைகளை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவில் 702 பழங்குடி இனங்கள் அடர்ந்த மலைகள், வனங்கள், சமவெளிகள், தீவுகளில் பழங்காலத் தன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரும், பேராசிரியருமான ஒ.முத்தையா கூறியதாவது: 1961-ல் நடந்த கணக்கெடுப்பில் நாட்டில் 1,100 மொழிகள் இருந்தன. 2001-ல் அது 850-ஆகக் குறைந்து 250-க்கும் மேற்பட்ட மொழிகள் மறைந்தே போயின. பல்வேறு பழங்குடியின மொழிகள் அழிவை நோக்கி செல்கின்றன. பழங்குடிகள் பலர் தங்களது தாய் மொழியைவிட்டு, பிழைப்பு தேடிப் பொது மொழியை நாடிச் செல்வதும் அவர்களது பாரம்பரிய மொழியின் அழிவுக்கு காரணம்.

மொழிகள் பேச்சுக்காக மட்டும் அல்ல. அதில் தொல்லியல் அடையாளங்களும், பாரம்பரிய அறிவு முறைகளும், சடங்குகளும், பண்பாட்டுக் கூறுகளும் அடங்கியுள்ளன.

தமிழகத்தில் தோடர், கோத்தர், இருளர், கசவர், முள்ளுக் குரும்பர்,பொட்டக் குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், பளியர், குறவர், மலைமலசர், மலைவேடர், காணிக்காரர், மலையாளி, காடர், முதுவர் என்று 36 வகையான பழங்குடியினத்தவர் வசிக்கின்றனர். நீலகிரியில் மட்டும் 7 வகையான பழங்குடியினர் உள்ளனர்.

சமீபத்தில் நரிக்குறவர்கள் 37-ஆவதாகப் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

நீலகிரியில் வாழும் தோடர்கள், இயற்கையை வர்ணித்துப் பாடுவதில் வல்லவர்கள். அவர்களின் இசை மொழி தனித்துவமானது. தோடர்களின் கைத்திறனில் உருவாக்கப்படும் ‘பூத்குளி’ என்ற ஆடைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. கோத்தர் இன மக்கள் கைவினைத் தொழில்கள் மற்றும் இசைக்கருவிகளை இசைப்பதில் திறமையானவர்கள்.

இருளர்கள் பாம்புகளைக் கையாள்வதில் புகழ் பெற்றவர்கள். ஆனைமலைக் காடர்கள் யானைகளின் போக்குகளை அறிவதில் வல்லவர்கள். பழநி மலையில் வாழும் பளியர்கள் மலைத்தேன் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். கொல்லிமலை மலையாளிகள் மரபுவழி வேளாண்மையில் திறன் உடையவர்கள். பொதிகை மலையில் வாழும் காணிக்காரர்களின் மாந்திரீக மருத்துவம், பணியர்களின் ஒப்பனை போன்றவை தனித்துவமானவை.

இயற்கை சார்ந்த அறிவு, பருவ நிலை மாற்றங்கள் குறித்த தெளிவு என்று ஒவ்வொரு பழங்குடியும் ஒவ்வொரு விதமான தனித்திறன் பெற்றுள்ளனர். பாரம்பரிய வாழ்க்கை முறைகளை தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர்.

பட்டியல் இனத்தில் சேர்க்க போராட்டம்: 1976-ல் அரசின் பட்டியல் இன மறுசீரமைப்பில் பல பழங்குடியினர் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க போராடி வருகின்றனர்.

பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. பட்டா வீடு, நிலம், வனப்பொருள் சேகரிப்பு உரிமை, வனத்தை பாதுகாக்க இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை பழங்குடிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். குடியரசுத்தலைவர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது பார்வை தங்கள் மீது படும் என்ற நம்பிக்கையும் அம்மக்களிடையே உள்ளது.

பழங்குடி இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அம்மக்களின் வாழ்வில் புதுப்பொலிவை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

17 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

25 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்