கேரளா | 11 குடும்பஸ்ரீ உறுப்பினர்களுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.250-க்கு லாட்டரி டிக்கெட் வாங்கி ரூ.10 கோடி வென்றனர்

By செய்திப்பிரிவு

மலப்புரம்: கேரள மாநிலத்தில் 11 குடும்பஸ்ரீ உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து ரூ.250 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வாங்கியுள்ளனர். அவர்கள் தற்போது அந்த டிக்கெட்டில் ரூ.10 கோடியை பரிசாக வென்றுள்ளனர். அது குறித்து பார்ப்போம்.

கேரள மாநிலத்தில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு சார்ந்து அமல்படுத்தப்பட்ட குடும்பஸ்ரீ மிஷனின் ஒரு பகுதியாக மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகராட்சியில் 11 பெண்கள் ஹரிதா கர்மா சேனாவில் பணியாற்றி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள வீடு தேடி சென்று மக்காத குப்பைகளை சேகரிப்பது தான் இவர்களது பணி.

11 பேரும் வறியவர்கள். அதனால் 11 பேரும் இணைந்து 250 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். தங்களது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் வாங்கிய லாட்டரி டிக்கெட் ஜாக்பாட் அடித்துள்ளது. அதன் மூலம் ரூ.10 கோடி வென்றுள்ளனர். இந்த டிக்கெட் அந்த மாநில அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி.

அவர்கள் வாங்கிய டிக்கெட் தற்போது பரப்பனங்காடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகையில் வரி மற்றும் முகவருக்கு சேர வேண்டிய கமிஷன் போக மீதமுள்ள தொகை 11 பேர் அடங்கிய குழுவை சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE