பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் மதுரை நாயக்கர் மகால்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் கி.பி.1636-ம் ஆண்டு அழகிய அரண்மனையை (மகால்) கட்டினார். இத்தாலிய கட்டிடக்கலை வல்லுநர் ஒருவர் இந்த அரண்மனையை வடிவமைத்துள்ளார்.

இந்திய, இசுலாமிய, ஐரோப்பியக் கட்டிடக் கலைகளின் கூட்டுக் கலைவையாக இந்த அரண்மனை இன்றுவரை உயிர்ப்புடன் கம்பீரமாக நிற்கிறது. திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர் திருச்சியில் ஓர் அரண்மனையைக் கட்ட முடிவெடுத்தார். அதுவும் மதுரையில் தனது தாத்தா கட்டியதைப் போன்று இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக அவர், இந்த அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து அதன் பொருட்களை திருச்சிக் கொண்டுசென்று பணியைத் தொடங்கினார்.

ஆனால், இடையில் சொக்கநாத நாயக்கர் சந்தித்த பல்வேறு சவால்கள், காலச்சூழலால் அவரால் திருச்சியில் தனது தாத்தாவின் அரண்மனை போன்று கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இறுதியில் அரண்மனை கட்டும் திட்டமே கைவிடப்பட்டதாக வரலாறு. இச்சூழ்நிலையில் மழை, வெயில் போன்ற இயற்கைப் பேரிடரால் பலமுறை மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை சேதமடைந்தது. இதனால், பழைய அரண்மனையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே தற்போது மீதமுள்ளது. இந்த அரண்மனையும் ஆங்கிலேயர் இந்தியா வருவதற்கு முன் அழியும் நிலையில் இருந்தது.

ஆங்கிலேயர் இந்த அரண்மனையின் கட்டிடக் கலையையும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்த்து வியந்தனர். சென்னை ஆளுநராக இருந்த லார்டு நேப்பியர் இந்த அரண்மனையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். அப்படி ஆங்கிலேயேரின் ஆட்சியில் பாதுகாத்ததுதான் தற்போது எஞ்சியுள்ள திருமலநாயக்கர் அரண்மனை. தற்போதைய தலைமுறையினர் சுற்றுலாத் தலமாகப் பார்ப்பதோடு கட்டிடக் கலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலேயருக்குப் பிறகு தொல்லியல் துறை இந்த அரண்மனையை, கடந்த 71 ஆண்டுகளாக நினைவுச் சின்னமாகப் பாதுகாத்து வருகிறது.

சுவர்கள் சேதம்: உள்ளூர் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை இந்த அரண்மனையின் அமைப்பையும், அதன் நுட்பமான கட்டிடக் கலையையும் பார்த்து வியக்கின்றனர். ஆனாலும், இந்த அரண்மனையின் பிரம்மாண்ட சுவர்களையும், அதன் கலைநயத்தையும் பாதுகாக்க தொல்லியல்துறையினர் போராட வேண்டியநிலைதான் உள்ளது. சுற்றுலா வருவோரில் சிலர் இந்த அரண்மனைச் சுவரில் தங்கள் பெயர்களை ஆணியால் எழுதிச் சேதப்படுத்துகின்றனர்.

தற்போது கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு கண்காணித்தாலும் தூண்களைச் சேதப்படுத்துவதை தொல்லியல் துறையால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இது போன்ற செயல்கள் அரண்மனையின் அழகையும், அதன் உறுதித் தன்மையையும் வலுவிழக்கச் செய்கிறது. இதனால், அரண்மனை கட்டிடச் சுவர்களையும், அதன் பிரம்மாண்ட தூண்களையும் தொல்லியல் துறை பாதுகாக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து அவ்வப்பது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில், மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தில் ரூ.11 கோடியில் அரண்மனையின் தரைத்தளம், நாடக சாலை, பள்ளி அறை மற்றும் தூண்களை அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு உள்ளிட்ட பூச்சுப்பொருட்களின் கலவையை சில வாரங்கள் காயவைத்து புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தூண்களின் அடிப்பகுதியைச் சுரண்டி அதன் உறுதித்தன்மையை பொறியாளர்கள் ஆய்வு செய்து தூண்களை புரனமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அரண்மனையின் தரைத்தளம் முழுவதையும் பெயர்த்தெடுத்து அதில் தொல்லியல்துறை பரிந்துரைத்த கருங்கற்கள் பதிக்கப்பட உள்ளன. பராமரிப்புப் பணிகள் ஒரு புறம் நடந்தாலும் மற்றொரு புறம் சுற்றுலாப் பயணிகளும் அரண்மனையைச் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்