அழிவின் விளிம்பில் 14-ம் நூற்றாண்டு சிற்பங்கள், கல்வெட்டுகள் - படவேடு கிராமத்தில் தொடரும் வேதனை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: படவேடு கிராமத்தில் அழிவின் விளிம்பில் உள்ள 14-ம் நூற்றாண்டு சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே படவேடு எனும் பகுதி, 13-ம் நூற்றாண்டு தொடங்கி சம்புவராய மன்னர்களின் படை நகரமாகவும் தலை நகரமாகவும் புகழ் பெற்று விளங்கிய நகரமாகும். இவர்களது ஆட்சி காலத்தில், நிலப் பகுதியில் அகக்கோட்டை (பெரிய கோட்டை), புறக்கோட்டை (சின்னகோட்டை) எனும் 2 கோட்டைகளும், ஜவ்வாது மலை மீது (ராஜகம்பீரன் மலை) ஒரு மலைக் கோட்டையையும் அமைத்துள்ளனர்.

அவர்களின் அரசும், சிறப்புற்று இருந்த காலங்களில் படவேடு கோட்டை நகரைச் சுற்றிலும் பல்வேறு கோயில்களை எழுப்பியிருந்தனர். அக்கோயில்கள் யாவும், போரிலும் காலப்போக்கிலும் அழிந்தன. சில கோயில்கள் மட்டும் வழிபாடு செய்யும் நிலையில் உள்ளன. படவேடு கிராமத்தில் அரசமரத்தின் அருகேஉள்ள மாரியம்மன் கோயிலில் பல்வேறு சுவாமி சிலைகள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இச்சிற்பங்கள் மிகவும் முக்கிய மானவை ஆகும். கைகூப்பிய நிலையில் உள்ள ஒரு சிற்பம் அரசன் அல்லது படைத்தலைவன் ஒருவனின் உருவமாகும். அடுத்து கரண்ட மகுடத்துடன் கழுத்துவரை துண்டுபட்டு காணப்படும் சிற்பம் தெய்வ திருமேனியின் உருவமாகும். அதே போன்று கையில் சூலம் தாங்கியபெண் சிற்பம், நரசிம்மர் சிற்பம் ஆகியவை ஒரே இடத்தில் காணப்படுகின்றன.

இதே போன்று கோயில்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வரலாற்றை கூறும் சிற்பங்கள் பாதுகாக்கப்படாமல் உள்ளன. இவற்றுக்கு அருகே கோயில் வாயிற்படியில் சில கல்வெட்டுகளும், அரச மரத்தடிக்கு அருகே ஒரு கல்வெட்டும் உள்ளது. கழிவுநீர் கால்வாய் அமைக்க, கல்வெட்டை பயன்படுத்திய நிலை உள்ளது.

இவையாவும் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்புவராய மன்னர்கள் கால சிற்பங்கள் ஆகும். இங்குள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் படியெடுத்து படித்தால் பல வரலாற்று செய்திகள் அறிய வரும். இச்சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அழிவின் விளிம்பில் உள்ளன. வரலாற்று சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை பாதுகாக்க படை வீட்டில் அருங்காட்சியகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

16 days ago

வாழ்வியல்

18 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

20 days ago

வாழ்வியல்

27 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்