தருமபுரி - பூதிநத்தம் அகழாய்வில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள், எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பூதிநத்தம் அகழாய்வில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள், எலும்புக் கூடுகள் போன்றவை கிடைத்து வருகின்றன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பூதிநத்தம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 17 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 52 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் ஒரு கற்கருவி கண்டறியப்பட்டது.

22 செ.மீ நீளம் கொண்ட இது ஏர் கலப்பையாக அல்லது வேட்டைக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் முதல்கட்டமாக கணித்துள்ளனர். இது டோலராய்ட் என்னும் கல் வகையைச் சேர்ந்தது. மேலும், சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், சூது பவள மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான உருவங்கள் போன்றவையும் கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு குழியில் விலங்குகளின் எலும்புகள் ஒரே இடத்தில் மொத்தமாக கிடைத்துள்ளன. மேலோட்டமான ஆய்வில் இவை குதிரை போன்ற விலங்கினங்களின் எலும்பாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவை குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன.

இது குறித்து, தருமபுரி மாவட்ட தொல்லியல் ஆர்வலர்கள் கூறியதாவது: பூதி நத்தம் பகுதியில் சுமார் 3,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைத்தன்மையும், மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் அகழாய்வில் கிடைத்து வருகின்றன. தற்போது கிடைத்துள்ள விலங்கு எலும்புகள் மூலம், இவ்வகை விலங்குகள் பயணம், சுமைகள் ஏற்றிச் செல்லுதல் போன்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்கின் எலும்புகள் கிடைப்பதால் அவை மொத்தமாக உயிரிழந்ததற்கான சூழல் குறித்தும் ஆய்வு தொடர்கிறது. தருமபுரி மாவட்டம் தொல்லியல் சுவடுகளுக்கான பெரும் கருவூலமாக எப்போதுமே இருந்து வருகிறது. தற்போதைய ஆய்விலும் அது வெளிப்பட்டு வருகிறது. பூதிநத்தம் மட்டுமன்றி அருகிலுள்ள நலப்பரம்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள அகழாய்விலும் நிறைய தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என நம்புகிறோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE