திருமன்பட்டி பகுதியில் பிரமிக்க வைக்கும் அதிசய பாறைகள்!

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கை அருகே திருமன்பட்டி பகுதியில் பிரமிக்க வைக்கும் அதிசய பாறைகள் நிறைந்த குன்றுகள் சுற்றுலா தலமாக்கப்படுமா என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிவகங்கை அருகே மலம்பட்டியில் இருந்து பிரான்மலை வரை ஆங்காங்கே சிறு சிறு மலைக் குன்றுகள் காணப்படுகின்றன. இதில் ஏரியூர் மலைக் குன்றில் 15 டன் கொண்ட ஆகாச பாறை உள்ளது. இந்தப் பாறை கையளவு நுனி பிடிமானத்தில் நிற்கிறது. அதேபோல் அருகேயுள்ள திருமன்பட்டி பகுதியில் உள்ள குன்றிலும் பல்வேறு வடிவங்களில் அடுக்கி வைத்தாற்போல் பிரமிக்க வைக்கும் அதிசய பாறைகள் காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளை அருகில் சென்று பார்த்தால் உருண்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக இந்தப் பாறைகள் அப்படியே நிற்கின்றன. ஆனால் தொடர்ந்து வீசும் காற்றால் சேதமடைந்து பாறைகள் கரைந்து வருகின்றன. இந்த அடுக்குப் பாறைகள் ஏராளமாக காணப்படுகின்றன. மேலும் அப்பகுதி யில் 3 நபர்கள் சென்றுவரும் அளவுக்கு குகை யும் உள்ளது.

அதிசயப் பாறைகள் நிறைந்த குன்றுகளை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தொல்லியல் ஆர்வலர் புலவர் காளிராசா கூறியதாவது: திருமன்பட்டி - மலம்பட்டி அருகேயுள்ள குன்றுகளில் அதிசயப் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. ஒவ்வொரு பாறையும் கூலாங்கற்களை அடுக்கியது போல் காட்சியளிக்கிறது.

வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இடத்தில் ஏராளமான சுனைகள் காணப்படுகின்றன. மேலும் ஏரியூர் ஆகாசப் பாறை அருகேயும், திருமலையிலும் பாறை ஓவியங்கள் உள்ளன. இதனால், திருமலையைப் போன்று திருமன்பட்டி, ஏரியூரில் காணப்படும் மலைக்குன்றுகளை சுற்றுலாத் தலமாக அறிவித்தால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE