வேலூர்: ஜவ்வாதுமலை தொடரில் உள்ள கோவிலூரில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்தி பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலநாதர் கோயிலை புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கல்வெட்டு ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைத் தொடரில் உள்ள கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூலநாதர் கோயிலை சமீபத்தில் ஆய்வு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ம.காந்தி கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,900 அடி உயரம் உள்ளது. ஜவ்வாதுமலை தொடரில் உள்ள கோவிலூர் என்ற ஊர் பல்லவர்கள் காலத்தில் இருந்து பண்பட்ட மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். கோவிலூரைச் சுற்றிலும் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன.
» கீழடி, பொற்பனைக்கோட்டையில் தங்க அணிகலன் கண்டெடுப்பு
» சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது பொருநை நாகரிகம்: தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து
கோவிலூரில் உள்ள திருமூலநாதர் கோயிலின் கருவறையின் தெற்கு பக்கத்தில் முப்பட்டைக் குமுதத்தில் வீர ராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘கங்க குறுநில மன்னன் பிரிதிவி கங்கன் அரசகங்கள் நாயன் வருகிறான்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘பிருதிவி கங்கன் கூத்தாடுந்தேவன்’ என்பவரின் பெயர் உள்ளது.
இந்தக் கல்வெட்டில் திருமூலநாதர் கோயிலுக்கு எதிரில் ஒரு குளம் வெட்டிய தகவலும் பெரிய ஏரிக்கு தும்பு அமைத்துள்ள தகவலும் உள்ளது. கருவறையின் தெற்கு சுவரில் விஜய நகர மன்னரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. திருமூலநாதர் கோயிலுக்குரிய இரண்டு லிங்கங்கள், பிள்ளையார், திருமால், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் கற் சிலைகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.
பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒரு நடுகல் திருமூலநாதர் கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்படுகிறது. கோயிலுக்கு தெற்கு பள்ளத்தாக்கில் பெரிய ஏரிக்கு கிழக்கில் விவசாய நிலத்தில் பிற்கால பல்லவர்கால நடுகல் சாய்ந்த நிலையில் உள்ளது. அதே காலத்தைச் சேர்ந்த ஒரு நடுகல் இடுப்புக்கு மேல் உடைந்த நிலையில் உள்ளது.
அதே நிலத்தில் ஒரு கல்செக்கும் புதைந்துள்ளது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு” என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ. இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன.
ஒரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது. இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர். செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
புலி குத்திப்பட்டான் நடுகல்: திருமூலநாதர் கோயில் கோபுரத்துக்கு வடகிழக்கு பக்கத்தில் ஒரு புலிக்குத்தி நடுகல் உள்ளது. “மங்கல பரிதந் மூலகத்துக்கு மகன் வில்லி புலி குத்திப் பட்டான்” என்ற கல்வெட்டும் உள்ளது. இந்த புலிக்குத்திக் கல், 10-ம் நூற்றாண்டுக்குரியது. அதேபோல், கோவிலூர் ஊருக்கு நுழையும் முன்பாக சாலை ஓரத்தில் வேலியில் மறைந்துள்ள ஒரு அரசனின் சிற்பம் நிற்கிறது. அதில், “கலிதாநம் தந்தான் அழகிய கங்க நாடாழ்வான்” என்று கல்வெட்டுள்ளது.
இவர், ஒரு கங்க குறுநில அரசராவார். இந்தச் சிற்பம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஜவ்வாதுமலை தொடரில் கோவிலூர் திருமூலநாதர் கோயில் ஒரு சிறந்த கோயிலாகும். திருமூலநாதர் கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு செய்தால் இந்த மலையில் வாழும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். சமவெளியில் வாழும் மக்களும் இந்த கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதால் ஒரு நல்ல சுற்றுலாத்தலமாகவும் இருக்கும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
14 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
4 days ago
வாழ்வியல்
6 days ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
10 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
19 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago