பாம்புகள் பழி தீர்க்குமா?: இன்று சர்வதேச பாம்புகள் தினம்

By செய்திப்பிரிவு

தென்காசி: இந்த உலகில் அனைத்து உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி சர்வதேச பாம்புகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் சேக் உசேன் (28) என்ற இளைஞர், வீடுகளில் புகுந்த ஆயிரக்கணக்கான பாம்புகளை பாதுகாப்பாக மீட்டு, வனத்துறையின் அனுமதியுடன் வனப்பகுதியில் விட்டுள்ளார்.

பாம்புகள் குறித்து பல்வேறு வதந்திகளை மக்கள் நம்பும் நிலையில், பாம்புகள் குறித்து சேக் உசேன் கூறியதாவது: உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 70 வகையான பாம்புகள் மட்டும் நஞ்சுடையது.

இந்த 70 வகை பாம்புகளில் 5 சதவீத வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதாவது மனித குடியிருப்புகளில் மனிதர்களோடு ஒத்து வாழக்கூடிய, மனிதர்களை தாக்க கூடியது. அவற்றில் நல்ல பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் போன்றவை கொடிய நஞ்சுடைய பாம்புகள்.

மனித குடியிருப்பு பகுதியில் அதிகமாக காணப்படக்கூடிய சாரைப்பாம்பு, மலைப்பாம்பு, மண்ணுளிபாம்பு, தண்ணீர்பாம்பு, கொம்பேரி மூக்கன் போன்றவை நஞ்சற்ற பாம்புகளாகும். பச்சைபாம்பு, பூனைபாம்பு போன்ற பாம்புகள் குறைந்த நஞ்சுடையவை. இந்தியாவில் பொதுவாக பாம்புகளை பற்றிய தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்பி வருகின்றனர்.

பாம்பு பால் குடிக்கும், பழிவாங்கும், மகுடிக்கு மயங்கும், நல்லபாம்பும் சாரைபாம்பும் இனச்சேர்க்கையில் ஈடுபடும், பாம்பின் தலையில் மாணிக்க கல் உள்ளது என்பன போன்ற தவறான வதந்திகளை நம்புகின்றனர். நல்ல பாம்புகளில் ஆண் மற்றும் பெண் இனப் பாம்புகள் உள்ளன. அதேபோல் சாரை பாம்பிலும் ஆண், பெண் இனம் உள்ளன.

பாம்புகள் விவசாயிகளின் நண்பன். ஒரு சாரைப்பாம்பு ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளை உணவாக உட்கொள்ளும். விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தக்கூடிய எலிகளை கட்டுப்படுத்தி விவசாய பயிர்களை பாதுகாக்கின்றன. பாம்புகளை இடையூறு செய்தால் மட்டுமே அவை தன்னை பாதுகாத்துக்கொள்ள மனிதர்களை தாக்குகின்றன.

நாம் பாம்புகளை மிதிக்கும்போதோ அல்லது அதை அடிக்க முயற்சி செய்யும்போதோ மட்டும் தான் மனிதர்களை தாக்குகின்றன. மனிதர்களை தாக்கும் அனைத்து பாம்புகளும் நஞ்சுடையதல்ல. நல்ல பாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தையும், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் பாம்புகளின் நஞ்சு ரத்தத்தை உறைய வைத்து மரணத்தை ஏற்படுத்தும்.

பாம்புகள் ஒருபோதும் மனிதர்களை தேடி துரத்தி தாக்குவதில்லை. ஏனென்றால் மனிதர்கள் பாம்புகளுக்கு இயற்கை இரையல்ல. வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி இல்லாமல் பாம்புகளை தனி மனிதர்கள் பிடிக்கக் கூடாது. பாம்புகளை அடிப்பது, வேறு இடத்துக்கு கடத்துவது குற்றமாகும்.

பாம்புகள் மனிதர்களுக்கும், விவசாயிகளுக்கும், மருத்துவத் துறையிலும் முக்கிய பங்களித்து வருகின்றன. பாம்புகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ நாகங்கள்: ஆசியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொடிய விஷமுள்ள ராஜநாகங்கள் வசிக்கின்றன. பாம்பு இனங்களில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும் திறன் கொண்ட இந்த பாம்புகள் சுமார் 15 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இவை தாக்கினால் கட்டாயம் மரணம் ஏற்படும். இதன் நஞ்சு ஒரு யானையை அரைமணி நேரத்தில் கொல்லும் திறன் உடையது. ராஜநாகங்கள் பொதுவாக மற்ற பாம்புகளை இரையாக உட்கொள்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

15 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

28 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

29 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

30 days ago

வாழ்வியல்

1 month ago

வாழ்வியல்

1 month ago

மேலும்