Chandrayaan 3 | பயணம் வெற்றிபெற வாழ்த்தி மணற் சிற்பம் வடித்த சுதர்சன் பட்நாயக்!

By செய்திப்பிரிவு

பூரி: இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள சந்திரயான்-3 விண்கலம் அடுத்த சில மணி நேரங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்தியாவின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்தி மணற் சிற்பம் வடித்துள்ளார் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

அதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். “இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு எனது வாழ்த்துகள். 500 இரும்பு கிண்ணங்களை கொண்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணம் வெற்றி பெறட்டும்” என அவர் தெரிவித்துள்ளார். ராக்கெட் வடிவில் இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது.

ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். இந்த திட்டம் வெற்றியடைந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE