எழுத்துலகில் பெண் படைப்பாளிகள் பெருக வேண்டும்: எழுத்தாளர் ஓவியா

By ஆர்.ஷபிமுன்னா

சென்னை: ஆணாதிக்க எழுத்துலகில் பெண் எழுத்தாளர்கள் பெருக வேண்டும் என்று எழுத்தாளர் ஓவியா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிறுவனங்கள் பதிவுத்துறையின் சென்னை அலுவலகத்தில் உதவிப் பதிவாளராக இருப்பவர் ஜி.உமா மகேஸ்வரி. இவர், யுபிஎஸ்சியின் 2019 பேட்ச்சில் ஐசிஎல்எஸ் எனும் இந்திய பெருநிறுவன சட்டப் பணி பெற்றவர். அதிகாரி உமா, சிறுவயது முதலே தாம் பார்த்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்கள், உறவினர்களிடம் சுவையாக எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டவர். இதன் பலனாக அதிகாரியான பின்பு அவர் தம் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களை ஆங்கிலக் கதைகளாக பதிவாக்கி உள்ளார்.

இந்த கதைகளின் முன்னோட்டமாக ஆங்கிலக் கவிதைகளையும் அதிகாரி உமா எழுதி வந்துள்ளார். இந்த இரண்டையும் தொகுத்து அவர், ‘Dice of Dreams ("கனவுகளின் பகடை")’ எனும் பெயரில் ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதிகாரி உமாவின் நூல் வெளியிட்டு விழா சென்னையின் ஹாடவ்ஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பெண் உரிமை செயற்பாட்டாளரும், பெரியாரியவாதியுமான ஓவியா, பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். "உமாவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் ஆணா? பெண்ணா? எனக் குறிப்பிடாமலே எழுதியுள்ளார். இது படிக்கும் போது கதையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு நூலின் எழுத்தாளர் உமாவின் எழுத்துக்களில் இடம்பெற்றுள்ள தனித்துவம் காரணம் எனக் கருதுகிறேன். இவர் போன்ற பெண் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆணாதிக்க எழுத்துலகில் பெண்கள் பெருக வேண்டும்.’ என ஓவியா தெரிவித்தார்.

அதிகாரி உமாவின் இந்த முதல் நூலை, டாக்டர்.திருமலைமுத்து வெளியிட்டார். இந்நூலை, ஓய்வுபெற்ற ஐசிஎல்எஸ் அதிகாரி ஜோசப் ஜாக்ஸன் பெற்றுக் கொண்டார். இதே மேடையில், அதிகாரி உமாவின் நூல், ஒலி வடிவத்திலும் வெளியிடப்பட்டது. இதை இந்திய ஆங்கில மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் கே.இளங்கோ வெளியிட்டுப் பேசினார்.

இந்திய அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில சிறப்பு பயிற்சியை அளிக்கும் பேராசிரியரான அவர், "அச்சுத் தொழில் என்பது 1440 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அப்போது, வாசகர்கள் படிப்பதற்கான நூல்கள் பற்றக்குறையாக இருந்தன. ஆனால், இன்று 130 மில்லியன் நூல்கள் உள்ளன. உலக அளவில் அன்றாடம் சுமார் 11,000 நூல்கள் அச்சிடப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதில் 4 மில்லியன் நூல்கள் சேருகின்றன. நூல்களின் கடல்களில் வாழும் நாம் அவற்றைப் படிக்க வேண்டுமெனில் நம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும்.

அந்தவகையில், எழுத்தாளர் உமாவின் இந்த முதல் நூல், ருசித்து படித்து ஜீரணிக்கக் கூடியது. வழக்கமாக ஒரு நூலின் முன் அட்டையைப் பார்த்து அதை வாங்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. அந்தவகையில், இதன் அட்டைகளும் வாசகர்களை படிக்கத் தூண்டுவதுடன், வித்தியாசமானக் கனவுகளைப் பற்றி பேசுகிறது" எனத் தெரிவித்தார்.

மாநில தகவல் ஆணையரான டாக்டர்.கே.திருமலைமுத்து ஐசிஎல்எஸ், மத்திய செய்தி ஒலிபரப்புத்துறையின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநரான ப.அருண்குமார் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 154 பக்கங்கள் கொண்ட ‘Dice of Dreams' நூலை சர்வதேசப் பதிப்பகமான நோஷன் பிரஸ் டாட் காம் வெளியிட்டுள்ளது. இந்த நூல் ரூ.300 விலையில் முன்னணி புத்தகக் கடைகளிலும், பிளிப்கார்ட், அமேசான் இணையதளங்களிலும் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE