உடுமலை: ‘வாருங்கம்மா வாருங்கம்மா... வந்து இங்கே கூடுங்கம்மா... வானவரும் தேவர்களும் வாழ்த்துரைக்க பாடுங்கம்மா... கூடுங்கம்மா கூடுங்கம்மா... கூடி கும்மி அடியுங்கம்மா... கூடும் சபை தனிலே கூச்சமின்றிப் பாடுங்கம்மா... பாடுங்கம்மா பாடுங்கம்மா... பவளமுத்து வாய் திறந்து, பண்புள்ள மாரித்தாயை பணிந்து கும்மி கொட்டுங்கம்மா, கொட்டுங்கம்மா கொட்டுங்கம்மா... குனிந்து கும்மி கொட்டுங்கம்மா... குணமுள்ள மாரித் தாயை கும்பிட்டுக் கொட்டுங்கம்மா, தட்டுங்கம்மா தட்டுங்கம்மா... தாளந் தவறாத படி தன்மையுள்ள மாரித்தாயை தாள் பணிந்து தட்டுங்கம்மா... வட்டம் சுற்றி வாங்களம்மா வரிசை வளையாமலே, வாஞ்சையுள்ள மாரித்தாயை வணங்கி கும்மி கொட்டுங்கம்மா...’
இவ்வாறாக பாடல் வரிகளுடன் கதையை சொல்லும் விதமாக குழுவாக இணைந்து ஆட்டமும், சலங்கை சத்தமுமாக பாடப்படும் கும்மி பாடல் உடுமலை சுற்றுவட்டாரத்தில் அரங்கேறி வருவது கிராமிய கலைகளுக்கு புத்துயிர் அளிப்பதாக உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கும்மியாட்டத்தை மீட்டெடுப்பதிலும், அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் உடுமலையைச் சேர்ந்த மகாலிங்கம் (45). இவர், உடுமலையை அடுத்த சாலைப்புதூர், வலசுபாளையத்தைச் சேர்ந்தவர்.
விவசாயி.சிறு வயது முதலே கிராமிய கலைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். கிராம கோயில் திரு விழாக்களில் ஆண்கள், பெண்கள் குழுவாக கும்மி ஆடுவதை கண்டு, அந்த கலையை கற்று தேர்ந்தார். தான் கற்ற இக் கலையை ஆர்வமுள்ளவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார். இதுவரை 48 இடங்களில் அரங்கேற்றம் நிகழ்த்தி இக்கலையை மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பரவ செய்து வருகிறார்.
இது குறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எனது சித்தப்பா தான் என் குரு. திருவிழாவின் போது கிராம கோயில்களில் கும்மியடி பாடல்களை அவர் மூலம் கற்றுக் கொண்டேன். அதன் பின் அண்ணமார் கதை பாடல் பாட தொடங்கினேன். விவசாய பணிக்கு ஒதுக்கிய நேரம் போக எஞ்சிய நேரம் வள்ளி கும்மியாட்ட கலையை பரப்புவதற்காக ஒதுக்கி வருகிறேன்.
» கீழடி, பொற்பனைக்கோட்டையில் தங்க அணிகலன் கண்டெடுப்பு
» சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது பொருநை நாகரிகம்: தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து
கடந்த 2000-ம் ஆண்டு முதல் இப்பணியை செய்து வருகிறோம். இக் கலையை யார் வேண்டுமானாலும் பழகலாம். குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே சொந்தமானது என கூறமுடியாது. மகாபாரத கதையில் வரும் ‘கதைக்குள் ஓர் கதையை’ வைத்து பாடல் பாடி வருகிறோம். சிறுவர், சிறுமியர் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்வார்கள். வள்ளி கும்மியில் 42 பாடல்கள் உள்ளன.
அதே எண்ணிக்கையில் உடல் வளைவுகளும் உண்டு. நான் 70 முதல் 80 ஆட்டங்களை கற்றுள்ளேன். வெறும் கால்களில் தான் நடனத்தை செய்ய வேண்டும். சலங்கை கட்டி கொண்டும் ஆடலாம். உறுமி, வாத்திய இசையுடன் பாடப்படும் பாடலுக்கு ஏற்ப ஆட வேண்டும். குழுவுக்கென தனித்த அடையாளம் வேண்டும் என்பதற்காக ஆண்களுக்கு பச்சை வேட்டி, வெள்ளை சட்டை, பச்சை நிற துண்டும், பெண்களுக்கு மஞ்சள், நீல நிற ஆடைகள் அணிந்தும் கலையை நிகழ்த்தி வருகிறோம்.
இதனை 15 பேர் முதல் 500 பேர் வரை கொண்ட குழுவாக இணைந்து இதுவரை 48 இடங்களில் அரங்கேற்றம் செய்துள்ளோம். 49-வது அரங்கேற்றம் மடத்துக்குளம், கேடி எல் மில்பகுதியில் வரும் சனிக்கிழமை நடத்தஉள்ளோம். 50-வது அரங்கேற்றத்தை 1500 பேர் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். பாரம்பரிய கலையை மீட்டெடுப்பதில் முனைப்புடன் செயல்படும் எங்களை போன்றவர்களை அரசு கலை பண்பாட்டு துறை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.
இதுபோன்ற கலைஞர்களிடம் சான்றுகள் கோருவது நியாயமில்லை. அனுபவம் மூலம் கற்று தேர்ந்துள்ளதால் கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறப்படும் சான்றுகளை ஏற்றுக்கொண்டு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறையினரும் இக்கலையை கற்று அதனை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்ல அது ஊக்கசக்தியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
16 hours ago
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
2 days ago
வாழ்வியல்
5 days ago
வாழ்வியல்
7 days ago
வாழ்வியல்
9 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
12 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
20 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago
வாழ்வியல்
24 days ago