29 ஆண்டுகளாக இலவச சிலம்ப பயிற்சி அளித்து வரும் புதுச்சேரி பழனிவேல்!

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர், இப்பகுதி இளைஞர்களுக்கு கடந்த 29 ஆண்டுகளாக இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறார்.

“நான் கற்றக் கலை என்னோடு முடிந்து போகாமல், பிறருக்கும் பயனளிக்கும் வகையில் தொடர வேண்டும். அதற்காகவே சிலம்பக் கலையை சொல்லித் தந்து பல வீரர்களை உருவாக்கி வருகிறேன்” என்று சொல்லும் பழனிவேல், இப்பகுதியில் இருந்து 13 சிலம்ப மாஸ்டர்களையும் உருவாக்கியிருக்கிறார்.

உடல் ஆரோக்கியம், மன தைரியம், நல்லொழுக்கம் இவைகளை அதிகரிக்க ஏதேனும் ஒரு விளையாட்டுப் பயிற்சி கற்பது மிக அவசியம். அதிலும் வீரத்துடன் கூடிய சிலம்பம் உள்ளிட்டப் பயிற்சியை கற்கும் போது இன்னுமே தைரியம், நல்லொழுக்கம் மேம்படும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அனுபவ உண்மை.

வேறுவேறு பண்பாட்டுக் கூறுகளின் தாக்கத்தால், சிலம்ப பயிற்சிக்கான ஆசிரியர்கள் குறைந்து வரும் சூழலில், அதைப் பேணி, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோர் வெகு சிலரே. அவர்களில் ஒருவர் இந்த பழனிவேல். சிலம்பத்திற்கென தனிக்கழகம் ஒன்றைத் தொடங்கி, கடந்த 21 ஆண்டுகளாக அதைச் செயல்படுத்தி வருகிறார்.

பழனிவேல்

பழனிவேல் சிலம்பம் கற்றுத் தரும் இடத்துக்கு சென்று பார்வையிட்டோம். இரு பாலினச் சிறார்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டிருந்தனர். அந்தச் சூழலுக்கு நடுவில் அவர் நம்மிடம் பேசினார். “என்னுடைய 14 வயதில் சிலம்பம் சுற்ற கற்றுக் கொண்டேன். தற்போது எனக்கு 50 வயதாகிறது. கடந்த 1994-ம் ஆண்டு எங்கள் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சியை தொடங்கினேன்.

தொடர்ந்து நாள்தோறும் மாலையில் இந்தப் பயிற்சியை அளித்து வருகிறேன். 2002-ல் மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற கலை வளர்ச்சி கழகத்தை உருவாக்கி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தேன். 21 ஆண்டுகளாக 45 நாட்கள் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமையும் இலவசமாக நடத்தி வருகிறேன்.

இந்த முகாம் மூலம் ஆண்டு தோறும் ஏறக்குறைய 100 பேர் வரை பயிற்சி பெறுகின்றனர். இதுவரை 13 மாஸ்டர்களை உருவாக்கியுள்ளேன். அவர்களும் இப்போது பலருக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர். மனதுக்கு நிறைவாக இருக்கிறது” என்றார். ஆண்டுதோறும் சிலம்பக் கலை விழா நடத்தி பயிற்சி பெறுவோருக்கு சான்று, விருதுகளும் அளித்து வரும் பழனிவேல், இந்திய சிலம்பாட்ட கழகத்துடன் இணைந்து 2002-ல் 6 நாடுகள் பங்கேற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

டெல்லி, அந்தமான், லட்சத்தீவு, தமிழகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளில் சிலம்ப பயிற்சியை செய்து வருகிறார். கடந்த 2015-ல் புதுச்சேரி அரசு இவருக்கு நாட்டுப்புற கலை மாமணி விருது வழங்கி சிறப்பித்தது. யூடியூப் போன்ற சமூக வலை தளங்களிலும் தன் பயிற்சியை பதிவிட்டு பயிற்சி அளிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE