கீழடி, பொற்பனைக்கோட்டையில் தங்க அணிகலன் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

திருப்புவனம் / புதுக்கோட்டை: கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் ஏற்கெனவே 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் முடிவடைந்தன. இதில் கண்டெடுக்கப்பட்ட பல ஆயிரம் தொல்பொருட்கள், கொந்தகையில் கீழடி அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்.6-ம் தேதி கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அகழாய்வு பணி தொய்வாக நடந்து வந்ததால் குறைவான தொல்பொருட்களே கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பொறுப்பேற்றதை அடுத்து, அகழாய்வுப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை கீழடியில் 9 குழிகள் தோண்டப்பட்டன.

இதில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை போன்ற விலங்கின உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனைகள், இரும்பு ஆணிகள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டன.

மேலும் 9 குழிகளில் நான்கில் 35 செ.மீ. ஆழத்தில் களிமண், சுண்ணாம்பு கலவையால் அமைக்கப்பட்ட தரைத்தளம் காணப்பட்டது. இந்த தரைத் தளம் 3 செ.மீ. முதல் 6 செ.மீ. தடிமன் கொண்டதாக இருந்தது. மேலும் இந்த தரைத்தளத்துக்கு கீழே 2 அடி ஆழத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் குவியலாக கிடைத்தன.

இது தவிர துளையிடப்பட்ட பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானை ஓடுகள், பானை குறியீடுகள் கிடைத்தன. இங்கு வெவ்வேறு நிலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட எலும்பு, கரி மாதிரிகள் அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

கொந்தகை அகழாய்வில் 10 மீ.க்கு 10 மீ. என்ற அளவில் ஒரு பெரிய குழி தோண்டப்பட்டு, இதுவரை 17 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், இன்னும் அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக தொல்லியல் துறை அதிகாரி தங்கதுரை தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை 8 இடங்களில் தலா 15 அடி நீள, அகலத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஒரு குழியில் 133 செ.மீ ஆழத்தில் 26 மில்லி கிராம் எடையுள்ள 6 இதழ் கொண்ட தங்க அணிகலன் கண்டெடுக்கப்பட்டுஉள்ளது. மற்றொரு குழியில் 160 செ.மீட்டர் ஆழத்தில் எலும்பு முனை கருவியும், வட்ட வடிவில் சிவப்பு நிற கார்னீலியன் சூதுபவள மணியும் கிடைத்துள்ளன.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: 26 மில்லி கிராம் எடையுள்ள 6 இதழ் கொண்ட தங்க அணிகலன் ஒன்று கிடைத்துள்ளது. சங்க காலத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த அணிகலன், மூக்குத்தி அல்லது தோடாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இங்கு முதன்முறையாக கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணம் இதுதான்.

இதேபோன்று, எலும்பு முனை கருவி, நூல் நூற்பதற்காக நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மேலும், கார்னீலியன் எனும் கல் குஜராத்தில் கிடைக்கக் கூடியது. கார்னீலியன் கல்லால் செய்யப்பட்ட சூதுபவள மணி, வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்த உள்நாட்டு வணிகத்தை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

இந்த தொல்பொருட்கள் அனைத்தும் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே 19 செ.மீட்டர் ஆழத்தில் செங்கல் கட்டுமானம் தென்பட்டது. தற்போது அனைத்துக் குழிகளிலும் இந்தக் கட்டுமானம் தெரிகிறது. மேலும், துளையிடப்பட்ட மேற்கூரை ஓடுகள், பல வண்ணங்களில் பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் விளக்கு, பீங்கான் ஓடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர்கள் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

18 hours ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

6 days ago

வாழ்வியல்

8 days ago

வாழ்வியல்

10 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

19 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

23 days ago

வாழ்வியல்

24 days ago

வாழ்வியல்

28 days ago

மேலும்