கார்களை ஸ்டார்ட் செய்யும் முன் கொஞ்சம் கீழே கவனிக்கவும் ப்ளீஸ் - ரத்தன் டாடா ட்வீட்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா சமூக வலைதளத்தில் மனிதம் சார்ந்த நெகிழ்ச்சியான செய்தி ஒன்றை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் அதன் கீழே ஏதேனும் விலங்குகள் உள்ளனவா என்பதை பார்க்குமாறு அதில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வீடற்ற வாயில்லா ஜீவன்களுக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

85 வயதான ரத்தன் டாடா, சுமார் 21 ஆண்டுகள் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு பெருகி இருந்தது. இப்போது அவர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தனது முதலீடுகள் மூலம் ஊக்கம் கொடுத்து வருகிறார்.

“இப்போது பருவமழை காலம் பெய்து வருவதால் தெருக்களில் வசித்து வரும் பூனைகள் மற்றும் நாய்கள் நம் கார்களுக்கு கீழ் தஞ்சம் அடைகின்றன. தஞ்சம் அடையும் அந்த வாயில்லா ஜீவன்களுக்கு காயங்கள் ஏற்படாமல் இருக்க கார்களை ஸ்டார்ட் செய்வதற்கு முன் அதைச் சரிபார்ப்பது அவசியம். நம் வாகனங்களுக்கு அடியில் அவை இருப்பது தெரியாமல் நாம் வாகனத்தை எடுத்தால் மிகக் கடுமையாக அவை காயமடையக் கூடும். சமயங்களில் உயிரிழக்கலாம். இந்த மாமழை காலத்தில் அவற்றுக்கு நாம் அளிக்கின்ற தற்காலிக புகலிடம் மனதுக்கு இதம் அளிக்கும்” என தனது ட்வீட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE