மூதாட்டியின் குடிசை வீட்டுக்கு மின் இணைப்பு கிடைக்க உதவி: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்டம், கேரி கிராமத்தில் நூர்ஜஹான் (70) என்ற விதவை மூதாட்டி தனியாக வசிக்கிறார். அவரது மகன் தனது குடும்பத்துடன் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கிறார். படிப்பறிவு இல்லாத இவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மூதாட்டியின் சிறு குடிசைக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்காக மூதாட்டி நூர்ஜஹான் பலரிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், புலந்த்ஷெஹர் மாவட்ட ஏசிபியான அனுக்கிரிதி சர்மா கடந்த ஜுன் 26-ல் கேரி கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அந்தக் கூட்டத்திற்கு சென்ற மூதாட்டி, ஐபிஎஸ் அதிகாரியான அனுக்கிரிதியிடம் தனது குடிசைக்கு மின் இணைப்பு பெற்றுத்தரும்படி கோரினார். மின்சார அலுவலகத்தில் கேட்க வேண்டியதை காவல்துறை அதிகாரியிடம் நூர்ஜஹான் கேட்டதை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர்.

எனினும், மனுவை பெற்ற அதிகாரி அனுக்கிரிதா, சம்பந்தப்பட்ட மின் அலுவலகத்திடம் போனில் தொடர்பு கொண்டு மூதாட்டிக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து மின்சாரத் துறையினர் உடனே செயல்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் மூதாட்டியின் குடிசைக்கு மின் இணைப்பு அளித்தனர். அப்போது வீட்டுக்கு ஏசிபி அனுக்கிரிதியும் சென்று, மூதாட்டியை வியப்பில் ஆழ்த்தினார். இத்துடன் தனது செலவில் மூதாட்டிக்கு மின்விசிறி ஒன்றை பரிசாக அளித்தார்.

அப்போது நெகிழ்ச்சி அடைந்த மூதாட்டி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவரை ஏசிபி அனுக்கிரிதி கட்டி அணைத்து தேற்றினார். அனுக்கிரிதிக்கு கிராம மக்கள் நன்றி கூறினர். இந்த நெகிழ்வான காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஏசிபி அனுக்கிரிதி. இது உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவி அதிகாரி அனுக்கிரிதிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் இளம் ஏசிபி அனுக்கிரிதி சர்மா கூறும்போது, “எங்கள் முதல்வர் யோகியின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு உதவுவது அரசு அதிகாரிகளின் கடமையாகும். அதிலும்வயதான இந்த மூதாட்டி தனித்து வாழ்வதால் என்னால் முடிந்த உதவியை செய்தேன்” என்றார்.

இதுபோல், அதிரடியான நடவடிக்கைகளை, உ.பி.யின் 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அனுக்கிரிதி செய்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன் அவர், ‘காவல்துறை எனது நண்பன்’ எனும் பெயரில் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று எந்த பிரச்சினையானாலும் காவல் துறையினரிடம் தயங்காமல் கூற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரை சேர்ந்த அனுக்கிரிதி, கொல்கத்தாவின் இந்திய தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். பிறகு அமெரிக்காவின் ரைஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த இவர், குடிமைப்பணி அதிகாரியாகி பொதுமக்களுக்கு உதவ விரும்பினார். எனவே அமெரிக்கக் கல்வியை பாதியில் விடுத்து ஐபிஎஸ் அதிகாரியாகி விட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE