‘ஹலோ’ சொல்லி அழைத்தால் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் மதுரை மருத்துவர்

By என்.சன்னாசி

மதுரை: பொதுவாக ஒவ்வொருவருக்கும் மருத்துவம் என்பது அத்தியாவசிய தேவையாகி விட்டது. கரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவை அனைவராலும் உணரப்பட்டது. அந்த நேரத்தில் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.

கரோனா காலத்தில் மதுரையில் தொற்று பாதித்தவர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்தவர் மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுவாமி நாதன் (34). தற்போதும் அப்பணியை தொடர்ந்து செய்கிறார். இதற்கென ஒரு குழுவை ஏற்படுத்தி வாகனம் ஒன்றையும் தயார் செய்து மருத்துவப் பணி செய்கிறார்.

நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்காமல் வாகனத்துக்கு அடிப்படை செலவுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு காலை, மாலையில் நடமாடும் மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்கிறார்.

இது குறித்து மருத்துவர் சுவாமி நாதன் கூறியதாவது: 2012-ல் எம்பிபிஎஸ், 2015-ல் எம்.இ.எம் (அவசர கால சிகிச்சை நிபுணர்) முதுநிலை படிப்பும் முடித்தேன். எல்லீஸ் நகர் பகுதியில் சிறியளவில் கிளினீக் நடத்துகிறேன். 2019-ல் கரோனா நேரத்தில், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட முதியோருக்கு வீடுகளில் சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கினேன்.

இதன் மூலம் 800-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வயதானவர்கள், பெண்கள், வாகன வசதியில்லாதவர்களுக்கு வீடுகள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சிகிச்சை அளிக்கிறேன். சுமார் 50 கி.மீ. சுற்றளவிலுள்ள ஊர்களுக்கு செல்வேன். அருப்புக்கோட்டை, மானாமதுரை, நத்தம் வரை செல்வோம்.

மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோர் போன் செய்து பதிவிடுவர். தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 12, மாலை 3.30 மணி வரை செவிலியர் உட்பட 6 பேர் குழுவுடன் ‘ ஹவுஸ் கால் ’ சிகிச்சைக்கு செல்வோம். எங்களது சிகிச்சைக்கு நோய் கட்டுப்படவில்லையெனில் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றும் சிகிச்சை அளிப்போம்.

ஈசிஜி, சர்க்கரை அளவு, ரத்த மாதிரி சோதனை எடுக்கப்படும். இதற்கான மருத்துவ உபகரணங்களுக்கு தனிக்கட்டணம் இல்லை. தேவையெனில் மேல் சிகிச்சைக்கும் உரிய உதவிகளை செய்வோம். இதற்காக கூடுதல் கட்டணம் பெறுவதில்லை. தவிர்க்க முடியாத வகையில், நோயாளி உயிரிழக்க நேரிட்டால் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளித்துள்ளோம். இது தவிர, இலவச மருத்துவ முகாம்களும் நடத்துகிறோம். வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தை, எனது மனைவி கோமதி ஒருங்கிணைக்கிறார். தாயார் கங்கா, மாமனார் சந்திரசேகர் ஆகியோர் ஊக்கப்படுத்துகின்றனர்.

கிராமப்புற மக்களுக்கு மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சேவையை ஆத்ம திருப்தியுடன் தொடர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE