ஆண்டிபட்டி அருகே தர்ம சாஸ்தா கோயிலில் பிரசித்தி பெற்ற ‘எறி காசு காணிக்கை’

By என்.கணேஷ்ராஜ்

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மாவட்ட எல்லையான கணவாய் பகுதியில் தர்மசாஸ்தா கோயில் அமைந்துள்ளது. ஊர்க்காவல் தெய்வமாக போற்றப்படும், இந்த அய்யனார் கோயில் பிரசித்தி பெற்றது. ஆரம்பத்தில் ஒத்தையடிப் பாதையாகவும், ஒருவழிப் பாதையாகயாகவும் இச்சாலை இருந்தபோது மாட்டு வண்டிகளே இப்பகுதியை அதிகம் கடந்து வந்தன. பருத்தி, நவதானியம் உள்ளிட்டவை தேனிக்கு மாட்டு வண்டிகளில் அதிகளவில் கொண்டு வரப்பட்டன.

இக்கோயிலின் முன்புள்ள சாலை வளைவாகவும், ஏற்றத்தன்மையுடன் அமைந்து இருந்ததால் பளு ஏற்றிய வண்டிகளை இழுப்பதில் மாடுகளுக்கு பெரும் சிரமம் இருந்தது. ஆகவே இக்கோயில் பகுதிக்கு வந்ததும் மாடுகளுக்கு ஓய்வு அளிப்பர். தாங்களும் களைப்பாறிய பிறகே மீண்டும் பயணத்தைத் தொடர்வர்.

இதனால் இக்கோயில் ஆரம்பத்தில் வண்டி சாஸ்தா என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க பலரும் நாணயங்களை காணிக்கையாக வழங்கி விட்டுச் சென்றனர். காலப்போக்கில் வண்டி சாஸ்தா என்ற பெயர் தர்மசாஸ்தா என்று பெயர் மாற்றம் கண்டது. 1957-ல் சிறிய கோயிலாக இருந்தநிலையில், 1978-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இப்பகுதியைக் கடந்து செல்லும் வாகனங்களின் ‘காப்பானாக’ விளங்குகிறார் என்பது பலரது நம்பிக்கை. இதனால் பலரும், இக்கோயில் முன்பு தங்கள் வாகனங்களை நிறுத்தி தர்ம சாஸ்தாவை வழிபட்டு செல்கின்றனர். பேருந்துகளில் செல்பவர்கள் பலரும் காசுகளை காணிக்கையாக வீசிவிட்டு செல்கின்றனர். தெரிந்தவர்கள் யாராவது இக்கோயிலை கடந்து செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், எறிகாசுகளை அவர்களிடம் கொடுக்கும் வழக்கம் இன்றும் உண்டு.

இதனால் வாகனங்கள் கடக்கும்போது, காசுகள் தரையில் விழும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். இந்த காசுகள் ஏலதாரர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இக்கோயில் திருவிழா, ஆடி 18-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படும். பலரும் கிடா, சேவல் வெட்டி அன்னதானம் வழங்குவர். பலரும் முடி காணிக்கை, காது குத்துதல் உள்ளிட்ட தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளையும், இக்கோயிலில் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த சாஸ்தா கோயில் மீது அரசியல்வாதிகளுக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. பல்வேறு அரசியல் மாற்றங்கள், கூட்டணி, பதவி உயர்வு, கட்சியில் குழப்பம் போன்ற தருணங்களில் சாஸ்தாவை வழிபட்டுச் செல்கின்றனர். புதிய வாகனம் வாங்கும் பலரும் குடும்பத்துடன் இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்வதும் வழக்கம்.

வேட்டைநாய் முன்னே செல்ல குதிரையில் கம்பீரமாக அமர்ந்து, சாட்டையை சுழற்றிய நிலையில் அருள்பாலிக்கும் சாஸ்தா தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது. குறிப்பாக, எறிகாசு காணிக்கை என்பது வேறெந்த கோயிலையும்விட சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. இக்காணிக்கைகளை சேகரிப்பதற்காக பகலில் இருவரும், இரவில் 2 ஊழியர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் நீண்ட குச்சியில் காந்தத்தை இணைத்து காசுகளை சேகரிக்கின்றனர்.

இதுகுறித்து கோயில் பூசாரி பரமசிவம் கூறுகையில், சங்க காலத்தில் அய்யனாரின் அம்சமாக சாஸ்தா வழிபாடு இருந்துள்ளது. ஊர்காக்கும் தெய்வமாக, பாதுகாப்பான போக்குவரத்துக்கு அருள்பாலிக்கும் தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE