“நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஆகாஷவாணி செய்தி அறிக்கை...” என்ற குரலை வானொலி நேயர்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது. இதுபோன்று பல வானொலி நிகழ்ச்சிகளின் குரல்களை நேயர்கள் மறந்திருக்க முடியாது. சென்னையில் முதல் முறையாக 1938-ஆம் ஆண்டு ஆல் இந்தியா ரேடியோ நிறுவப்பட்டது. அன்று தொடங்கி 85 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால், இன்னமும் அதன் சுவாரசியம் குறையவில்லை.
வானொலி எல்லாம் இப்போது யார் கேட்பார்கள் என்று கேட்கலாம்... ஆனால், நம்மில் பலர் தனது கைபேசியில் உள்ள பாடல் செயலிகள் மூலம் பாடல்கள், செய்திகள் கேட்கிறார்கள். இதுவும் ஒருவகை வானொலி வடிவம்தான். வானொலி என்று அறியாமலே வானொலியை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போது இருக்கும் காட்சி ஊடகத்தை பார்க்கும்போது கண் சார்ந்த பல பிரச்சினைகள் வரலாம். ஆனால், இதற்கு நேர்மாறானது ரேடியோ. உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், நீங்கள் செய்யும் வேலைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ரேடியோவை உங்களால் கேட்டு மகிழ முடியும் அல்லவா?
சரி, இந்த ரேடியோ கேட்டதனால் வாழ்க்கையே மாறியவர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அப்படி ஒருவரைதான் சமீபத்தில் நான் சந்தித்தேன். மைலாப்பூர் பட்டாபி... நிச்சயம் ரேடியோ நேயர்களாக இருந்தால் மயிலாப்பூர் பட்டாபி என்ற பெயரை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். கடந்த 40 வருடமாக உள்ளூர் மற்றும் வெளிநாடு சார்ந்த வானொலிகளில் அறிவுத்திறன் போட்டிகள், கருத்துக்கள் அனுப்பி பரிசுகள் வாங்கி வருகிறார். தனது ரேடியோ அனுபவத்தை அவர் மலர்ந்த முகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...
”என் சிறு வயதில் என் குடும்பம் கபாலிஸ்வர் கோயிலில் தேங்காய் பழம் கடை வைத்திருந்தது. அப்போது வானொலி பயன்படுத்த வேண்டும் என்றால் தபால் நிலையம் சென்று பணம் செலுத்தி கேட்க வேண்டும். அந்த நேரத்தில் எனக்கு என் அண்ணன் வானொலியை பற்றி அறிமுகம் செய்து வைத்தார். அந்த சமயங்களில் சென்னை வானொலி மிகவும் பிரபலமாக இருந்தது. அதில் வந்த நிகழ்ச்சிகள் பாப்பா மலர், நேயர் விருப்பம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தது. இதில் நேயர் விருப்பம் நிகழ்ச்சி தபால் கடிதம் மூலம் நமக்கு பிடித்த பாடல் எழுதி அனுப்பி வைத்தால் அந்நிகழ்ச்சியில் நமது பெயரை குறிப்பிட்டு பாடலை ஒலிப்பரப்பு செய்வார்கள். எனது பெயர் வானொலியில் ஒலிக்க கேட்டது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது. அதேபோல் ஞாயிற்றுகிழமை ஒலிச் சித்திரம் நிகழ்ச்சியும் மிகவும் அருமையாக இருக்கும்.
» சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரூ.195 கோடியில் அமைகிறது புதிய மேம்பாலம்
» ரவுடி வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
நான் முதலில் உள்ளூர் பண்பலை வானொலி மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். வானொலி நேயர் வட்டம் என்று ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மெரினா கடற்கரையில் கூடுவார்கள். அப்போது என்னிடம் உலகம் முழுவதும் உள்ள வெளிநாடு வானொலியை பற்றி தங்க. ஜெய்சக்திவேல் (சென்னை பல்கலைகழகம் இதழியல் துறை துணை பேராசிரியர் ) கூறினார். அதன்பிறகு உலக முழுவதும் உள்ள வானொலி நிகழ்ச்சிகளை கேட்க ஆரம்பித்தேன். சென்னை வானொலியின் எப்.எம் ரெயின்போ புதிய நிகழ்ச்சிகள், விவித் பாரதி தமிழ் 102.3 எப்.எம்-ன் நீங்களும் ஒரு சிறந்த பாடகர் ஆகலாம் சீன வானொலி நிகழ்ச்சிகளும், பிபிசி தமிழ், தைவான் வானொலி என பல்வேறு நிகழ்ச்சிகளை விரும்பி கேட்டு வருகிறேன்.
1998-ல் இருந்து 2004 வரைக்கும் சென்னை வானொலியில் ‘ சினிமா நேரம்’ என்ற நிகழ்ச்சியில் வாரம் இரண்டு நேயர்களை திரை புதையல் என்று போட்டி வைத்து தேர்ந்தெடுப்பார்கள். அதில் பல பரிசுகளை வென்றிருந்தேன்.
திரைத் தென்றல் என்ற நிகழ்ச்சியில் நானே தயாரித்த 15 பாடல்களை தொகுத்து வழங்கினேன். அதை பாராட்டி அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் தனது சொந்த செலவில் வானொலியை பரிசாக எனக்கு வழங்கினார். 1999-ல் வண்ணமய மாலை என்ற நிகழ்ச்சியில் கடிதம் எழுதி சிறப்பு நேயராக தேர்ந்தெடுத்தார்கள். அப்போது என்னை 1 மணிநேரம் பேட்டி எடுத்தார் ’இன்றொரு தகவல்’ தென்கச்சி கோ.சுவாமிநாதன். மேலும், என்னைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் 250 ரூபாய் காசோலையும் தந்தார். இந்தப் பரிசு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
இதேபோல் 2011-ல் சீன வானொலி அறிவுத் திறன் என்ற போட்டியை வைத்தார்கள். அதில் இந்தியாவிலே சென்னையில் சிறப்பு நேயராக தேர்ந்தெடுத்து அந்நாட்டுடைய கலாச்சார உடையை எனக்கு இலவசமாக அனுப்பி வைத்தார்கள். இப்படி பல வானொலி அமைப்புகள் என்னை பாராட்டி எண்ணற்ற சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.
இன்று இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றான கைபேசியில் ஏராளமான ரேடியோ நிகழ்ச்சிகளை இலவசமாக கேட்கிறார்கள் அதுவும் இதழியல், தொடர்பியல் படிக்கின்ற மாணவர்களுக்கு மிகவும் வானொலியில் ஆர்வமாக இருக்கின்றனர் . இப்போது வரும் வானொலி நிகழ்ச்சிகள் பல மொழிகளில் வருகின்றது குறிப்பாக சென்னை வானொலியில் நியூஸ் ஆன் ஏர் (news on air) என்ற செயலி உள்ளது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நாம் நிகழ்ச்சிகளை கேட்கலாம். அதேபோல் மேற்கத்தியா கலாசாரம், பிடித்த பாடகர் பாடிய பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் வருகிறது. அனைவரும் இன்றும் வானொலியை வேறு வடிவமாக கேட்டுத்தான் வருகிறார்கள். நான் படித்தது 10-வதுதான். ஆனால் எனக்கு அறிவுவை வளர்த்து கொள்ள, புதிய தகவல் தெரிந்து கொள்ள எனக்கு நண்பனாக வானொலி இருந்தது”என்று விடை பெற்றார்.
நூற்றாண்டுகளாக நம்மிடம் பயணித்த வானொலி அழிந்துவிடவில்லை. தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு வேறு ஒரு வடிவத்தில் உருமாறி இன்றும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 day ago
வாழ்வியல்
8 days ago
வாழ்வியல்
11 days ago
வாழ்வியல்
13 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
15 days ago
வாழ்வியல்
22 days ago
வாழ்வியல்
23 days ago
வாழ்வியல்
28 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
29 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
30 days ago
வாழ்வியல்
1 month ago
வாழ்வியல்
1 month ago