எங்கள் பிரச்சினைகளை அரசு காது கொடுத்து கேட்குமா? - அரசு மருத்துவர்கள் ஆதங்கம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழகத்தில் மருத்துவத் துறை என்பது பொது சுகாதாரம், மருத்துக் கல்வி என இரு பிரிவாகச் செயல்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு, இஎஸ்ஐ மருத்துவ மனைகள் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிலும், அரசு மருத்துவக் கல்லூரிகள், அதன் மருத்துவ மனைகள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழும் உள்ளன.

அரசு மருத்துவர்கள் பணியில் சேரும்போது ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் பெறுகிறார்கள். அதன்பிறகு, கிடைக்கக்கூடிய பதவி உயர்வு அரசு மருத்துவர்களுக்கு கிடைப்பதில்லை என்று குமுறுகின்றனர். மேலும் பணிச்சுமை, நிர்வாக நெருக்கடி, மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறையால் நோயாளிகளுடன் தினமும் போராடுவதாகவும் அரசு மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: பணி நேரம்போக தனியார் மருத்துவனைகளில் பணிபுரிந்து அதிகம் சம்பாதிக்கும் மருத்துவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான். அதற்கு இரு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர்கள் பணியில் உண்மை இல்லாமல் இருந்து கிடைக்கும் நேரத்தில் வருமானத்தை ஈட்டுகிறவராக இருக்கலாம்.

இல்லாவிட்டால் பணி நேரம் போக தனது குடும்பம், ஆரோக்கியத்துக்குச் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தி வருமானத்தை ஈட்டக்கூடிய அதே நேரத்தில், தனது உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிற நபராக இருக்கலாம். பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் தங்கள் பணிகளைச் செய்துவிட்டு கிடைக்கிற நேரத்தில் குடும்பத்துக்காகவும், சமூகத்தில் கவுரவத்தைத் தக்க வைக்கவும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்.

இவர்கள் அதிகபட்சம் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம். மருத்துவர் பணி என்பது நோயாளிகளைப் பரிசோதிப்பது, மருந்துச் சீட்டு எழுதிக் கொடுப்பது மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால், யதார்த்தம் வேறு. மருத்துவர்கள் சிகிச்சைக்கு வரக்கூடியவர்களைக் கையாளுவது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது, நோயாளிகளின் எரிச்சல், கோபம், ஆதங்கம் என அனைத்தையும் சமாளிக்க வேண்டி உள்ளது.

எதற்கெடுத்தாலும் திரளும் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவர்களைச் சுதந்திரமாக சிகிச்சையளிக்க விடாமல் நெருக்கடி கொடுப்பார்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை மட்டுமின்றி மருத்துவ மாணவர்களுக்கு கல்வியும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

நோயாளிகளால் வரக்கூடிய பிரச்சினைகள், நிர்வாகச் சிக்கல், மருத்துவ மாணவர்களால் வரக்கூடிய பிரச்சினைகள் என அனைத்தையும் சமாளிக்க வேண்டி உள்ளது. இதுதவிர தனிப்பட்ட உடல் ஆரோக்கியம், குடும்பம் பிரச்சினைகள் உள்ளன. ‘டீன்’களை பொருத்தவரை சிகிச்சைக்கு வரும் மக்களை திருப்திப் படுத்துவதும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளைச் சமாளிப்பதிலுமே நேரம் போகிறது.

பிரச்சினைகளில் மருத்துவர்களுக்கு ஆதரவாக நிற்பதில்லை. அரசு மருத்துவர்களைப் பாதுகாக்க சங்கங்கள் உள்ளன. பெரும்பாலான மருத்துவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்றால், சங்கங்களின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டு அதில் சேருவதும் கிடையாது. நியாயமான செயல்களுக்குச் சங்கத்தோடு நின்று போராடுவதும் இல்லை.

கிட்டத்தட்ட 90 சதவீத மருத்துவர்கள் சங்கத்திடம் தொடர்பு இல்லாமல் உள்ளனர். இந்த ஒற்றுமையின்மையும், மருத்துவர்களுக்கான நியாயம் கிடைக்காமல் போவதற்கு முக்கியக் காரணமாகிறது. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் இல்லாவிட்டால் நோயாளிகளிடம் `மாத்திரை இல்லை' என்று சொல்லக் கூடாது என்கிறார்கள்.

அப்படி என்றால் மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும். மருந்து மாத்திரை இல்லையென்றால் இன்சூரன்ஸில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அரசு நிர்வாகம் கடந்து செல்கிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத செயல்களைச் செய்ய வேண்டி உள்ளது. திமுக அரசு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தது.

ஆனால், இதுவரை செய்யவில்லை. தகுதியான ஊதியம் வழங்கிவிட்டு தனியார் மருத்துவமனைப் பணிக்கு செல்லக்கூடாது என்று அரசு தடை விதித்தால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில்தான் மருத்துவர்கள் உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், ‘‘நோயாளிகள் வருகை அடிப்படையில் தமிழகம் முழுவதும் மருத்துவ மனைகளில் சுமார் 50 ஆயிரம் மருத்துவர்க வேண்டும். ஆனால், 20 ஆயிரம் பேர்தான் பணிபுரிகிறார்கள். அதனால், பணிச்சுமை அதிகமாக உள்ளது. ஆரம்ப சுகாதாரநிலையங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாகப் பணிபுரிகிறார்கள்.

10 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர பணி என்பது மிகவும் துயரமானது. மருத்துவர்கள் 24 மணி நேரம் பணி பார்க்கும் போது ரூ.300 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதை ரூ.1000-மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறுகிறோம். சரியான நேரத்தில் பணி உயர்வு, தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE