அர்ப்பணிப்பின் மறுபெயர் செவிலியர் சுகந்தி - குடியரசுத் தலைவர் விருது வழங்கி கவுரவிப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது நேர்மைக்கும் அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் கிடைத்த பரிசு என்று தமிழகத்திலிருந்து விருது பெற்ற ஒரே நபரான கிராம செவிலியர் சுகந்தி தெரிவித்தார்.

புது டெல்லியில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த சேவைக்கான பிளாரன்ஸ் நைட்டிங் கேல் விருது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது. இவ்விருதுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இவ்விருது பெற்ற ஒரே செவிலியர் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி (49) பெற்றுள்ளார்.

செவிலியர் சுகந்திக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘பழங்குடியின தாய்மார்களை அரசு மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவம் பார்க்கச் செய்து தாய்-சேய் இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்திய தங்களை பாராட்டுகிறேன். பெயரிலேயே ‘விருது’ அடங்கியுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். தங்கள் சேவை மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

27 ஆண்டுகளாக...: ராஜபாளையம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த கனகராஜ் மனைவி சுகந்தி. இவர், ஆலங்குளம் அருகே உள்ள ஆர்.ரெட்டிய பட்டி கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார். 1996-ல் செவிலியராகப் பணியில் சேர்ந்தவர், தொடர்ந்து 27 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்காக சேவை செய்து வருகிறார். இவரது சிறந்த சேவையை பாராட்டி குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து செவிலியர் சுகந்தி கூறியதாவது: நான் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலயத்துக்குட்பட்ட பெருமாள் தேவன்பட்டியில் கிராம சுகாதார செவிலியராக உள்ளேன். இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அதனால் ராணுவ கிராமம் என அழைக்கப்படுகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு சேவைபுரிவதில் பெருமைப்படுகிறேன்.

இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறேன். இப்பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்த பலர் உள்ளனர். தொடர்ந்து பல நாட்கள் ஒரே இடத்தில் இவர்கள் இருப்பதில்லை. ஆனாலும், அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து தொடர்ந்து அவர்களை கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறேன்.

அதுமட்டுமின்றி, மலைவாழ் மக்களும் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளும் எனது கண்காணிப்பில் உள்ளனர். ஒரு பெண் கர்ப்பமான 45-வது நாள் முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரை அவர்களுக்கு தடுப்பூசி, மருந்து, மாத்திரைகளை விடுபடாமல் கண்காணித்து வழங்குவது, குழந்தை பிறந்த பின்னரும் குழந்தையின் எடை, உயரம், ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பது எனது முக்கிய பணியாக இருந்து வருகிறது.

எனது 27 ஆண்டுகால பணியில், எனது தொடர் கண்காணிப்பால் பிரசவத்தின் போது இறப்பு என்பது ஒன்றுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, கரோனா காலத்திலும் கூட கர்ப்பிணிகளை ஆட்டோ வைத்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்துள்ளேன். 25 குடும்பங்களுக்கு தேவையான அரிசி வாங்கிக் கொடுத்து வந்தேன்.

இதற்கு எனது கணவர் மிகுந்த உறுதுணையாக இருந்தார். மேலும், அவசர காலங்களில் விருதுநகர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் அனுப்பிவைக்கப்பட்டால் அவர்களுடனே நானும் செல்வேன். நல்லபடியாக குழந்தை பிறந்த பின்புதான் நான் ஊருக்குத் திரும்புவேன். குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றது நேர்மைக்கும் அர்ப்பணிப்புடன் செய்த சேவைக்கும் கிடைத்த பரிசாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 day ago

வாழ்வியல்

2 days ago

வாழ்வியல்

3 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

4 days ago

வாழ்வியல்

7 days ago

வாழ்வியல்

9 days ago

வாழ்வியல்

11 days ago

வாழ்வியல்

13 days ago

வாழ்வியல்

14 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

22 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

வாழ்வியல்

26 days ago

மேலும்